New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

என் பீரோக்களும் நானும்!

வேதா கோபாலன்

 
ங்க வீட்டுக்குத் திருவாளர் திருடர் வந்தால் என்ன செய்வார் தெரியுமா? விடை பிறகு இப்போது ..

கிளைத் தலைப்பு நானும் என் சேலைகளும்

சேலைன்னாலே தலைப்புதானே என்று ஜோக்கடிக்கும் போன ஜெனரேஷன் நண்பர்கள் எனக்கு இல்லை என்பதால் நேராக சப்ஜெக்டுக்குள் பாய்ஞ்சுடுவோம் நான் முதல் முதலாய்ச் சேலை கட்டியது ஐந்தாவது வயதில்.

உண்மைங்க.

டீச்சர் விளையாட்டு விளையாடியபோது அம்மாவின் சேலையைக் கட்டினேன். அது ஒன்பது கெஜம் சேலை என்பதால் ஒரு சுற்று சுற்றி மிச்சத்தை நீ….ளமாக விட்டு மண்ணில் அழுக்காக்கி … அம்மா அதைப் பார்க்க…. மீதி விவரவமெல்லாம் கம்பெனி சீக்ரட் அடுத்து ஆறாம் வகுப்பு. நவராத்ரிக்கு அக்காவின் பிங்க் நிற சேலை. நான் என்னங்க செய்ய,. அன்றைக்கு மழை. தொப்பல். சொதப்பல். (கீதா அக்காவின் பாலிசி ‘பொருள்தனைப் போற்றி வாழ்‘. அதுக்கு நானா பொறுப்பு? she has to change her) .அக்கா அந்த சேலையைப் பார்க்க😀 மீதி விவரவமெல்லாம் கம்பெனி சீக்ரட் முதலில் சேலை கட்டியபோது அப்பா வழக்கமான டாடி டயலாக் சொன்னார். பிறகு கல்லூரி படிக்கும்போது ஏராளமான சேலைகள் பாராட்டுப் பெற்றன. ஆனால் நான் யாரிடமும் சொல்லவில்லை… தொண்ணூறு பர்சன்ட் அக்காவுடையது என்று (நாலரை மீட்டர் மட்டுமா என்று கேட்கும் நண்பர்களைப் பார்த்து வேதா ‘ஙே‘) முதல் சேலை வாங்கியது கல்லூரி சேர்ந்த வருடம், பிஸ்தா ஐஸ்க்ரீமில் பத்து லிட்டர் தண்ணீர் விட்டுக் கரைத்த கலர்.

“ஐயய்யோ,, நீ தரையெல்லாம் பெரட்டுவியே,, கால் கிட்ட சாணிக்கலராயிடுமே.. வீட்டில் இனி துடைப்பமே வாங்க வேண்டாம்“ என்று முதல் ஆசீர்வாதம் செய்தவர் என் அத்தை.. அன்றுவரை எனக்கு அத்தையைப் பிடித்துக்கொண்டுதான் இருந்தது.

பிறகு அண்ணா திருமணத்துக்கு நான் நூறு நூற்றைம்பது வருஷங்களாக ஆசைப்பட்ட (நிஜமாங்க.. ரெண்டு மூணு ஜென்மங்களைக்கூட்டிக் கழிச்சுப் பாருங்க .. விடை சரியா வரும்) க்ரீம் கலரில் வயலெட் பார்டர் பட்டுச் சேலை. (அப்புறம் யாரைப் பார்த்தாலும் அதே காம்பினேஷன். வெறுத்துட்டேன்)

பட்டமளிப்பு விழாவுக்காக சேலை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டபோது செலக்ட் செய்து கொடுத்தவன் தம்பி ஸ்ரீதர். சூப்பரான எலுமிச்சை நிற எம்பிராய்டரி சேலை (எம்பிராய்டரியும் பெயின்டிங்கும் வாழ்வின் லட்சியம்).

ஆனால் பட்டமளிப்பு போட்டோவில் மட்டும் அண்ணா திருமணத்தின்போது வாங்கிய ஸாரி...

கோபால் அண்ணா அழைத்துப்போய் வாங்கித் தந்த வயலெட் நிற எல்பார் (பாரகன்) என் வட்டாரத்தில் மிகப் பிரபலம்.

இதன் பிறகு நேரடியாக என் கல்யாணத்துக்குத்தான் சேலை பர்ச்சேஸ். பாய்ஞ்சு பாய்ஞ்சு எடுத்தேன்.

புகுந்த வீட்டில் அடிஎடுத்து வைத்தபோது என் அத்தனை சேலைகளும் ஒரு சின்ன சூட்கேஸில் அடங்கிவிட்டன.

அப்புறமும் எல்லோரையும் போலத்தான்… தீபாவளி.. திருமண நாள் என்று சாதாரண பட்ஜெட்டில்…

கட்

என் மகன் திருமணம். அவனுக்கு அன்பளிப்பு கொடுப்பது இயல்பான விஷயம். ஆனால் ஒரு நண்பர் தன் மனைவியுடன் வந்து இரண்டு பார்சல்கள் கொடுத்தார்.

“ஒன்று உங்களுக்கு ஒன்று உங்க மகனுக்கு..... பிடிச்சிருக்கா பாருங்க..".

அடுத்த நாள் பார்சல்களைப் பிரித்தபோது அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன். யாராவது கல்யாண மாப்பிள்ளையின் அம்மாவுக்கு சேலையும் அப்பாவுக்கு பேன்ட் ஷர்ட்டும் கொடுத்து நீங்கள் பார்த்ததுண்டா? அதைப் போற்றிப் பாதுகாத்து இன்று வரை பத்திரமாக வைத்திருக்கிறேன்

அதன் பிறகு…

அம்மா.. பிடிச்சிருக்கா பாருங்க..
அக்கா… பிடிச்சிருக்கா?
வேதா… பிடிச்சிருக்கா?
மேடம்… பிடிச்சிருக்கா?
டீயேய்… பிடிச்சிருக்கா டீ?
அந்த நண்பரின் மனைவிக்கு ராசியான கை.

என் காம்பவுண்டில் குடியிருக்கும் 80 வயது பாட்டி கேட்டார் “எனக்கு அமெரிக்காவிலிருந்த சேலை வாங்கிண்டு வரியா?”

“அங்க யாரும் சேலை கட்ட மாட்டாங்கம்மா,. அதனால் சேலைக்கடைகள் இருக்காது”

“நல்லிக்கு அமெரிக்காவில் பிராஞ்ச் இருக்காமே?”

வேதா ‘ஙே‘ நைஸாக உள்ளூர் நல்லியில் ஒரு சேலை வாங்கிக்கொடுத்துவிட்டேன். (உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம்)

சரி இப்ப அந்தக் கேள்விக்கு மீண்டும் வருவோம்..

எங்க வீட்டுக்குத் திருவாளர் திருடர் வந்தால் என்ன செய்வார் தெரியுமா?

அத்தனை பீரோக்களையும் திறந்து பார்த்து தங்கம் வைரம் எதுவும் இல்லாமல் புத்தகங்கள் மட்டுமே இருப்பதைப் பார்த்து.. வேதாவை சதக் சதக்கென்று…

பின் குறிப்பு.. நான் கல்லூரியில் படித்தேன் என்றும் பட்டம் வாங்கினேன் என்றும் உங்களை நம்ப வைக்கத்தான் இந்தப் பதிவு என்று நினைப்பவர்களுக்குச் சுருக்கென்று ஒருகேள்வி …

ஹிஹி எப்டிங்க இப்டி கரெக்ட்டு கரெக்டா கண்டுபிடிக்கறீங்க?