New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

சிவகுமாரின் பூக்கள்!

 

 பாக்கியம் ராமசாமி

 

ந்த சஷ்டிக் கவசம் நினைவில் இருக்கிற அளவுக்கு கீதை சுலோகங்கள் என் நினைவில் பதியவில்லை.

கீதையையும் சஷ்டிக் கவசத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

சின்ன வயதில் எதைப் படித்தாலும் நினைவில் பதிந்துவிடும். பெரியவனான பிறகு பதிய வைத்துக் கொள்ள மூளை சிரமப்படுகிறது. ஏன், மறுத்தே விடுகிறது.

ஔவையாரின் ’நெல்லுக் கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி’யை என் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் முழுமையாக சொல்லுவேன்.

எட்டு வயசில் படித்தது எழுபது நிறைந்த பின்னும் ஞாபகத்தில் உள்ளது. ஆனால் எழுபதில் சிவ நாமாவளியையோ வேறு கடவுளர் நாமாவளியையோ, (ஒரு 108 திருநாமங்களை) மனப்பாடம் செய்யப் படாத பாடு படவேண்டியிருக்கிறது.

கடகடவென்று யாரேனும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஒப்பித்தாரென்றால் கேட்டுப் பாருங்கள். ஏழு அல்லது எட்டு வயசிலேயே மனப்பாடம் பண்ணினதாகச் சொல்லுவார்.

மூளைக்கு ஏராளமான ஆற்றல் இருந்தாலும் ஞாபக சக்தி என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இளமையோடு இருந்துவிடுவதில்லை.

குறிப்பிட்ட ஆசாமியின் அத்தியாவசியத் தேவை எதுவோ அந்த அயிட்டங்களில் சிலதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொண்டு மற்றவற்றை மூளை மறந்துவிடுகிறது.

கம்ப்யூட்டர்கூட ’அதிகமான ஃபைல்கள் சேர்ந்து விட்டன. கொஞ்சத்தைக் குறையுங்கள்’ என்று நடுநடுவே கேட்கும். ஸெல் போனிலும் இந்த வேண்டுதல்கள் வரும்.

தனக்குத் தேவையில்லாதவற்றை பேராசையோடு சேர்த்து வைத்துக்கொள்ள மனித சுபாவம் நினைக்கிறது. ஆனால் யந்திர சுபாவமோ, ’அதிகமாக சுமத்தாதே!’ என்கிறது.

மனித உடலின் ஆற்றல் பற்றிய புள்ளி விவரங்கள் அடிக்கடி நமக்குக் கிடைக்கின்றன. ஒரு என்ஸைக்ளோபீடியாவில் உள்ள - விஷயங்களை மனித மூளையால் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள்.

யாராவது சுவையாக கடகடவென்று உபன்னியாசம் செய்தாலோ, புள்ளி விவரங்களுடன் அரசியல் பேச்சுப் பேசினாலோ அசந்து போகிறோம். அந்த மாதிரி நாமும் பேச முடியவில்லையே என்று ஏங்குகிறோம்.

படித்ததை மூளையில் ஏற்றுவது எப்படியோ நடந்து விடுகிறது.

மாணவர்கள் கஷ்டப்பட்டுப் பரீட்சைக்கு படிக்கிறார்கள். பரீட்சை எழுதி முடித்த பத்து நிமிஷத்திலே சிலர் ’விட்டதுடா பீடை’ என்று அந்தப் பாடங்களை மறந்து விடுவார்கள்.

சில பேருக்கு சுலபத்தில் மறக்காது.

நடிகர்களில் அமரர் சிவாஜி கணேசனின் ஞாபக சக்தியைப் பாராட்டுவார்கள். ஒரே ஒரு தடவை வசனத்தைப் படித்து விட்டாரானால் மனப்பாடம் ஆகிவிடுமாம்.

நடிகர் சிவகுமார் சங்க காலத்திலிருந்த புஷ்பங்களின் பெயர்களைக் கடகடவென்று தமது பிரசங்கத்துக்கு நடுவே கூறி எல்லோரையும் பிரமிக்க வைப்பது வழக்கம்.

அவரது திரு மகனார் நடிகர் சூர்யாவுக்கும் அந்தத் திறமை உண்டு. அந்த மாதிரி நாமும் கடகடவென்று எதையாவது ஒப்பிக்க வேண்டும் என்று அதையும் இதையும் தேடினேன். எத்தனை தடவை படித்தாலும் எதுவும் நாலைந்து வரிக்கு மேல் மனப்பாடம் ஆக உறுதியாக மறுத்துவிட்டது.

தமிழருவி மணியன் மாதிரி கையில் ஒரு பிட் சீட்டுக்கூட இல்லாமல் பிரசங்க மழை பொழிய வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடந்தால்தானே?

சரி. சிவகுமார் மாதிரி அந்தப் பூக்கள் பெயரையே நாமும் மனப்பாடம் பண்ணிப் பார்க்கலாம் என்று அவர் கடகடவென்று ஒப்பிக்கும் பூக்கள் பெயருக்கு ஒரு லிஸ்ட் தயாரித்தேன். பட்டியல் எழுதி முடித்ததும்தான் ’அந்த வேலைக்கும் என் வயசுக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லை’ என்பது புரிந்தது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் நீங்கள் 40 வயசுக்கு மேற்பட்டவரா?

கீழே சிவகுமாரின் பூக்களின் பட்டியல் தந்திருக்கிறேன். எத்தனை பூக்களின் பெயர் உங்களால் மனப்பாடம் செய்ய முடிகிறது.

இரண்டு மாசம் வேண்டுமானால் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.

மலர்களின் பட்டியலை சிவகுமார் மடை திறந்தாற்போல் கையில் ஒரு சின்னக் குறிப்புக்கூட இல்லாமல் ஒப்பிப்பார்.

நான் ’தம்’ பிடித்து அந்தப் பட்டியலிலிருந்து 93 மலர்களின் பெயர்களை பதிந்து வைத்தேன்.

அந்த 93 மலர்களின் பட்டியல் இதோ :

காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, செம்மணிப்பூ, பெருமூங்கில்பூ, கூவிளம், எறுழம்பூ, மராமரம்பூ, கூவிரம், வடவனம், வாகை, வெட்பாலைப்பூ, எருவை, செருவிளை, கருவிளம்பூ, ஆவிரம்பூ, சிறுமூங்கில்பூ, சூரைப்பூ, சிறுபூளை, குன்றிப்பூ, குருகிலை, மருதம், கோங்கம், மஞ்சாடிப்பூ, திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, காட்டு மல்லிகை, மாம்பூ, தில்லை, பாலை, முல்லை, குல்லை, பிடவம், செங்கருக்காலி, வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், சிறுசெம்குரலி, வெண்கோடல், கைதை, தரபுன்னை, காஞ்சி, கருங்குவளைரவம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அரும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், அசோகம், வஞ்சி, பித்தி, கம், கருநொச்சிப்பூ, தும்பை, துழாய், நந்தி, நறவம், தோன்றி, புன்னாகம், பாரம், பீர்க்கம், குருக்கத்தி, சந்தனப்பூ, அகிற்பூ, புன்னை, நரந்தம், நாகப்பூ, நள்ளிருள் நாறி, குருந்தம், வேங்கை, எருக்கு.