New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

 


 

பாக்கியம் ராமசாமி

11 

 

 

சீதாப்பாட்டி ஒருபுறம் மனச்சாட்சியுடன் போராடிக் கொண்டிருந்தாள். இன்னொருபுறம் நிதானமாக யோசித்துக் கொண்டிருந்தாள் - குஞ்சு கிஷ்டனை வெற்றிகரமாக எப்படி சமாளிக்கலாம் என்று.

அப்புசாமியை விடுவிக்க ஒன்றே முக்கால் லட்சும் வேண்டுமாமே!

'டெஃபனட்லி ஒன் பாயிண்ட் செவன்ஃபைவ் லேக் ரூபீஸ் இஸ் எ பிக் மணி. ஆனால் குழந்தை சித்துவைவிட அந்தக் தொகை பெரிதல்ல.'

இரண்டு விஷயங்கள் அவளை உறுத்தின. தினசரிப் பத்திரிகைகளில் தினமும் ஏழெட்டு செய்திகளாவது கொலை கொள்ளை பற்றி வெளி வருகிறது சகஜமாகிவிட்டது. அதுவும் டீடெய்லாக - புகைப் படங்களுடன் - அவர்கள் பேசும் வசனங்கள் உட்பட. எந்தத் திருடனாவது பாடிக் கொண்டே திருடியிருந்தால் அந்தப் பாட்டைக் கூடக் கட்டாயம் பிரசுரிப்பார்கள்.

சீதாப்பாட்டி சில நாள் முன்னதாக ஒரு ரோட்டரி கிளப்பில்கூட, 'ஸீனியர் ஸிடிஸன்களும் முகமூடிக் கொள்ளையர்களும்!' என்ற தலைப்பில் பேசினாள்.

'தனிமையில் இருக்கும் கிழவிகளைக் கொள்ளையர்கள் தாக்குவது பற்றியும், பாதுகாப்புக்காக எத்தகைய முன்னேற்பாடுகளுடன் அவர்கள் இருப்பது நல்லது என்பதையும், தனிமையில் வாழ்க்கை நடத்தும் பணக்காரக் கிழவிகளுக்கு அரசாங்கம் எப்படியெல்லாம் பாதுகாப்புத் தரலாம் என்பது பற்றியும் விரிவாகப் பேசினாள்.

முதல்வரிடம் சென்று இதுபற்றிப் பேச ஒரு சந்தர்ப்பத்தையும் எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள். டெலிகேஷனாகப் போவதுதான் நல்லது. யார் யார் அந்த டெலிகேஷனின் இடம் பெறுவது, நல்ல விஷயமென்றால்கூட கோணல் குழி வெட்டும் எதிர்க்கட்சித் தலைவி பொன்னம்மா டேவிட்டை அவசியம் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்' என்றெல்லாம் நினைத்திருந்தாள்.

விதி அவளுடனே விளையாடி விட்டது.

அவளையே டெலிபோனில் ஒருத்தன் பிளாக்மெயில் செய்கிறான்.

ஒன்றே முக்கால் லட்சம் கொடுத்தால்தான் அப்புசாமியை விடுவிப்பானாம். யார் அவன் குஞ்சு கிஷ்டன்?

படித்த திருடன் போலிருக்கிறது. படிக்கட்டும். பட்டம் பெறட்டும். திருடர்களும் மனிதர்கள்தானே? ஆனால் நிறையப் படித்துவிட்டு நிறையத் திருடுபவர்களின் கட்சியை சீதாப்பாட்டி ஆதரிக்கத் தயாராக இல்லை.

இந்த வருஷம் இன்ஃப்ளேஷன் சென்ற ஆண்டைவிட எத்தனை பர்சண்ட் அதிகம் என்பதையெல்லாம் ஓவர்ஃபோன் டிஸ்கஸ் செய்கிறான்.

யூஷுவலாக ஒரு ஆளைக் கடத்தினால் லட்சத்து இருபதாயிரம் வாங்குவதுதான் அவன் வழக்கமாம். பெருகிவரும் பண வீக்கத்தினால் லட்சத்து எழுபத்தையாயிரமாக இப்போது அவன் உயர்த்திருக்கிறானாம்..

அவன் பேசியதிலிருந்து அவன் ஒரு பக்கா கிட்னாப்பா; அப்புசாமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது அவன் குறி; ஆகவே சட்டென்று அப்புசாமியை எதுவும் செய்துவிட மாட்டான்; ஆனால் எதுவும் செய்யத் தயங்கவும் மாட்டான். டிலேயிங் டாக்டிக்ஸ் மூலம் அவனைச் சற்றுத் தாமதிக்கச் செய்து அதற்குள் போலீஸ் மூலம் அவனைப் பிடிக்க வேண்டும்...

'நோ சான்ஸ்!' சீதாப்பாட்டி தன்னையே நிராகரித்துக் கொண்டாள்.

அவள் தாமதிக்கும் ஓரொரு நிமிடமும் சித்துக்குட்டிக்கு ஆபத்து.

பிடிவாதக்காரனாக இருக்கிறான். மருந்தோ ஆகாரமோ எதுவும் சாப்பிட ஒத்துழைக்க மறுக்கிறான். குழந்தை பாதியா மெலிந்து விட்டான்.

திருப்பதிக்குப் போன உமா - சங்கர் தம்பதிகள் - சித்தார்ததின் பெற்றோர் - திரும்புவதற்குள் அப்புசாமியை வரவழைத்துவிட வேண்டும். குழந்தைக்கு மருந்தும் ஆகாரமும் தரத் தொடங்கிவிட வேண்டும்.

கொழுக்மொழுக்கென்ற நிலையில் அவர்கள் ஒப்படைத்த குழந்தைக்கும் இப்போதிருக்கும் சித்தார்த்துக்கும் எவ்வளவு வித்தியாசம்!

அவளது நோக்கம், எப்படியாவது அப்புசாமியை வரவழைப்பதே தவிர, லா அண்ட் ஆர்டர் நாட்டில் சரியாக இல்லை என்று லெட்டர்ஸ் டு த எடிட்டருக்குக் கடிதம் எழுதவோ, டெலிகேஷனைக் கூட்டிக் கொண்டு ஸி.எம்.மைச் சந்தித்து பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதோ அல்ல.

விருந்து என்றால் கொஞ்சம் ஆறினால்கூடச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

சர்ட்டன் திங்ஸ், குறித்த வேளைக்குள் நடைபெற்றாக வேண்டும். தீ விபத்து ஏற்பட்டு வீடு எரியும்போது தீப்படைக்கு உடடினயாகப் போன் செய்து விட்டுத் தாங்களும் அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டுமே தவிர, விபத்துக்கு எது காரணம், யார் காரணம் என்று விசாரிக்க அப்போதே என்க்வயரி கமிஷன் செட் அப் செய்து கொண்டிருக்க முடியாது. தீயை உடனடியாக அணைத்தாக....

"பாத்... தீ...! " என்று சித்தார்த்தின் குரல் பலவீனமாக கட்டிலிலிருந்து கேட்டது.

"இதோ வந்தேண்டா செல்லம்... மை டியரஸ்ட் ஹனி. கொஞ்சம் கஞ்சி குடிக்கிறியாடா கண்ணா" பாட்டி கட்டிலுக்கு விரைந்தாள்.

"சித்துக்கு நாணாம்" என்ற சித்தார்த், "அயர்ன் பாக்ஸ் எடுத்துரு..." என்று அறையின் ஓரத்தில் ஒரு பட்டுப் புடவையை நன்றாகப் பொசுக்கிக் கொண்டிருந்த அயன் பாக்ஸைக் காட்டினான்.

பாட்டி ஓடிச் சென்று ஸிவிட்சை அணைத்தாள். 'மை காட்! எப்படி மறந்துவிட்டேன்...!'

ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப எண்ணுவதால் பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது.. ஆசை மனக்குழப்பத்துக்கும் சினத்துக்கும் காரணமாகிறது. சினமும் மனக் குழப்பமும் ஏற்படுவதால் புத்தி அழிகிறது. புத்தி அழிந்தால் மனிதனே அழிகிறான்.

சீதாப்பாட்டி எப்போதோ கீதையில் படித்ததை நினைவுபடுத்திக் கொண்டு நிதானமானாள். மூச்சை சீராக இழுத்து நாலைந்து தடவை விட்டாள்.

இப்போது அவளது ஒரே பிரச்னை - ஒன்றே முக்கால் லட்ச ரூபாய். உடனடியாகத் தேவை.

பாட்டிகள் முன்னேற்றக் கழக சார்பாகப் போட்டிருந்த ஃபிக்ஸட் டெபாஸிட் ரசீதுகளை பீரோ லாக்கரிலிருந்து எடுத்து அடுக்கினாள். இரண்டரை லட்சம் ரெடியாகத் தேறும். அவற்றின்மீது ஒண்ணே முக்கால் லட்சம் ரூபாய் கடன் எளிதாகப் பெறலாம்.

'சீதே!...' அவள் மனத்திலிருந்து பஸ்ஸர் அலறியது. 'சீதே! பங்கு பத்திர ஊழல் மாதிரி நீயும் ஊழலா? பா.மு. கழக டெபாசிட்டுகளை உன் சொந்த விஷயத்துக்குப் பயன்படுத்தப் போகிறாயா? காரியதரிசி அகல்யா சந்தானமும் உன்னோடு கையெழுத்துப் போட வேண்டியவள். அவளை எப்படிச் சம்மதிக்க வைக்கப் போகிறாய்?

திடுமென ஒன்றே முக்கால் லட்சம் கழக டெபாசிட்டிலிருந்து எடுக்க வேண்டிய அவசியமென்ன?

அகல்யா சந்தானம் மட்டுமல்ல, மொத்த பாட்டிகள் முன்னேற்றக் கழகமும் உனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும்.

கணக்கு கேட்கும், கறைபடாத உன்னுடைய தலைமைப் பதவியிலும் போபர்ஸா?

சீதே! இரண்டு நாள் எப்படியாவது சமாளி. குழந்தையின் பெற்றோர் அதற்குள் வந்து விடுவார்கள். ஒப்படைத்து விடு. எப்படியோ போகட்டும்.

அவர்கள் குழந்தையை விட்டுவிட்டுப் போவது பொறுப்பற்றதனம், தே ஹாவ் டு பே த ப்ரைஸ் ஃபர் இட்... ஒய் ஷுட் யூ? உன்னுடைய நேர்மையை ஏன் தவற விடுகிறாய்?'

மனச்சாட்சியின் மறுபாதி தன் கட்சியை முன் வைத்தது.

 'நாட் த கொஸ்ச்சன் அஃப் நேர்மை சீதே! நீ தயங்குவது நேர்மை தவறி விடுமோ என்பது பற்றியல்ல... உனது அஃபிஷியல் நாற்காலிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பதவி ஆசையால், குழந்தையின் உயிரோடு விளையாடத் துணிந்து விட்டாய்! குழந்தையின் உயிரோடு மட்டுமல்ல; உன் கணவரின் உயிரோடும்!'

டுடு.... ஆர் நாட் டு டு...

குழந்தை சித்தார்த் பலவீனமாய் அரை மயக்க நிலையிலிருந்தான். அவனது கண்கள் சோர்வினால் மூடிக் கொண்டாலும் உதடுகள் முணுமுணுத்தன. அவனது பிரியத்துக்கு உகந்த தாத்தா சொல்லித் தந்த பாட்டு :

'குண்டு குண்டு பாட்டி
 நண்டு நண்டு பாட்டி
நண்டு நண்டு பாட்டி
மண்டு மண்டு பாட்டி...'

சித்துக் கண்ணா... நான் மண்டுப் பாட்டியாகத்தான் கண்ணா ஆகிவிட்டேன்.

என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லையடா டார்லிங்!

குழந்தை நிமிஷத்துக்கு நிமிஷம் துவளுவது போலிருந்தது. மெதுவாக இறங்கிக் கொண்டிருந்த குளுகோஸ் ட்ரிப் பாட்டிலைப் பார்த்தாள். ஊஹும்... ஒரே சிகிச்சை அவனுடைய தாத்தாவை வரவழைப்பதுதான்.

சீதாப்பாட்டி டெபாசிட் ரசீதுகளைக் கைப்பையில் போட்டுக் கொண்டாள்.

காரியதரிசி அகல்யா சந்தானத்தின் வீட்டுக்குக் காரை வேகமாகச் செலுத்தினாள்.

அவள் கார் அங்கே நுழையவும் பொன்னம்மா டேவிட்டின் கார் அங்கிருந்து வெளியேறவும் சரியாயிருந்தது.

கல்யா சந்தானத்தின் வீட்டுக்குப் பொன்னம்மா டேவிட் ஏன் வந்து போகிறாள்?

காரியதரிசி அகல்யா, சீதாப்பாட்டியிடம் காட்டி வந்த மரியாதையும் அன்பும் போலியானவையா? எப்படியெல்லாம் புகழ்ந்து பேசுவாள்! சீதாப்பாட்டியின் பெயரைக்கூடச் சொல்லாமல் 'பிரசிடெண்ட்ஜி, பிரசிடெண்ட்ஜி' என்று என்ன மரியாதை!

சட்டென்று அவல்யாவைப் பற்றித் தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது. இன்று பா.மு.க. இந்த அளவு வளர்ந்திருக்கிறதென்றால் அதற்கு அகல்யாவின் உழைப்பும் ஒரு காரணம்.

அகல்யா அவளை ஒரு போதும் லெட்டௌன் செய்ததில்லை.

ஆனால், கண்ணால் கண்ட காட்சி?

சீதாப்பாட்டியின் ஜாக்கிரதை உணர்வு, தன் கட்சியைக் கூறியது.

மை டியர் சீதே, ட்ரா யுவர் ப்ரூஃப் ஃப்ரம் டீட்ஸ், நாட் ஃப்ரம் வோர்ட்ஸ்!

பொன்னம்மா டேவிட்டுக்கு இங்கே என்ன வேலை? ஏன் வந்து போகிறாள். அவள்? எட்டிப் பார்த்த சந்தேகப் பிசாசை சீதாப்பாட்டி, "கெட் தி பிஹைண்ட் மி ஸேட்டன்!" என்று பின்னுக்கு விரட்டி அடித்தாள்.

கைவசம் உடனடியாக இருக்கக் கூடிய வாய்ப்பை நழுவவிட்டு சித்தார்த்தின் உயிருக்கு ஆபத்து தேட அவள் தயாராக இல்லை.

ஆனால் காரியதரிசியை எவ்வளவு தூரம் நம்பலாம்? அகல்யாவிடம் முழு உண்மையையும் கூறி உதவியை நாடுவது பெட்டரா, அல்லது....

அவள் யோசித்து முடிக்குமுன் அகல்யாவின் பாமரேனியன் அவளைப் பார்த்து ஒரே மகிழ்ச்சியுடன் குடுகுடுவென ஓடிவந்தது.

"ஓ! மை ஸ்வீட்டி!" என்று அதை வாரி எடுத்துக் கொண்டாள். அதன் பட்டுச் சடை மேனியைத் தடவித் தந்தாள்.

"ஸாரி பப்லூ! ஆன்ட்டி உனக்கு எதுவும் வாங்கி வரலை..." என்றாள்.

தன்னுடைய ஏமாற்றத்தைப் பலவிதமான செல்லச் சிணுங்கல்களில் பப்லூ வெளிப்படுத்திவிட்டு, சுகமாகப் பாட்டியின் கையிலிருந்தவாறு கொஞ்சத் தொடங்கியது.

"பப்லூ!" நாயைக் கூப்பிட்டவாறு வெளியே வந்த அகல்யா சந்தானத்தின் முகம் வெளிறிப் போனதை சீதாப்பாட்டியால் கவனிக்க முடிந்தது.

"குட் மார்னிங் அகல்யா!" என்றாள் சீதாப்பாட்டி, கையிலிருந்த பப்லூவைத் தடவித் தந்தவாறு.

"அவசரமாக வந்ததில் பப்லூவுக்கு பிஸ்கட்ஸ்கூட ஏதும் வாங்கி வரவில்லை. ஸாரி சொல்லிக் கொண்டிருக்கிறேன். இட் இஸ் வெரி இன்ட்டலிஜெண்ட்! ஓ! இந்த வெள்ளைச் செம்பருத்தி! லவ்லி! பூக்கத் தொடங்கிவிட்டதா? ரியலி ஃபண்டாஸ்டிக்..." தொட்டியிலிருந்த வெள்ளைச் செம்பருத்தியைப் புகழ்ந்தவாறு காரியதரிசியின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
 

- தொடரும்