New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

தரமணி

 சினிமா விமர்சனம்

 
ரண்டு பக்கமும் நீர் பாய், நடுவில் குறுகலாகச் செல்கிறது நீண்ட சாலை. உலகமயமாக்கலில் சிக்க, முழுக்க கான்கிரீட் காடுகளாக மாறிப்போன அந்தச் சாலை, அங்கே அரும்புகிற ஒரு காதலும், அது எதிர்கொள்ளும் அழுத்தங்களும்தான் 'தரமணி'.

காலங்காலமாக 'கற்பு' என்ற பெயரில் பெண்கள்மீது திணிக்கப்பட்ட வன்முறையை வெளிப்படையாக விவாதத்துக்கு உட்படுத்துகிறது இந்தப் பெண்களின் சினிமா. ஒரு பெண்ணை எதைக்கொண்டு வீழ்த்த முடியாதபோது, அவளின் ஒழுக்கம் குறித்த கேள்விகளை முன்வைக்கும் ஆணாதிக்க அயோக்கியத் தனத்தைத் தயங்காமல் அம்பலப்படுத்துகிறது. அதற்காகவே இயக்குநர் ராமுக்கு ஸ்பெஷல் லைக்ஸ்!

'சிங்கள் மதர்'கள் பெருகிவரும் காலம் இது. இத்தகைய பெண்களை ஒருமுறையாவது 'ட்ரை' செய்து பார்க்கத் துடிக்ககிற ஆண்களுக்கு மத்தியில் காதலனிடம்கூட "காதலோ செக்ஸோ என் சாய்ஸ்தான்..." என்று நிமிர்ந்து நிற்கிற துணிச்சல் நாயகி தமிழ் சினிமாவுக்கே புதிது. ஓரினச் சேர்க்கையாளர்களையும் இயல்போடும் அவர்களுக்கான நியாயத்தோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

'அவள் அப்படித்தான்' மஞ்சுவுக்குப் பிறகு மறக்கவே முடியாத தமிழ் சினிமா நாயகிகள் பட்டியலில் 'ஆல்தியா ஜோசப்'பைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். பஞ்சரான ஆக்டிவாவில் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சியில் மட்டும்தான் 'ஆண்ட்ரியா' தெரிகிறது. அதற்குப் பிறகு ஆல்தியா மட்டும்தான் மனதில் பதிகிறார்.

கணவனைப் பற்றிய கேள்விகளைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன பெண்ணாக எரிச்சலை வெளிக்காட்டுவது; கெட்ட வார்த்தையைத் தன் அம்மா உட்பட எல்லோரிடமும் வாங்கிக்காண்டு கடப்பது. மகனுடைய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது; காதல் தோல்வியில் குடித்துக் குடித்து உருகுவது... எனத் தரமணியை ஒற்றை மனுஷியாகத் தாங்கி நிற்கிறார் நடிப்பு ராட்சசி ஆண்ட்ரியா.
 

ராமின் தாடி வைத்த மூன்றாவது நாயகன். நடிப்பதற்கான வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் வசந்த் ரவி.

ஆரம்பக் காட்சிகளில் தத்துவம் பேசி இயல்பாக இருக்கிற நாயகன், அதற்குப் பிறகு அத்தனை முட்டாள்தனமாக நடந்துகொள்வதும், பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்களை வேட்டையாடக் கிளம்புவதும் என நம்பகத்தன்மை இல்லாத அவருடைய பாத்திரப் படைப்பு சறுக்கல்.

சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் அஞ்சலி. எதையும் புன்னகையோடு கடக்க முயலும் அழகம் பெருமாள், புத்தகங்களையே துணையாக்கிக் கொண்டு வாழும் அசிஸ்டென்ட் கமிஷனர் மனைவி, ஆண்களை நாய்களைப்போல பாவிக்கிற அலுவலகத் தோழி, பாவங்களை எல்லாம் நாகூரில் கழுவத் துடிக்கும் நாயகனுக்கு வெளிச்சத்தைத் தரும் அந்த செல்போன் பெரியவர். கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் அந்தச் சுருட்டை முடிச் சிறுவன் என ராம் படைத்திருப்பது மனிதர்களின நூலகம்! கடைசி வரை முகமே காட்டாத 'வீனஸ்' வரை பாத்திரப் படைப்புகளில் அத்தனை ஆழம். "ஏன் சிகரெட் குடிக்கிறே? நீ ஒரு பையனுக்கு அம்மா!" "நீ கூடத்தான் ஒரு அம்மாவுக்குப் பையன்!" வசனங்கள் குறிப்பிடத்தக்க கூரான கத்திகள்.

நா. முத்துக்குமாரின் தமிழும் யுவனின் இசையும் இரண்டு புறாக்களைப் போல் சேர்ந்தபடி சிறகடித்துப் பறக்கின்றன. பல இடங்களில் வசனங்களால் நிரப்ப முடியாத மௌனங்களின் வலியை யுவனின் இசை நிரப்புகிறது. "ஒரு கோப்பை கொண்டு வா..." "பாவங்களைச் சேர்த்துக் கொண்டு" என நா. முத்துக்குமாரின் பாடல்வரிகள் ஒவ்வொன்றும் உணர்ச்சிக் குவியல்.

படம், நெடுகப் பறவைப் பார்வையில் பொறுமையாக நகரும் கேமரா. வீடுகளுக்குள் பதற்றத்தோடு அலைகிறது. முக்கியக் காட்சிகளில் நனைய வைக்கும் மழையும், மஞ்சள் விளக்காளியும் அனைத்தையும் பார்த்துகொண்டிருக்கிற புறாக்களும் என தேனி ஈஸ்வரின் கேமரா பல வித்தைகளை காட்டுகிறது. பொருள்களை வாரி அடுக்காமல் மினிமலிசம் காட்டியிருக்கும் குமார் கங்கப்பனின் கலை இயக்கம் நேர்த்தி.

தரமணியில் சில துருத்தல்களும் இருக்கின்றன. திருமண வாழ்வின் கசப்பில் சிக்கி அதிலிருந்து மீளும் ஆன்ட்ரியா ஏன் மீண்டும் அதே மாதிரியான சிக்கல்கள் நிறைந்த உறவுக்குள் நுழைகிறார்? "அடிச்சுத் திருத்த வேண்டியதுதான்" என்று அழகம்பெருமாள் தன் மனைவி குறித்துச் சொல்வது என்ன வகையான பெண்ணியம்... இப்படிக் கருத்தியல் ரீதியாகவே கேள்விகள் நீள்கின்றன.

உணர்வுகள், காட்சிகள் வழி கண்களுக்குள் விரியுபோது, காதுகளுக்குள் கதை சொல்லும் ராமின் குரல் அவசியமே இல்லாமல் ஒலிக்கிறது. ஏரி ஆக்கிரமிப்பு, பண மதிப்பிழப்பு குறித்த ஸ்டேட்டஸ்களைத் தவிர, மற்ற எல்லாம் இடையூறுகள்தான்.

தரமணியின் மனிதர்கள் எல்லோரிடமும் ஒரு குற்றவுணர்ச்சி இருக்கிறது. எல்லோருமே அதிலிருந்து மீளத் துடிக்கிறார்கள். மன்னிப்பைக் கோருகிறார்கள். எல்லோரிடமும் எஞ்சியிருக்கிற அடிப்படையான அறம் அவர்களைத் தொடர்ந்து விரட்டுகிறது. துரோகங்களையும் வெறுப்பையும் தாண்டி அத்தனை சுயநலமான வாழ்விலும், மன்னிப்பும் கருணையும் ஏதோ ஒரு கணத்தில் எல்லோரிடமும் சுரக்கன்றன.

அந்த அனுபவம்தான் தரமணி!

நன்றி : விகடன்