New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

ஆகஸ்ட் மாத (2017) அக்கறை கூட்டம் (194'வது கூட்டம்)

 

ஆர்.கே. ராமநாதன்

 

க்கறையின் 194' வது கூட்டம் தேஜோமயாவில் மிகச் சரியாக மாலை 4 மணிக்கு துவங்கியது. பல மாதங்களாக வங்கிப் பணி காரணமாக - அதிலும் சமீப காலமாக மூன்றாம் சனிக்கிழமை முழுநேரப் பணியாகி விட்டதால் ஆரம்ப கால பேனல் நபரான நான் இதுநாள் வரை பங்கெடுக்க முடியாத சூழல். இம்முறை என் அருமை நண்பர் டாக்டர் பாஸ்கரன் ஜெயராமனையும்,  திருமதி கலாவதி பாஸ்கரனையும் முதல் முறையாக அழைத்துச் சென்றேன். அவருடனேயே காரில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டேன். கொஞ்சம் வழிக் குழப்பத்தால் அவரையும் சேர்த்தே கூட்டத்திற்கு தாமதப்படுத்தும்படி ஆகிவிட்டது.

நான் நுழையும்போது பள்ளி ஆசிரியை திருமதி உலகம்மாள் பேசிக்கொண்டிருந்தார். எந்த ஒரு செய்தியும் சரியான நபரிடமிருந்து வெளிப்படுவதின் தனிச் சிறப்பு குறித்து சொன்னார்.

அக்பர் பீர்பால் கதையொன்றில் ராஜா ஆணையிடுதலுக்கும் பீர்பால் போன்றவர்கள் ஆணையிடுதலுக்குமான கீழ்ப்படிதல் செயல்பாட்டு தனிச் சிறப்பை குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய கீதா சங்கரின் நட்பு வட்ட அன்பர் வெளிநாட்டிலிருந்தாலும் சென்னை விஜய தருணங்களில் அக்கறை சந்திப்பிற்கு வர தான் தனி அக்கறை எடுத்துக்கொள்வதை குறிப்பிட்டார்.

இருநூறாவது சந்திப்புடன் அக்கறை அமைப்பு முழுமை பெறுதல் குறித்து விசனப்பட்டார். (ஆனால் சில சமயங்களில் எதற்கும் ஒரு ஹேப்பி எண்டிங் வர வேண்டும் எனும் நிலை தவிர்க்க முடியாததே.)

பேச்சில் ஏய்ப்பாளர்கள் கொழிப்பதற்கும் நியாயவாதிகள் அல்லலுறுவதற்கும் ஆதங்கப்பட்டார்.

எனக்கு அவர் பேசும்போது fine is the tax for doing something wrong and tax is the fine for doing something right என்று எப்போதோ படித்த விஷயம் ஞாபகம் வந்தது.

கீதா சங்கர் - 'தரமணி' படத்தையும், அந்த நாளைய 'அவள் அப்படித்தான்' (ருத்ரையா, ரஜினி, கமல்,ஸ்ரீப்ரியா இளையராஜா காம்பினேஷன்) பற்றிக் குறிப்பிட்டார். சென்னையின் இதயப் பகுதியில் இருந்த அவர் தமது பூர்விக உடமை நிலத்தை அரசியல் பவர் சவாலை சட்டப்படி சமாளித்து வென்றதையும், இன்றைய அவரின் அகவை ஐம்பதுகளில் உதவி கேட்டுப்போன அவர் தெரு இஸ்திரிக்காரர் கூட அவரின் பெயரையும் அவரின் முயற்சி திருவினையாக்கிய பின்னர் பலரும் அங்கு நிம்மதியாய் குடிவந்ததை சொல்லி நினைவு கூர்ந்ததையும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் லக்ஷ்மி ரமணன் தன் ரயில் பயண அனுபவம் பற்றி அதில் சகபயணி இவரிடம் தன் (காலமாகிவிட்ட) சகோதரியின் முகம் பார்ப்பதாய் சொல்லி நெகிழ்ந்ததையும், பிறகு சிலநாளில் பத்திரிகையில் பிரபல கொள்ளையாயினி பட ஜாடை குழப்பமும் அவரது (பரிசு பெற்ற) ஏழாவது முகம் படைப்பிற்கு வித்திட்டதாக சொன்னார்.

ஓய்வுபெற்ற பேராசிரியை ஹேமா சந்தானராமன் தனது மாணவி எழுதிய 'அனுபவச் சக்கரம்' கவிதையை வாசித்து வாழ்க்கை அனுபவ நிலை சொன்னார். வெள்ளிவிழா, பொன்விழா, பவள விழா தவிர ஒரு வயது முதல் வயதுக்கு பெயர் குறிப்பு இருப்பதை பட்டியலிட்டார்.
 

 

வயது / விழா

1. காகித விழா
2. பருத்தி விழா
3. தோல் விழா
4. மலர் விழா
5. மர விழா
6. இரும்பு விழா
7. செம்பு விழா
8. வெண்கல விழா
9. மண்கலச விழா
10. தகர விழா
11. எஃகு விழா
12. லினன் விழா
13. பின்னல் விழா
14. தந்த விழா
15. படிக விழா
20. பீங்கான் விழா
25. வெள்ளி விழா
30. முத்து விழா
40. மாணிக்க விழா
50. பொன் விழா
60. வைர விழா
75. பவள விழா
100. நூற்றாண்டு விழா

என்று சரசரவென பட்டியலிட்டு.. தான் படித்து ரசித்த தமாஷுக்குரிய சிரிப்பலைகளையும் கூடவே கைதட்டல்களையும் பெற்றுக்கொண்டார்.

70 நூல்களுக்குமேல் தெலுங்குக் கதைகளை, நாவல்களைத் தமிழாக்கம் செய்த திருமதி கௌரி கிருபானந்தனின் முதல் மொழிபெயர்ப்புக் கதை 'எண்டமூரி வீரேந்திரநாத்' கதை என்றும், தபால்கார்டில் அதற்கு அவரிடம் அனுமதி வாங்கியதையும் சொன்னார்.

அவையின் அங்கத்தினர்கள் யாரேனும் தங்கள் படைப்புகள் தமிழிலிருந்து தெலுங்கில் மாட்லாட விரும்பினால் மொழிமாற்று உதவிசெய்ய ஆர்வம் காட்டுவதாகவும் சொன்னார்.

அடுத்தபடி பேசிய அவர் கணவர் திரு. கிருபானந்தன் பல நாடக மேடை கண்ட நடிகர், கதை வசனகர்த்தர்..

சமீபத்தில் சில படைப்பாளிகள் என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர்களை பற்றி எழுதியவர் கௌரி மிஸஸ் கிருபானந்தனாயிருந்து ஒரு இலக்கிய மீட்டிங்கில் எழுத்துலக ஜாம்பவான் சுஜாதாவால் மொழிபெயர்ப்பு சாதனை செய்த கௌரியை குறிப்பிட்டு பிறகே இவரை இவர்தான் கௌரியின் கணவர் என தான் மனைவி மூலம் மிஸஸ் கௌரி கிருபானந்தனிலிருந்து மிஸ்டர் ஆஃப் கௌரியானது தான் வாழ்வின் சந்தோஷ நாளென குறிப்பட்டார்.
 


அடுத்ததாக பேசிய புரொபசர் பழைய மெட்ராஸ் ஜி.டி. பி.டி. என்பதாக இருந்தது பற்றி குறிப்பிட்டார். ஜி. டி. என்பது ஜார்ஜ் டவுனையும் பி. டி என்பது பார்க் டவுனையும் குறிப்பிடப்பட்டதையும் அடையாறு மௌபரிஸ் இடங்கள் காடுகளாய் இருந்ததையும் சொன்னார்.

ம்ஹ்ஹ்ம்..

இப்போதுதான் மெட்ராஸ் சென்னையாகி.. அதுவும் தற்போது ஜி.எஸ்.டியாகவும் ஆகிவிட்டதே.!

அடுத்து பேசிய ஆர்.கே.ராமநாதன் அக்கரையின் உடனான தன் ஆரம்பகால நாட்கள் பற்றி சிலாகித்தார். தான் தொடர்ந்து வரமுடியாத பணிச்சூழல் சிரமம் குறித்தும் இனி வர முயல்வதாகவும் இம்முறை டாக்டர் பாஸ்கரனுக்கு தன்னை பங்கெடுக்க வைத்த நிலைக்கும் நன்றி சொன்னார். 88ல் கணையாழியில் வந்த தன் கவிதை முன்பு பேசிய அனுபவச்சக்கர கவிதையின் முன் சாயல் கொண்டதை கவிதையை மனப்பாடமாக கூறி நிறைவு செய்தார் உரையை.

கலாவதி பாஸ்கரன் தில்லானா மோகனாம்பாள் சண்முகசுந்தரம் மாதிரி மேடையில் பேசத்தெரியாது என்றும் தான் ஒரு வாசகி என்றும் (அவர் எழுதியும் கதைப்போட்டியொன்றில் தேர்வாளர் குழுவில் இருந்ததும் எனக்கு ஆந்தையாரும் கழுகாரும் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்) அடுத்தமுறை பேசும் முனைப்புடன் வருவதாகவும் தன்னடக்கத்துடன் சொன்னார்.

சித்திரை சிங்கர் அம்பத்தூர் கூட்டத்திற்கும் கிருபானந்தன் ஆழ்வார்பேட்டை கூட்டத்திற்கும் சென்றாகவேண்டிய அவசரநிமித்தம் கூறி சபையில் மன்னிப்பு / அனுமதி கேட்டு விரைந்தனர்.

டாக்டர் பாஸ்கரன் அடுத்து பேசினார்.

நம் தலைவர் ஜ.ரா.சு வின் எழுத்துத் திறமையை மிக வியந்தும், தன் போன்ற எளியோர்களின் (என்ன ஒரு தன்னடக்கம்!) படைப்புகளையும் மனம் விட்டு சிலாகித்தும் ஊக்குவித்தும் பாராட்டும் பாக்கியம் ஸாரின் ஸ்பெஷாலிட்டி பற்றி நன்றியுடன் சொன்னார்.

சபை மொத்தமும் அவரின் இந்த சிறப்பு குணம் தம்தம் அனுபவரீதியாய் உணர்ந்தே இருந்ததால் தன்னை மறந்து இயல்பாய் அங்கீகார கரவொலி தந்தது நமக்கான சந்தோஷ தருணங்களே.. ரமண மகரிஷி வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவமும் (வேத மந்திர குரு பரம்பரை கற்றல் குறித்து) சுவாரஸ்யமாக சொன்னார்.

பின்னர் பேசிய நாடக சின்னத்திரை சினிமா (ரஜினியின் சிவாஜி, ஈரம், திருமணம் எனும் நிக்காஹ் பட புகழ்) பிரபலர் எம்.பி.மூர்த்தி வருகை தாமத மன்னிப்பு கேட்டு சந்திப்பிற்காக தான் கிளம்பி வந்த கால் டாக்ஸி டிரைவரிடம் ஒரு பெரியவர் இன்னொருவரிடம் நம்பிக்கை வைத்து இழந்த பெருந்தொகை ஏமாற்ற சோகம் டிரைவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தையும் அது தி.ஜானகிராமனின் படைப்பொன்றை நினைவு படுத்தியதையும் சொன்னார்.

மிகுந்த கஷ்டங்கள் மற்றும் ஊரில் புழங்கும் அடுத்த தலைமுறை மனிதர்க்கு மத்தியில் மாயவரத்தில் தான் பாதுகாத்து வரும் பூர்விக வீடு பற்றி குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய பாலசுப்பிரமணியன் தன் பேச்சினூடே எம்.பி. மூர்த்தியின் 'நாற்காலிக்கு இடமில்லை' நாடகத்தில் அப்பாவின் நாற்காலிக்கான மதிப்பு நிலையும் யதார்த்த சுமையாகும் சமகால நிலை பற்றியும் சொல்லிச் சென்றார்.

ஆல் இண்டியா ரேடியோ ஞானப்பிரகாசம் அவர்கள் ரெயின்போ அலைவரிசை பணியாற்றி ஓய்வு பெற்றவர். நகைச்சுவை ததும்ப பேசுபவர். மிமிக்ரியிலும் வல்லவர். பெரிய பெரிய தலைவர்களின் சிறப்பு நாட்களை பதிவுசெய்து அதுகுறித்து ஒலிபரப்பும் செய்யும் காலம் போய் தற்போது தனியார் சேனல் ஒன்றில் நடிக நடிகையரின் பிறந்தநாள் விசேஷ தினங்கள் பற்றி பேசுவதாக சொன்னார்.

டி.எஸ். பாலையாவின் நூற்றாண்டு வருவதாய் சொன்னவர் இரண்டு முறை அழுத்தம் கொடுத்து உச்சரிக்கும் அவரின் ஸ்டைலை மிமிக்ரி செய்து சிரிக்க வைத்ததும் 'காதலிக்க நேரமில்லை'யில் நாகேஷிடம் கதை கேட்கும் பாலையா டைரக்டர் ஸ்ரீதரின் பரிந்துரைக்குப்பின் பாலையா அப்போதைய டைரக்டர் தாதாமிராஸியின் கதைகேட்கும் ரியாக்‌ஷன் தரும் பாணியை பிரதிபலித்ததையும் சொன்னார்.

அடுத்து ஸ்டாக் மார்க்கெட் ஸ்பெஷலிஸ்ட் கிருஷ்ணமூர்த்தி பேசினார். அமெரிக்கா Puma, Adidas கம்பெனி சகோதர சண்டையால் பட்ட பிரச்னைகளையும், ரேமண்ட்டில் வந்த சகோதர பிரிவினை ரிலையன்ஸ் குழும நிலவரமும் அதனால் அந்நிறுவனங்களின் ஷேர் மார்க்கெட்டில் ஏற்படுத்தும் Cascade Effect பற்றியும் சொன்னார். நிதான அணுகு முறையும் நீண்டகால நிதான திட்டமிடலும் பங்குச்சந்தை முயல்வோர்க்கு அவசியம் என்றார்.

ஆளுக்கு ஆறு நிமிடம் தந்து நேரக் கணக்கை நேர் கணக்காக்கிய நெறியாளர் ராணிமைந்தன் கூட்டத்தை நன்றி கூறி நிறைவு செய்ய, சாக்லேட் சமூசா சிப்ஸ் குளிர்பானமாய் சிறு உணவுடன் பெரு நிறைவாய் முடிந்தது இன்றைய அக்கரையின் 194'வது இனிமை சந்திப்புக் கூட்டம்..!