New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

சட்டைகள் கிழிவதில்லையடி பாப்பா!

 பாக்கியம் ராமசாமி

 
னது சமீபத்திய கவலைகளில் ஒன்று: பழைய சட்டைகள் ஏராளமாகச் சேர்ந்துவிட்டன என்பதுதான்.

பழைய பேப்பர் என்றால் எடைக்குப் போட்டுவிடலாம். பழைய சட்டைகளை அப்படிப் போடுகிற வழக்கமில்லை. எவர் சில்வர் பாத்திரக்காரனிடம் முயன்று பார்க்கலாமென்றால் பழைய சரிகைப் புடவை மாதிரி அவன் எடுத்துக் கொள்வானே தவிர சட்டையைச் சீண்டுவதில்லை.

அதுவும் வெள்ளைச் சட்டைகளுக்குக் கூடுதலான அலட்சியம். அதிலும் பழைய கதர் சட்டைகளென்றால் பாத்திரக்காரன் ஓடியே போய்விடுகிறான்.

"இதுகளையெல்லாம் என்ன செய்வீர்கள். புதையலைப் பூதம் காக்கிறாப்போல் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று மனைவியின் கண்டனம் அவ்வப்பொழுது வரும்.

"நீ உன் பழைய புடவைகளை என்ன பண்ணுகிறாய்?"

அவள் முகமலர்ச்சியுடன், "வேலைக்காரிதான் காத்துக் கொண்டிருக்கிறாளே. அப்புறம் காய்க்காரி, பழக்காரி என்று வருகிறவர்களும் கேட்பார்கள். கொடுத்து விடுகிறேன். சொல்லப் போனால் இப்போ என்கிட்டே மூணு நாலு புடவைதான் இருக்கு. நானே உங்களிடம் கேட்க வேண்டுமென்று இருந்தேன். புதுசா நாலு புடவை வாங்கணும்."

அவளை ஏண்டாப்பா கேட்டோமென்றாகிவிட்டது.

"சரி. உங்க பழைய சட்டை வேட்டிகளை மூட்டையாகக் கட்டி வையுங்கள். உங்கள் நண்பர் நாராயணன்..."

"சே சே! என்னடி! அவனிடமில்லாத சட்டையா? அவன் எழுபத்திரண்டு சட்டை வைத்திருக்கிறான்!"

"அடக் கடவுளே! அவருக்குத் தரணும்னு நான் சொல்லவில்லை. அவருக்கு ஏதோ ஒரு அனாதை விடுதி தெரியுமே - 'புது வாழ்க்கை' என்று. அங்கே கொண்டு போய்த் தந்து விடலாமே..."

"அங்கேயெல்லாம் கேட்டுப் பார்த்தாச்சு. துணி மணின்னா கொண்டு வராதீங்க. அரிசி, பருப்பு, எண்ணெய் சர்க்கரை இப்படின்னா வாங்கிக்கிறோம். ரொம்ப சவுக்கியமானது பணம். பணமாத் தந்தால் கோடி ரூபாய்கூட வாங்கிக் கொள்வார்களாம்," என்றேன்.

மனைவி சமையலறைக்குப் போய்விட்டாள். அவளைப் பார்க்கப் பொறாமையாயிருந்தது. தனது பழைய துணிகளைத் தள்ளிவிட அவளுக்கு ஏதோ வழி இருக்கிறது.

எனக்குத்தான் வழி தெரியவில்லை. ஆனாலும் என் முயற்சியை நான் விடவில்லை. பேராசையாக என்னிடமுள்ள அத்தனை பழைய சட்டையையும் தள்ளிவிடப் பார்க்கலாகாது. அப்பப்போ சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் தந்துவிடலாம் என்று முடிவெடுத்தேன்.

முதலில் ஒரு டஜன் சட்டைகளை எடுத்துக்கொண்டேன். ஸ்கூட்டரில் சட்டை மூட்டையுடன் மனத்துக்குத் தோன்றி பாதையில் ஸ்கூட்டரை விரட்டியவாறு சென்றேன். ஓர் இடத்தில் கட்டிட வேலை நடந்துகொண்டிருந்தது. சுமார் பத்துப் பனிரெண்டு பேர் சட்டை போடாமல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள ஸ்கூட்டரை அவர்கள் அருகே நிறுத்தினேன். வயதான ஒருத்தரை அணுகி வணக்கம் என்றேன். "பெரியவரே உங்களுக்கெல்லாம் சட்டை கொடுத்தால் போட்டுக் கொள்வீர்களா?" என்றேன். மூட்டையை காட்டினேன்.

உதட்டை பிதுக்கினார். "நாங்கெல்லாம் பிச்சைக்காரங்கள் இல்லை. உழைத்து சம்பாதித்து சாப்பிடுகிறவங்க. ஒருத்தர் போட்ட சட்டை ஒருத்தர் போடமாட்டோம். போய் வேலையை பாருங்கள்."

நாட்டில் சுயகவுரவம் சுதந்திரத்திற்குப் பின் பட்டொளி வீசுகிறது என்ற ஞானம் ஏற்பட்டது. வீட்டுக்கு அயர்ச்சியுடன் வந்து சேர்ந்தேன்.

கத்திக்குச் சாணை பிடிக்கிற மாமூலான பாய், "சாணா, பிடிக்கிறதேய்!" என்று குரல் கொடுத்தார்.

இன்முகத்தோடு அவரிடம் இரண்டு கத்தி, அரிவாள்மணையெல்லாம் தந்தேன். (கூர்மை இருந்தாலும் தந்தேன். என் புத்தி கூர்மையை மெச்சிக் கொண்டேன்.) அவர் மெதுவாக சாணை பிடிக்கையில் என் விஷயத்தைத் தெரிவித்தேன். "பாய்! என்கிட்டே நல்ல நல்ல சட்டையெல்லாம் கிழியாமல் நிறைய இருக்கிறது. உங்க சைஸ்தான். ஒரு அரை டஜன் தரட்டுமா?"

அவர் சிரிப்புடன் ஒரு சலாம் செய்து, "குடுங்கோ சாமி, குடுங்கோ," என்றார்.

என்னைக் கலி தீர்க்க வந்த தெய்வ அருளின் முதல் இன்ஸ்டால்மெண்ட்!

உள்ளே போய் ஒரு டஜன் சட்டைகளை அள்ளித் தூக்கி வந்தேன்.

சட்டைகளைத் பார்த்ததும் அவர் முகம் அந்த சட்டைகள் போலவே ஆயிற்று. மங்கி ஒளியிழந்து...

"வெள்ளைச் சட்டைங்களா? நாம்ப செய்யற வேலைக்கு வெளுப்பு சரிப்படாதுங்க. கலர் சட்டையா இருந்தாக் குடுங்க."

நான் பிறந்ததிலிருந்து வெள்ளைச் சட்டைதான். நாடு சுதந்திரம் பெற்ற பின்னும் நான் கதர் சட்டைதான்.

சாணாக்காரர் என் சட்டைகளை ஏற்க மறுத்த நிகழ்ச்சி என் மனசை வாட்டியது.

நாராயணன் ஒரு யோசனை சொன்னான். "எல்லாத்தையும், ஏதாவது ஒரு அடாஸ் லாண்டரியில் போடுங்கள். பில் தருவான். அதைத் தொலைத்து விடுங்கள். அப்படியே உங்கள் அட்ரஸைப் பிடித்து அந்த லாண்டிரிக்காரன் துணி கொண்டு வந்தாலும் கவலைப்படாதீர்கள். காலரையெல்லாம் செங்கல் போட்டுத் தேய்த்துக் கிழித்து வைத்திருப்பான்."

"'சட்டையை நீ கிழிச்சுட்டே. எனக்கு அவை தேவையில்லை. எடுத்துப் போய்விடு? நீ நஷ்ட ஈடு ஒன்றும் தரவேண்டாம் என் கண்ணிலேயே இது பட வேண்டாம்' என்று கத்துங்கள்.

"அவன் கொஞ்சம் கெஞ்சிவிட்டு வாசலில் வைத்துவிட்டுப் போய் விடுவான்.

"அது வாசலிலேயே இருக்கட்டும். எத்தனை நாள் வேணும்னா இருக்கட்டும். நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். ஏதோ ஒரு நாள் எவனாவது அதைத் தூக்கிப் போய்விடுவான். நம்பிக்கைதான் வாழ்க்கை."

ஆம்! நாராயணன் சொன்னபடி நம்பிக்கைதானே வாழ்க்கையின் அஸ்திவாரம்!