New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

சான் ஹுசே டயரி - 1

டாக்டர் ஜெ. பாஸ்கரன்

 
12 மணிநேரம் 'அரை' ஈஸிசேர் போஸில் பயணித்த பிறகு, சீட்டிலிருந்து எழுந்து இரண்டு நிமிடம் ஆனது மடங்கியிருந்த முட்டி நிமிர்வதற்கு!

புன்னகை மறந்த முகத்துடன் கண்ணாடிக்குப் பின் இருந்த அந்த ஆப்பிரிக்க அமெரிக்கர், வலது, இடது கைவிரல்கள், பெருவிரல் ரேகைகளைப் பதிவு செய்து, மூக்குக் கண்ணாடி கழற்றிய முகத்தைக் காமிராவில் பார்த்து, அரை மனதாய் ஆறு மாதத்திற்கு சீல் வைத்து, பாஸ்போர்ட்டை மடித்து நகர்த்தி அனுமதித்தார்!

சுழல் பெல்டிலிருந்து, தரையிறக்கி வைக்கப்பட்ட பெட்டிகளைச் சேகரித்துக் கொண்டு, மெதுவாக வெளியே வந்தோம் - சுள்ளென்று வெளியே வெயில் (100 டிகிரி) இங்கும் விடாமல் துரத்தியது! பெண்ணையும், பேரனையும் பார்த்துக் குளிர்ந்து, காரில், விரைவாய் வழுக்கிச் செல்லும் அகண்ட சாலையில், புள்ளியாய்க் கரைந்து போனோம்!

ஹாங்காங் வருத்தம், பொண்ணரசியின் சூடான வீட்டுக் காபியில் தீர்ந்தது!

நம்மூர் சாலை விதிகள், இங்கு மீறப்படாமல், ஒழுங்காக, நின்று செல்லும் கார்களின் அணிவகுப்பு! பொதுவிடங்கள் எல்லாவற்றிலும் ஒரு நடைமுறை ஒழுங்கு - நம்மூரில் ஏன் இப்படி இல்லை? குறைவான இடம், நிறைந்த ஜனத்தொகை, வறுமை, அராஜகம், அச்சமின்மை, போலி நேர்மை…. இப்படி ஏதோ ஒன்றினை நினைத்து, மனதை தேற்றிக் கொண்டேன் - வேறு வழி?  இங்கு குழந்தைகளுக்குக் கிடைக்கும் சலுகைகள், வாய்ப்புகள் பிரமிப்பூட்டுகின்றன. 'LEARNING HOW TO LEARN' என்றே ஒரு அருமையான புத்தகம்! படிப்புடன் ஏதாவதொரு துறையில் சிறு வயது முதலே பயிற்சி - அதற்காக பெற்றோர் எடுக்கும் முயற்சி, அரசு அளிக்கும் மானியங்கள் - போற்றத்தக்கவை!

'சில்வர் க்ரீக் சாக்கர் கிளப்' - டீன் ஏஜ் வரையுள்ள குழந்தைகளுக்கு சாக்கர் (கிட்டத்தட்ட நம்மூர் புட்பால் மாதிரி) பயிற்சி. வயது வாரியாகப் பிரித்து, 8 முதல் 10 குழந்தைகளுக்கு இரண்டு ட்ரெய்னர்கள் வீதம் பயிற்சி அளிக்கிறார்கள்! இருபத்தி ஐந்து வயதுக்குள் இருக்கும் ட்ரெய்னர்களின் பொறுமையும், எனர்ஜியும், குழந்தைகளைக் கையாளும் திறமையும் வியக்க வைக்கின்றன. காலரியிலிருந்து வாட்டர் பாட்டில், பிஸ்கெட் சகிதம் வேடிக்கை பார்க்கும் பெற்றோரின் கண்களில் எதிர்பார்ப்புடன் கூடிய மகிழ்ச்சி!

'ஜெட்லாக்' - பேசிக்கொண்டிருக்குபோதே அனிச்சையாகக் கண் மூடித் திறந்தது! இடையிடையே ஏதோ பேச்சு,பாட்டு, நகரும் விளக்கு வெளிச்சம்! அதிகாலை மூன்று மணிக்கு விழிப்பும், மாலை ஆறு மணிக்குக் கண்ணை அமட்டிக்கொண்டு வரும் தூக்கமும் கொஞ்சம் சிரமப்படுத்தும்.

ஒரு மாலை முழுதும் பாட்மிண்டன் ஆடினோம் - இருபதுக்கும் அதிகமான கோர்ட்ஸ் - நூற்றுக்கும் அதிகமானவர்கள் ( எல்லா நாட்டினரும்!) சுறு சுறுப்பாய் விளையாடினர்! இரவு 8 மணிக்கு வெளியே வந்தால், சூரிய பகவான் இன்னும் பிரகாசமாய் இருந்தான் !
 


பதினாறு திரைகள் கொண்ட சினிமா காம்ப்ளெக்ஸ் - 'செஞ்சுரி சிக்ஸ்டீன்' - சுற்றிலும் ஏராளமான மரங்கள், வரிசையாகக் கார் பார்க்கிங் - ஐநூற்றுக்கும் அதிகமான கார்கள் நிறுத்தும் வசதி - பார்க்கிங் சார்ஜ் கிடையாது! (நம்மூர் காண்ட்ராக்டர்கள் முப்பது முதல் நூறு வரை தாளிப்பது நினைவுக்கு வந்தது!)

உள்ளே நம்ம ஊர் மால்களில் உள்ள தியேட்டர்கள் போல்தான் - பழைய பைலட் தியேட்டரைப் போல அரை வட்ட வடிவில் இருக்கைகள் - முழுவதும் சாய்ந்து கொள்ளத்தக்க சோபாக்கள் - ஸ்டீரியோபோனிக் எஃபெக்ட்டுடன் சர்ரவுண்ட் சிஸ்டம் - பாப்கார்ன், டின்னில் குளிர்பானங்கள் !  


பார்த்த படம், 'ஸ்பைடர்மேன் - ஹோம் கமிங்' 3D மூவி ! முகத்தருகில் வந்து பேசும் ஸ்பைடர்மேன், நம்மை நோக்கித் தாக்க வரும் நெருப்புத் துகள்கள், நம் பக்கத்திலிருந்து ஸ்கிரீன் நோக்கிச் செல்லும் சிலந்தி - 3டி அட்டகாசம்! குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ரசித்துப் பார்த்ததை அவர்கள் போட்டிருந்த 'ஸ்பைடர்மேன்' டி ஷர்ட்டுகள் சொல்லின!

இந்த இடம் ஒரு மினி சென்னை - நிறைய தமிழ், கொஞ்சம் வம்பு, மெட்ராஸ் கபே, சரவணபவன், அஞ்சப்பர், இந்தியன் ஸ்டோர்ஸ் (இங்கு இந்தியாவின் எல்லா மளிகை மற்றும் தின்பண்டங்களும் கிடைக்கும்). சங்கீதம், நாட்டியம், நாடகம் எல்லாவற்றுக்கும் வசதிகள் - கோயில்களில் விஷ்ணு சஹஸ்ரநாமம், ருத்ரம்!

வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், இடையில் ஆகஸ்ட் தியாகி அப்புசாமி, சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் -

எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.