New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

திரிபுர சுந்தரி (கருணையின் வடிவம்)

 

 லக்ஷ்மி ரமணன்

 

ன்றைய உலகம் மிகவும் மாறிவிட்டது. கணினியும் கைப்பேசியும் ஆதிக்கம் புரியும் மனித வாழ்க்கை மிகவும் வேகமானதாகிவிட்டது. விஞ்ஞான யுகத்தில் மனிதனது செயல்படும் திறமையும், புதிய கண்டு பிடிப்புகளும் பிரமாதமானவை. அதைவிட அற்புதமானது தெய்வத்தின் சக்தி. அதை உணர்ந்து கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்கிறதில் தீவிர நம்பிக்கை கொண்டு தலைமுறைகளாய் மக்கள் நடத்தி வரும் வழிபாடுகளும், திருவிழாக்களும் ஏராளமானவை. அவற்றை ஏற்று அவர்கள்மீது கருணை பொழிந்து பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அன்னையாக தேவி விளங்கும் திருத்தலங்கள் எண்ணிலடங்கா. அவற்றில் ஒன்று சக்தி பீடங்களில் ஒன்றான திருத்தலமான திரிபுர சுந்தரி கோவில்.

இது ராஜஸ்தானில் மஹி நதிக்கரையை அடுத்துள்ள பிரதேசமான பான்ஸ்வாடா (Banswada) விலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தல்வாடாவில் அமைந்துள்ளது.

அடர்ந்த மரங்கள் கொண்ட பசுமைப் பிரதேசம் இயற்கையின் ரம்யத்தை உணர்த்தும் சூழ்நிலை. ஆதிநாட்களில் சக்தபுரி, விஷ்ணுபுரி, சிவபுரி என்கிற மூன்று கோட்டைகள் இந்த இடத்தில் இருந்தனவாம். அதனால் இங்கு எழுந்தருளியுள்ள தேவியின் பெயர் திரிபுரசுந்தரி என்கிறார்கள். தேவியை இங்கு துர்த்தியமாதா என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கோயிலுக்கான இதிகாசப் பின்னணியையும் பார்க்கலாம்.

தாட்சாயணியின் தந்தை தட்சன் மாபெரும் யக்ஞம் ஒன்றை விமரிசையாக நடத்த திட்டமிட்டான். தன் மருமகன் சிவபெருமானை மட்டும் விட்டுவிட்டு மூவுலகிலுள்ள அத்தனை பெரும் புள்ளிகளையும் தேவாதி தேவர்களையும் அழைத்தான். தன் மகள் தாட்சயணியையும் அழைக்கவில்லை.

அவளோ பாசமிக்கவள். அதைப் பொருட்படுத்தாமல் யக்ஞத்துக்கு வந்து தன் கணவர் அதைச் சிறப்பிக்க வேண்டும் என்று அழைத்தாள். பெருமான் வர மறுத்ததுடன் அழைப்பின்றி செல்லுவது உசிதமில்லை என்று தாட்சாயணியையும் தடுத்தார்.

அவள் கேட்கவில்லை.

கைலாயத்திலிருந்து யக்ஞம் நடந்த இடத்துக்குக் கிளம்பிவிட்டாள்.

ஆனால், அங்கே தன் தந்தை தட்சன் வந்திருந்தவர்கள் அனைவர் முன்னிலையிலும் கணவர் சிவபெருமானை நிந்தித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் யக்ஞ குண்டத்திலேயே குதித்து உயிரைத் தியாகம் செய்தாள். அப்போது அவள் உடம்பின் பகுதிகள் பூமியில் ஐம்பத்தோரு இடங்களில் சிதறி விழ அங்கெல்லாம் தேவியின் திருத்தலங்கள் தோன்றியதாகவும், அவை சக்தி பீடங்கள் என்று சிலாக்கியமாகக் குறிபிடப்படுவதாகவும் தெரிகிறது. தேவியின் தலைப்பகுதி தெறித்து விழுந்த இடம்தான் தவ்வாடாவிலுள்ள மகத்துவம் வாய்ந்த திரிபுரசுந்தரி கோவில்.

ஆதியில் அரசர் கனிஷ்கரால் கட்டப்பட்ட கோயில் இங்கு இருந்ததாம். பதினொன்றாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட கோயில் அலாவுதீன் கில்ஜியின் படை எடுப்பில் சிதைந்ததாம்.

மூலவ விக்கிரகம் மட்டும் பின்னமாகாமல் எப்படியோ காப்பாற்றப்பட்டு, பிற்காலத்தில் அரச பரம்பரையினரால் புனருத்தாரணம் செய்விக்கப்பட்டு தேவியை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். 1977ல் தற்போதுள்ள கோயில் அப்போதைய முதல் அமைச்சராக இருந்த திரு. ஹரிதேவ் ஜோஷியின் முயற்சியால் கட்டப்பட்டது.

இந்தப் பிராந்தியத்தில் வாழும் பீல்கள் (Bhils) எனப்படும் பழங்குடியினருக்கு திரிபுரசுந்தரிதான் குல தெய்வம். நவராத்திரியில் துர்காஷ்டமியன்றும், தீபாவளியின் போதும் புத்தாண்டு சமயத்திலும் இங்கு நடக்கும் திருவிழாக்களில் இவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அழகான சிற்ப வேலைப்பாடுகளமைந்த நுழைவாயிலைக் கடந்து சில படிகள் ஏறி கோயிலை நோக்கிக் செல்லுகிறோம். அங்கே வாயிலில் இரு பக்கங்களிலும் மற்றும் த்வஜஸ்தம்பத்தருகிலும், கம்பீரமாக நிற்கும் பளிங்கிலான சிங்கங்கள் நம்மை வரவேற்கின்றன.

 

உள்ளே... தன் பதினெட்டு கரங்களில் கரும்புவில் அம்பு, வாள், தாமரை மொட்டு என்று அனைத்தையும் ஏந்தி சிம்ம வாஹினியாகக் காட்சி தரும் தேவியின் அருள்மிகு தோற்றம் நம் மனதில் பதிகிறது.

தேவியின் காலுக்கடியில் புதைக்கப்பட்டுள்ள சக்தி யந்திரத்தின் மகிமையால் இங்கே வந்து பிரார்த்தனை செய்து கொள்கிறவர்களின் அபிலாஷைகள் நிறைவேறுகின்றன என்பது மக்களின் நம்பிக்கை. இதுதவிர நாம் தரிசனம் செய்யும் விநாயகப் பெருமானும் நவ துர்க்கைகளும் பல்லாண்டுகளாய் சுடர்விடும் அகண்ட தீபமும் நம்மைக் கவருகின்றன. தேவியின் கிரகத்திற்கு மேல் தொங்கும் தங்கக் குடைகள் கருவறைக்கே தனியானதொரு அழகைத் தருகின்றன. வெளியே யக்ஞ சாலை உள்ளது.

பிரகாரத்தில் ஊன்றப்பட்டு நிமிர்ந்து நிற்கும் திரிசூலம் தீய சக்தகளை ஒழிக்க தேவியிருக்க பயமேன் என்கிற அருள்வாக்கைச் சொல்லாமல் சொல்லுகின்றன. நவராத்திரியின்போது நடக்கும் சிறப்புப் பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்கள் ஏராளமாக வருகிறார்கள். திரிபுர சுந்தரியை தரிசித்து வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தங்கள் அனுபவங்களை விவரிக்கையில நாம் சிலிர்த்துப் போகிறோம். மருத்துவர்கள் கைவிட்ட பின்னரும் தேவியின் கருணையால் உயிர் பிழைத்திருக்கிறார்கள். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கவலையில் மூழ்கியவர்களை அதிலிருந்து மீண்டு வந்த விதம், பயணத்தின்போது தங்களைத் தாக்க வந்த கொள்ளையர்களை அரூபவடிவில் அன்னை துரத்தியடித்த விதம், இன்னும் மகப்பேறின்றி தவித்த தம்பதிகள் மழலைச் செல்வத்தைப் பெற்று மகிழ்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

 

பக்தர்களின் நியாயமான எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றி வைக்கும் அருள்வடிவமாக திரிபுர சுந்தரி இங்கே காட்சி தருவதை தரிசிக்க வரும் மக்கள் கூடும் இந்தக் கோயிலில் எப்போதுமே உண்டு.