New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

 

1001 அப்புசாமி இரவுகள்

 

பாக்கியம் ராமசாமி

 

அத்தியாயம் - 9

 

 

ஒன்பது தும்மல்கள்!

 


கிழவர் ஸிம்ஸிம் கையில் சிறிய உருட்டைப் பிரம்பு ஒன்றை வைத்துக் கொண்டிருந்தது அப்புசாமியின் குடலை என்னவோ செய்தது.

"எங்கே 'ஜீம்' எப்படி எழுதியிருக்கிறாய்? காட்டு பார்ப்போம்.. நாளைக்கு முள் வைத்த முட்டிப் பிரம்பு கொண்டு வரப் போகிறேன்."

தப்பாக எழுதிவிட்டு அப்புசாமி நாக்கால் சிலேட்டை ரகசியமாக ஒரு தடவை சுத்தம் செய்து கொண்டார். 'அடே பாவி ஸிம்ஸிம்! முள்ளு வைத்த முட்டிப் பிரம்பாடா நாளைக்குக் கொண்டு வரப்போறே? நீ மட்டும் அதைக் கொண்டு வா மறுநாள் நான் உன் நாற்காலியிலே வேலாமுள்ளைக் குத்தி வைக்கிறேனா இல்லையா பாரேன்;' என்று கறுவிக் கொண்டார்.

"என்ன, எழுதியாச்சா?" என்று ஸிம்ஸிம் கடுகடுத்தவாறே, இடுப்பிலிருந்து ஒரு சிறிய டப்பியைத் திறந்து 'சர்ர்ர்' என்று ஒரு சிட்டிகையை இழுத்துக் கொண்டார்.

அப்புசாமிக்கு மூக்கு ஊறியது. "உஸ்தாத் சார். ஹிஹி... மாணவன் என்கிற முறையில் கேட்கலை. விருந்தாளி என்கிற முறையிலே பேசுகிறேன். ஒரே டல்லடிக்கறது. எனக்குக் கூட ஒரு சிமிட்டி ஹிஹி.." என்று சின் முத்திரையைக் காட்டினார்.

ஸிம்ஸிம் சிரித்தவாறு, "குழந்தாய், மாணவர்கள் எவ்வித லாகிரி வஸ்துக்களையும் உபயோகிக்கக் கூடாது; இருந்தபோதிலும் நீர் சற்றே மூத்த மாணவராதலாலும்; விருந்தாளியாதலாலும், ஒரே ஒரு சிமிட்டா தருகிறேன். ஆனால் இது மிகவும் காரமானது. உம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா?" என்றார்.

அப்புசாமி சிரித்தவாறே, "இதைவிடப் பிரமாதமான பொடியெல்லாம் போட்ட சர்வீஸ் உண்டுங்கணே..." என்று தோழமையோடு கூறியவாறு ஒரு சிமிட்டாப் பொடியை எடுத்துப் பரம ஆனந்தத்துடன் மூக்கில் போட்டோரோ இல்லையோ....

'அக்சூ அக்சூ அக்சூ அக்சூ அக்சூ அக்சூ அக்சூ அக்சூ அக்சூ' என்று ஒன்பது தும்மல்கள் இடி முழக்கம் செய்வது போல் தும்மி விட்டார்.

"அடேங்கப்பா... காரம்தான் வாத்யாரே, படா காரம். அதுவும் டச் விட்டுப் போச்சா...?"

அதே சமயம் மூத்த பார்மாகி அந்த அறை வாசலில் வந்து நின்றான். ''ஒன்பது தும்மல்கள் தும்மியது நீங்களா, எங்கள் தாத்தாவா?" என்று கேட்டான் கண்களில் ஆவல் வெளிப்பட.

ஸிம்ஸிம் வருத்தத்துடன் அவனிடம், "பேரனே, எனக்கு அந்தப் பாக்கியம் ஏதப்பா?... இதோ உங்கள் புதிய தோழரும் என் மாணவனுமான இவர்தான் ஒன்பது நல்ல தும்மல்கள் தும்மிய பாக்கியசாலி, அதிருஷ்டசாலி, வீரவான், கனவான், புத்திசாலி."

அடுத்த கணம் அப்புசாமியை மூத்த பார்மாகி தழுவிக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ கூறினான். அவனைத் தொடர்ந்து மற்ற எட்டுப் பேரும் அவ்வாறே தழுவிக் கொண்டனர்.

ஸிம்ஸிம்மும் அவரைத்தழுவிக் கொண்டு, "ஒன்பது நல்ல தும்மல்கள் தும்மிய நண்பரே... அதிருஷ்டம் உம்மைக் கடைக் கண்ணால் பார்க்கத் தொடங்கி விட்டது!" என்றார் பெருமையுடன்.

அப்புசாமிக்குப் பூரிப்பாக இருந்தது. 'அட, அதிருஷ்டம் பிறந்துவிட்டதா எனக்கு. 'பேஷ், பேஷ்...' என்று மகிழ்ந்தார்.' "அப்போ நாளையிலிருந்து ஸ்பெஷல் வெண்ணெய், ரொட்டி, ஜாம், ஐஸ்கிரீம் இதெல்லாம் கிடைக்கும்னு சொல்லுங்க..." என்றார்.

"அன்பு மகனே, அதெல்லாம் அற்ப மகிழ்ச்சிகள். உம்முடைய அதிருஷ்டம் அதைவிடப் பெரியது. 'பகைவனுக்குப் பின் ஒருநாள் வாழும் பேறு ஒருவனுக்குக் கிடைத்தால்கூட அவன் வெற்றி பெற்றவன்' என்னும் பழமொழியை நீர் அறியாதவரா?'

அப்புசாமி, "ஆமாம், அறியாதவன்தான்!'' என்றார்.

ஸிம்ஸிம் அவர் தலையை அன்புடன் தடவிக் கொடுத்து, "அறியும் காலம் வந்துவிட்டது மகனே ஒன்பது நல்ல தும்மல்கள் தும்மியிருப்பதால் நீர்தான் தகுந்தவரென்று பேரர்கள் கூறுகிறார்கள்."

"எதற்கு?"

"அரண்மனைக்குள் நுழைவதற்கு!"

''அட! சபாலங்கடி கிரி கிரி! சைதாப்பேட்டை வடகறி! ஏய்யா, அரண்மனைக்குள் நுழைகிறதா பெரிய காரியம்? எத்தனை அரண்மனையில் நுழைய வேண்டும். விரலை மடக்குங்கள்..." என்றார் அப்புசாமி உற்சாகமாக.

ஸிம்ஸிம் அப்புசாமிக்கு விளக்கினார்: "அன்பரே, அல்ஜூமாய்னின் ஷேக் எவ்வளவு முரட்டுத் தனமானவனென்பதும், அவனுக்கு எதிராக நாம் நடத்தப் போகும் புரட்சி எத்தகைய தீவிரமானது என்பதும் சிந்தனைக்குரியது. ஷேக்கை வெற்றி கொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது அவன் ஊரில் இல்லாமல் வெளிநாடு போயிருக்கும் சமயம்தான் நடைபெற முடியும். ஷேக் சமீபத்தில் எந்தத் தினங்களில் வெளிநாடு செல்லப் போகிறான் என்பதும் ஷேக் ஒருவனுக்குத்தான் தெரியும். எதிரிகளுக்கு பயந்து கொண்டு பிரயாண தேதிகளை ஷேக் பரம ரகசியமாக வைத்திருப்பான். பட்டுத் துணியால் தைக்கப்பட்ட ஒரு சிவப்பு டைரியில் அவன் தன் பயண நிகழ்ச்சி தினங்களை அந்தரங்கமாக எழுதி வைப்பது வழக்கம். அந்த டைரி அவனது படுக்கை அறைக் கட்டிலிலுள்ள மர்மமான பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. நீர் அதைப் போய்ச் சாமர்த்தியமாக எடுத்து வந்துவிட வேண்டும் அவ்வளவே."

ஸிம்ஸிம் பேசி முடித்தவுடன் ஒன்பது சகோதரர்களில் ஒருவன், 'நம் தோழரைப் பார்த்தால் மிகவும் வயோதிகராயிருக்கிறார். காவலர்கள் யாராவது துரத்தினால் ஓடக்கூட முடியாது. நானும் வேண்டுமானால் போகட்டுமா?" என்றான்.

"நீயா?" ஸிம்ஸிம் திகைப்புடன் வினவினார். "ஒன்பது சகோதரர்களில் எந்த ஒருவன் போனாலும் அரண்மனை ஒற்றர்களுக்கு அடையாளம் தெரிந்து விடும். அடுத்த கணமே ஈவிரக்கமில்லாமல் கண்களைத் தோண்டி தொண்டையைப் பாதி அறுத்து, மாறு கை மாறு கால் வாங்கி விடுவார்கள். உங்கள் ஒன்பது பேரில் யாரையும் அனுப்பாமல் நம் தோழரை அனுப்புவது அதனால்தான்" என்றவர் அப்புசாமி பக்கம் திரும்பி, "அன்பரே, வெற்றி உம்மை அழைக்கிறது!" என்றார் உற்சாகமாக.

அப்புசாமிக்கு அப்போதே தன்னை யாரோ தோலை உரிப்பது போலிருந்தது.

இரண்டு சமையற்காரர்கள்!

ரைளயவு மும்முறை தாழ்ந்து வணங்கிய முன்னாள் அமைச்சர் ஜபார், மதிப்புக்குரிய ஷேக் அவர்கள் கண்களை மூடியவாறு வாயில் ஹுக்காக் குழாயை வைத்துக் கொண்டிருந்த நிலையைப் பார்த்ததும் சற்றே தயங்கினார். எஜமானர் தூங்குகிறாரா? முக்கிய யோசனை ஏதாவதில் மூழ்கியிருக்கிறாரா? முன்பு ஒரு தரம் இப்படித்தான் அவர் வாயில் வைத்த ஹுக்காக் குழாயுடன் தூங்கி, பாதித் தூக்கத்தில் புரைக்கேறி, "அறிவுகெட்ட முண்டமே, இவ்வளவு பெரிய அரண்மனையில் ஹுக்காக் குழாயை என் வாயிலிருந்து எடுத்துக் கீழே வைப்பதற்கு ஒரு சைத்தானுக்கு நாதியில்லையா? உன்னை இப்போதே வெட்டறைக்கு அனுப்பி..." என்று கண்டித்தது அவர் ஞாபகத்துக்கு வந்தது.

லேசாகக் கனைத்தார்.

ஷேக் விருட்டென்று கண்விழித்தவர், "யாரது?" என்றார்.

உடனே தாமதியாமல் மும்முறை தரை அளவு தாழ்ந்து வணங்கினார் ஜபார். "மேன்மை தங்கிய பிரபு அவர்களின் சிந்தனையைக் கலைத்த இந்தக் கேடு கெட்டவனின் உயிரை மன்னித்து உலவ விடக் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கடையவன் இறந்து போனாலும் சவக் குழியிலிருந்து இவனுடைய எலும்புகள் நன்றியுடன் தங்கள் புகழைப் பாடும்."

ஷேக் ஹுக்காவைப் புகைத்தவாறு மௌனமாக ஜபாரைத் தலை முதல் உச்சி வரை பார்த்தார். அந்தக் கனிந்த பார்வை அவர் கவிதை மூடில் இருக்கிறார் என்பதை ஜபாருக்கு உணர்த்தவே ஓரளவு ஆறுதல் பெற்று மீண்டும் மும்முறை தரையளவு தாழ்ந்து வணங்கி, "மேன்மை தங்கிய பிரபு அவர்களுக்குப் புரைக்கேறாமல் இருக்க வேண்டுமேயென்று இந்த அறிவிலி கவலைப்பட்டு அவசரமாகத் தங்கள் சிந்தனையைக் கலைக்கும் குற்றத்தை இழைத்து விட்டேன். மேன்மை தங்கிய பிரபு அவர்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிவிக்க இந்த எளியவனை அனுமதிக்கப் பிரார்த்திக்கிறேன்."

"சொல்லு" என்று ஜாடை காட்டினார் ஷேக்.

ஜபார் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். 'ஜபார், மேன்மை தங்கிய பிரபுவின் மதிப்பைப் பெற்றிருக்கும் புதிய அமைச்சரை உடனடியாக நீ ஒன்றும் அசைத்துக் கொள்ள முடியாதெனினும், மனம் தளராதே! நீ கல்விமான் அல்லவா? உன் விவேகத்தால், மெதுவே உன் எதிரியை வெற்றிகொள், புதிய அமைச்சரைப் பற்றி அக்கறைப்படுபவன்போல் காட்டிக்கொள். அதே சமயம் புதிய அமைச்சரின் மீது அரசருக்கு எரிச்சல் வரும்படியும் செய்...'

நெடுநேரமாக மௌனமாகப் பணிந்து நிற்கும் முன்னாள் அமைச்சரைப் பார்த்து ஷேக்குக்கு எரிச்சலாக வந்தது. "அறிவு கெட்டவனே, மரியாதைக்கும் மௌனத்துக்கும் கூட ஓர் அளவு கிடையாதா? இப்படி மணிக்கணக்கில் மரம் மாதிரி நின்று என் நேரத்தை வீணாக்குகிறாயே, உன்னை என்ன செய்தால் தகும்?"

"பிரபு!" என்று தரையில் வேரற்ற மரம்போல் ஜபார் சாய்ந்து விட்டார். "மேன்மை தங்கிய பிரபு! இந்த நீசனுக்கு எந்தத் தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள். ஆனால் விசுவாசமிக்க இந்த ஊழியன் சொல்வதை ஒரு காதால் கேளுங்கள். மிகப் பெரிய அறிவாளியான - அல்ஜுமாய்ன் ராஜதானியின் அறிவுச் சுடர்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புக்குரிய புதிய அமைச்சர் கொஞ்ச நாளாக - ஏன் வந்த தினத்திலிருந்தே - நமது அல்ஜுமாய்ன் அரண்மனையின் அற்புத விருந்து எதையும் கையால் கூடத் தொடுவதில்லை என்றும், அடிக்கடி கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொள்வதாகவும், உணவுத் தட்டுகள் வரும்போது, 'சரி, சரி. எடுத்துப் போங்கள்' என்று சொல்வதாகவும் சில அடிமைப் பெண்கள் வந்து கூறினர். சரியான ஆகாரமின்றிப் புதிய அமைச்சர் சோர்வுடனிருப்பதைத் தங்கள் சமூகத்தில் தெரிவிக்க வேண்டியது என் கடமையாதலால்..."

ஷேக்குக்கு ஒரு கணம் சுரீலெனக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது, "என்ன, நம் அதிகாரபூர்வமான அரண்மனை விருந்தை ஒருத்தர் உதாசீனப்படுத்துவதா? யாரங்கே... உடனே அந்த நாக்கையும் கண்ணையும்," என்று படபடத்தார். ஜபாரின் மனத்தில் ஜில்லென்று பாதம்கீர் இறங்கியது.

மறுகணம் ஷேக் ஜபாரைப் பார்த்துத் தீவிழி விழித்தார். "அற்பனே... இதை ஏன் முன்பே என்னிடம் சொல்லவில்லை?"

ஜபார் நடுங்கிப் போனார். ஷேக் கட்டளையிட்டார். "மூளை கெட்டவனே, புதிய அமைச்சரின் அறிவாற்றல் எவ்வளவு என்பதை உனக்கு நான் இவ்வளவு தூரம் நிரூபித்தும் நீ இன்னும் உன் அற்ப புத்தியை விடவில்லை. புதிய அமைச்சருக்கு எந்த உணவு பிடிக்கிறதோ, அத்தகைய உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களை உடனே நியமி. தாமதமாகும் ஒவ்வொரு வினாடிக்கும் உனக்கு இருபது கசையடிகள் விழும். கேடு கெட்ட நாயே, ஓடிப் போ!"

சீதாப்பாட்டி மிகுந்த சோர்வுடனிருந்தாள். அரண்மனையின் வித்தியாசமான உணவு வகைகள் வயிற்றுக்கு ஒப்புக் கொள்ளாததோ அல்லது பா.மு. கழகத்தினரைப் போன்ற சுறுசுறுப்பான பெண் அங்கத்தினர்களை இங்கே சந்திக்க முடியாத ஏக்கமோ, ஏற்றுக் கொண்ட மந்திரிப் பொறுப்போ அந்தச் சோர்வுக்குக் காரணமில்லை.

கணவரைப் பற்றிய கவலையில் இருந்தாள். அவருடைய வேர் அபௌட்ஸ் ஒன்றும் தெரியவில்லையே. பொறுப்பான பதவியிருப்பதால் வெளிப்படையாக அவரைத் தேடிவரும்படி கவர்ன்மெண்ட் மிஷனரியையும் பயன்படுத்த முடியவில்லை. ஷேக்கின் சந்தேகத்துக்கும் சம்சயத்துக்கும் ஆளாவது அபாயத்தில் கொண்டுவிடும். சே! இந்த மாதிரி அவர் காணாமல் போகும் சமயங்களிலெல்லாம் மெட்ராஸாயிருந்தால் அவரது தோழர்கள் பீமாராவும் ரசகுண்டுவும் - டு சம் எக்ஸ்டெண்ட் சைல்டிஷாக பிஹேவ் செய்தாலும் - பொறுப்பாகத் தேடிக்கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.

சீதாப்பாட்டியின் பெருமூச்சு டொக் டொக் என்று கதவு தட்டிய ஓசையால் தடைப்பட்டது.

"ஓ! யூ! மிஸ்டர் ஜபார்!"

ஜபார் துருத்தி போலப் பெருமூச்சு விட்டவாறு மிகவும் கமுக்கமாக அங்கிருந்த நாற்காலியில் தொம்மென்று சாய்ந்து கால் மேல் காலைப் போட்டுக் கொண்டு ஆட்டியவாறே, "அமைச்சர் சாப்பிட்டாயிற்றோ?" என்றார்.

சீதாப்பாட்டி வறண்ட சிரிப்புடன், "ஓ! சாப்பிட்டாயிற்றே?" என்றாள்.

ஜபார் எரிச்சலுடன், "இவ்வளவு அறிவாளியாக இருந்துகொண்டு ஏன் பச்சைப் புளுகாய்ப் புளுகிறீர்கள். நீங்கள் சாப்பிடாமலிருப்பது என் கழுத்துக்கல்லவா கத்தி வந்துவிடும் போலிருக்கிறது!" என்றார்.

சீதாப்பாட்டிக்குத் திகைப்பாயிருந்தது. "எக்ஸ்ட்ரிம்லி ஸாரி மிஸ்டர் ஜபார், உங்களுக்கு நான் கூடுமானவரை எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லையென்றே நினைக்கிறேன்."

சுருட்டு ஒன்றைப் பற்றவைக்க ஜபார் முயன்றபோது சீதாப்பாட்டி, "எக்ஸ்க்யூஸ் மி. எனக்கு ஸ்மோக் கொஞ்சம் அலர்ஜி.... கான்ட் யூ ரெஃப்ரெய்ன் ஃப்ரம் ஸ்மோக்கிங் ஃபர் சம் மினிட்ஸ்!" என்றாள்.

ஆத்திரத்துடன் சுருட்டைக் கீழே போட்டு மிதித்த ஜபார் எழுந்து நின்று, "நீங்கள் சரியாகச் சாப்பிடாததால், சமையல்காரரை மாற்றப் போகிறேன். எந்த மாதிரி சமையல் வேண்டும்? அதையாவது சொல்லி இழவெடுங்கள். அநியாயமாய் என் தலைக்கு ஆபத்து" என்றார்.

சீதாப்பாட்டி மென்மையாகச் சிரித்தாள். "மிஸ்டர் ஜபார், இட் இஸ் வெரி கைண்ட் அஃப் யூ. சமையல்காரரை மாற்றினால் மட்டும் போதாது. ஐ லைக் ஒன்லி தமிழ் நாட்டுச் சமையல்!"

ஜபார் பல்லைக் கடித்தார். "நீங்கள் தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் என் பிரபுவின் கோபத்துக்கு நான் ஆளாகும் துர்ப்பாக்கிய நிலையிலிருக்கிறேன். உங்களுக்குத் தமிழ் நாட்டுச் சமையல்தானே வேண்டும். அந்தத் தமிழ் நாட்டிலிருந்தே இரண்டு சமையல்காரர்களை வரவழைத்து விடுகிறேன்."

சீதாப்பாட்டிக்குப் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. "நிஜமாகவா?" என்று கேட்டாள்.

ஜபார் எரிச்சலுடன், "எந்தெந்த நாட்டிலிருந்தோ எத்தனையோ வித அழகிகள் கொண்டு வரப்படுகிறார்கள். கேவலம் இரண்டு சமையல்காரர்களையா தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வர முடியாது?" என்றார்.

"இன் தட் கேஸ்...." என்றவாறு சீதாப்பாட்டி எழுந்து மேஜை அருகே சென்று ஒரு காகிதத்தில் ஏதோ எழுதிக்கொண்டு வந்து ஜபாரிடம் தந்தாள்.

"தமிழ்நாட்டிலேயே நன்கு சமைக்கத் தெரிந்த இரண்டு சமையல்காரர்களின் பெயர்களையும் அவர்களது விலாசத்தையும் இதில் குறித்திருக்கிறேன். கண்டுபிடித்து விடுவீர்களல்லவா?"

ஜபார் வாய் பேசாமல் வெடுக்கென்று வாங்கிக் கொண்டு விரைந்தார்.

அந்தச் சீட்டில் இருந்த பெயர்கள் : பீமாராவ், ரசகுண்டு!

- தொடரும்