New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

 ஜ.ரா. சுந்தரேசன்

 
டாக்டர் செங்குப்தா என் வரவுக்காகக் காத்திருப்பார். எந்த நிமிடமும் அவர் போன் செய்யக்கூடும். நான் ஷேவ் செய்து கொள்ள வேண்டும். இந்த உடையை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நேதாஜி போஸ் விமான நிலையம் புதுப் பொலிவுடன் இருந்த அளவு, கல்கத்தா புதுப் பொலிவு பெற்றிருக்கவில்லை. கறுப்பன் பழைய கறுப்பனே என்பது போல கல்கத்தாவின் அழுக்கும், நெரிசலும், பழமையும், புழுதியும், டிராஃபிக் ஜாமும் அப்படியே இருந்து வருகிறது என்பதற்கு இந்த ரஸல் ஸ்ட்ரீட்டும், இந்த ஹோட்டல் கெனீல் வொர்த்துமே சாட்சி.

ராத்திரி பதினொரு மணிக்கு வந்தவனுக்கு விடுதி தேடி அலைய நேரமில்லை என்பதால் இந்தப் புராதன ஹோட்டலைத் தேர்ந்தெடுக்கும்படி ஆயிற்று.

ஹோட்டல் குவாலிடி இன்னில் தங்க வேண்டியவன். டாக்சி வாலா இந்தப் பழசைச் சிபாரிசு செய்து வைத்தான்.


இரவுத் தூக்கம் வெகு முக்கியம். ஹோட்டல் கட்டிடம் பிரம்மாண்டமாக இல்லையென்றாலும் ரூம் மிகப் பெரியது. மிகப் பழசு. பிரிட்டிஷ்காரன் இந்தியாவைக் காலி செய்து கொண்டு போனபோது சில மரச்சாமான்களை இங்கேயே கட்டாயம் விட்டுச் சென்றிருப்பான் என்று தெரிகிறது. அவைகளில் சில ஹோட்டல் அறையில் இருந்தன. டெலிபோன், நாற்காலிகள், மேஜைகள், அலமாரிகள் சகலமும் கவுரவமான பழசு. உயரத்திலிருந்து தொங்கிய சரவிளக்கு சத்யஜித்ராயின் 'சாருலதாவை' நினைவுபடுத்தியது. காலையில் எழுந்திருப்பதற்குள் நானும் ரொம்பப் பழசாகி விடுவேன் போலிருந்தது.

காலையில் எட்டு மணிக்குத்தான் எழ முடிந்தது. எட்டரைக்கு டாக்சி பிடித்து ஐ.ஐ.எம்., முக்குப் போகத்தான் நேரம் சரியாக இருந்தது.

வருடா வருடம் நேரில் வந்து இளைஞர்களின் தகுதி அறிந்து கொத்திச் செல்லும் மாமூல் திருவிழாதான் இந்த கேம்பஸ் செலக்‌ஷன்.

பிஹேவியரல் ஸயன்ஸ் புரொபசர் டாக்டர் செங்குப்தா மிகுந்த உபகாரி. ஷார்ட் லிஸ்ட் செய்து இருபது மாணவர்களைப் பற்றி மட்டும் பயோடேட்டா கொடுத்திருந்தார். முதல் தினம் எங்கள் ஸாஃப்ட்வேர் கம்பெனியின் தம்பட்டத்தை மாணவ மணிகளுக்கு அடிக்க வேண்டியிருந்தது. செங்குப்தா அதற்கும் மிக உதவியாக இருந்தார். எங்கள் கம்பெனி பற்றி வெகு நன்றாக அறிந்து வைத்திருந்தார். என்னை விட மிகச் சிறப்பாக கம்பெனியை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மாலை மூன்று மணிக்குள் பத்து மாணவர்களைத்தான் இன்டர்வியூ செய்ய முடிந்தது. என் களைப்பை உணர்ந்தவராக "மீதியை நாளைக்கு வைத்துக் கொள்ளுங்களேன்" என்றார். அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டேன். தனது வீட்டுக்கு வந்து ஒரு டீ குடிக்க வேண்டும் என்று அன்பு அழைப்பு விடுத்தார்.

டாக்டர் செங்குப்தாவின் இல்லம் ஐ.ஐ.எம்., காம்ப்ளெக்சுக்குள்ளேயே இருந்தது. புல்லும், புதரும், பசுமையும் ஓர் இனிய சூழலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. காம்ப்ளெக்சின் அழகை மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது ஜோகாலேக். பிரம்மாண்ட காம்பவுண்டு சுவரைத் தாண்டி சிறிது சென்றால் பெரிய ஏரி என்பது ஆர்க்கிடெக்டின் மிக நல்ல கற்பனை.

ஏரியில் சில மாணவர்கள் படகுகளில் சுற்றிக் கொண்டிருந்தனர். சூரிய ஒளியில் ஏரியின் தகதகப்பும் நிழல் உருவமாகத் தெரிந்த படகுகளும், அதில் தெரிந்த உருவங்களும்... செங்குப்தா சட்டென்று கேட்டார்.

"உங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பது சாம்பல்தானே?"

நான் துளி விபூதியை ஈரப்படுத்தி நெற்றியில் தீற்றிக் கொள்கிற வழக்கமுடையவன்.

"விபூதி!" என்றேன். "சுத்திகரிக்கப்பட்ட சாம்பல்!"

"புனிதமானது" என்று புரொபசர் முணுமுணுத்தார். "சாம்பல்கள் புனிதமானவை மிஸ்டர் அருண்! நான் சொல்வது சரிதானே... நான் அப்படி நம்புகிறேன்... நீங்கள் நம்பிக்கை வைத்து இட்டுக்கொள்கிறீர்களா? பழக்க தோஷத்தால் இட்டுக் கொள்கிறீர்களா?" படபடப்பு தெரிந்தது அவர் குரலில்.

புரொஃபசர் திடுமென்று ஏன் இத்தனை உணர்ச்சி வசப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால், நான் அதை அப்பொழுது விசாரிக்கவில்லை. ஏனெனில் காலையில் வரவேற்ற பிளேஸ்மென்ட் ஆபீசர் ராய் எங்களை நோக்கி வந்தார்.

"புரொபசர், உங்களை எல்லா இடமும் தேடி விட்டேன். உங்கள் வீட்டிலிருந்து போன். உடனே தேடி அனுப்பச் சொல்லி உங்கள் மகன் சொன்னார்..."

புரொஃபசர் பதறவில்லை. நிதானமாக, "ஆல் ரைட்... நான் புறப்படுகிறேன். மிஸ்டர் ராய்," என்று கூறி அவரை அனுப்பிவிட்டு மெளனமாக நடந்தார்.

"ஸாரி..." என்றேன். "ப்ராப்ளம் போலிருக்கிறது."

"அது ஒன்றுமில்லை. வழக்கமான தொந்தரவுதான். அதற்கான மருந்து என் பாக்கெட்டில் இருக்கிறது. அதுவும் கூடச் சாம்பல்தான்..." என்று சிரித்தவாறு தன் நீண்ட ஜிப்பாவின் மார்ப்புறப் பையில் கையை நுழைத்து ஒரு குட்டியான பிளாஸ்டிக் உறையை எடுத்தார்.

"ஆஷா மாதாவின் ஆஷ்! சாம்பல்!" சொல்லியவாறு ஜாக்கிரதையாகப் பிரித்துக் காட்டினார். காற்றில் சாம்பல் பறந்து விடாதபடி பொத்திக் கொண்டு காட்டினார்.

"எந்தக் கோவில் பிரசாதம்!" என்றேன். அந்தக் கேள்வியைத் தெற்கே இருந்து வந்த காற்று அவர் காதில் படாதவாறு தள்ளிச் சென்றிருக்க வேண்டும். ஹாஸ்டல் மாணவர்கள் சிலர் எங்களைக் கடந்து கும்பலாகச் சென்றனர். ஒவ்வொருத்தனுமே அஜீத் மாதிரிதான். பிளேசர் கோட், டை, இருபத்திரண்டு, இருபத்து மூணு வயசு கலப்படமில்லாத வாலிபம், மேதாவிக்களை சொட்டும் முகம்.

இவர்களெல்லாம் சாதா மாணவர்களல்ல. எங்கள் சி.இ.ஓ., அடிக்கடி குறிப்பிடுவாரே அது போல 'க்ரீம் அஃப் தி சொஸைட்டி.' இவர்களை வேலையில் சேர்த்துக் கொள்ள கம்பெனிகள் போட்டி போடுகின்றன.

"சாம்பலை நீங்கள் பார்த்தாயிற்றா?" என்றார் புரொஃபசர் செங்குப்தா.

தலையாட்டினேன். "எந்தக் கோவில் என்று நீங்கள் சொல்லவில்லை."

செங்குப்தா பதில் சொல்லாமல் மௌனமாக நடந்தார். அவர் வீட்டில் என்னவோ நடந்திருக்கிறது. அவரைத் தேடி வந்து அவரது நண்பர் ராய் சொல்லியிருக்கிறார். ஆனால் செங்குப்தா விரைந்து செல்லாமல் சாவகாசமாக இருக்கிறார்.

"நான் நாளை வரட்டுமா டீக்கு..." என்றேன்.

"நோ... நோ..." என்றார் செங்குப்தா.

"நீங்கள் பயப்படும்படியான ஒன்றும் இல்லை. மாமூலான சமாச்சாரம்தான்" என்றவர் பெருமூச்சு விட்டார். "காலதாக்கிக்கு நான் சென்று நீண்ட நாளாகி விட்டது..." என்றார்.

"அது என்ன இடம்?" என்றேன்.

"பதிவிரதையின் சாம்பல் உள்ள இடம். ஒரு குக்கிராமம்..." புரொஃபசர் சொல்லத் தொடங்கிய போது மழைத் துளிகள் சடசடக்கத் தொடங்கின.

"நாம் ஒதுங்கிக் கொள்வது நல்லது..." என்று புரொபசர் என்னை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு அருகிலுள்ள ஹாஸ்டல் வராந்தாவுக்கு விரைந்தார். மழை பின்னி எடுத்தது. இடி, மின்னல்.

சில மாணவர்கள் மிகுந்த மரியாதையுடன் அறைக்கு உள்ளே வந்து தங்கும்படி வேண்டினர். புரொஃபசர் இரு நாற்காலிகள் மட்டும் உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

"இப்படி ஒரு மழையை ரசிக்காமல் உள்ளே போய் முடங்குவதாவது... சில கோயின்ஸிடன்ஸ் பார்த்தீர்களா?"

"ஊம்" என்றேன்.

"நான் சாம்பலை எடுத்தேன். ஆஷா மாதாவை நினைத்தேன். மழை கொட்டுகிறது!"

நான் பிரமையில் பேசாதிருந்தேன். சூடாக இரண்டு கோப்பைகளில் டீ கொணர்ந்தார் ஒரு மாணவர். அவருக்கு நன்றிகூட செங்குப்தா சொல்லவில்லை. அவர் நினைவு எங்கோ இருந்தது. பைப் பிடிக்கும் பழக்கம் செங்குப்தாவுக்கு உண்டு போலும். டீயை வைத்துவிட்டு பைப்பை நிரப்பிக் கொண்டார்.

எந்த மண்ணில் விளைந்த புகையிலையோ. மிகுந்த நறுமணம், வராந்தா எங்கும் பரவியது. அவர் வாயிலிருந்து சில விவரங்கள் நான் கேட்காமலே அவிழ்ந்து கொண்டன. பழங்கள் கனிந்து உதிர்வது போல அவை தாமாக உதிர்ந்தன.

"அருண்! உங்களுக்கு மட்டும் நாளை மறுநாள் ஜாம்ஷெட்பூர் புரோக்ராம் இல்லையென்றால், நான் நிச்சயம் உங்களை காலதாக்கி கிராமத்துக்கு அழைத்துப் போவேன். நீங்கள் சாம்பலில் நம்பிக்கை உள்ளவர்தானே? மகிமையான சாம்பல்!"

"விடாமல் சுவரிலிருந்து கொட்டிக்கொண்டிருக்கிறதோ?" என்றேன்.

"நோ... நோ... அது மாதிரி சித்துகள் ஏதுமில்லை" என்று மறுத்தார்.

"லெஃப்டினன்ட் கவர்னர் சர். ஆண்ட்ரூ கூறிய மாதிரி - அந்தத் துகள்களில் இந்தியப் பெண் குலத்தின் தூய்மையும், பண்பாடும், தெய்வீகமும் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கும்."

ஜாம்ஷெட்பூருக்கு நான் போன் செய்து விட்டேன் - எனது வருகை தாமதமாகும் என்று! ரயிலில் எப்படியாவது இடம் பிடித்து விடலாம் என்று செங்குப்தா தெரிவித்தார். நான் அவர் கூறிய காலதாக்கி கிராமத்துக்கு வருவதற்காக ஜாம்ஷெட்பூர் பயணத்தைத் தள்ளிப் போட்டதில் அவருக்கு மிகுந்த திருப்தி.

"நாம் வீட்டுக்குப் போகலாமென்று நினைக்கிறேன்" என்றார் செங்குப்தா. மழை நின்றிருந்தது.

செங்குப்தாவின் மாநிற மேனி, மழை கோத்த மேகம் போலிருந்தாலும் முகமென்னவோ வெண்மேகம் போல் லேசான நிறத்திலிருந்ததால் அங்கே நிலவிய ஒரு சிரிப்பைப் பார்க்க முடிந்தது. "என் மிஸஸ் டீ போடும் மூடில் இருப்பாளோ மாட்டாளோ... ஆகவே, நாம் 'ஓவர் எ கப் அப் டீ' பேச முடியாது" வாய் விட்டுச் சிரித்தார். எனது குழப்பத்தைத் தெரிந்து கொண்டார். "வீட்டில் உங்களுக்கு விடை கிடைக்கும்" என்றார்.

செங்குப்தாவின் வீட்டுக் கதவு இறுக்கமாக சாத்தியிருந்தது. ஜன்னல் திரைகள் கூட ஏதோ ரகசியத்தைப் பாதுகாக்கப் போடப்பட்ட இரும்புத் தகடுகள் போல் அசைவற்று விறைப்பாக இருந்தன.

பஸ்சரை இரண்டு மூன்று தரம் செங்குப்தா அழுத்தியபின் ஓர் இளைஞன், அவர் மகனாக இருக்கவேண்டும் - கதவைத் திறந்தான். "விருந்தாளியுடன் வந்திருக்கிறேன்," என்றார் சிரித்தவாறு.

இளைஞன் பரபரப்புடன், 'எக்ஸ்க்யூஸ்மி... நீங்கள் சிறிது வெயிட்' செய்ய வேண்டும். ப்ளீஸ். நான் அரேஞ்ச் செய்து விட்டு வந்து விடுகிறேன்" என்று திரும்பினான்.

செங்குப்தா, "பரவாயில்லை... நண்பருக்கு நம் வீட்டு விஷயங்கள் தெரிவதில் தப்பில்லை" என்று ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.

ஹால் இருந்த அலங்கோல நிலை என்னை அதிர்ச்சி கொள்ள வைத்தது. நாற்காலிகளும், டீபாய்களும் மூலைக்கொன்றா தாறுமாறாக வீழ்ந்து கிடந்தன. சமையலறையிலிருக்க வேண்டிய சாமான்கள், ஹாலில் வீசப்பட்டு யுத்த பூமிபோல் காட்சி தந்தது.

செங்குப்தா அமைதியாக "என் மனைவிக்கு அடிக்கடி இப்படி ஹிஸ்டீரியா வருவது உண்டு, ஒரே ஆறுதல் அந்த வியாதிக்கு என்னிடம் மருந்து உண்டு. அது நான் செய்த பாக்கியம்" என்றார்.

"மிருணா... இங்கே ஒரு நிமிஷம் வாம்மா."

அவரது மனைவியை, மகன் கையைப் பற்றி அழைத்து வந்தான். அவள் உடலிலும் முகத்திலும் ரவுத்ரம் இன்னும் விடைத்துக் கொண்டிருந்தது. விரிந்த கூந்தலும், வெறித்த பார்வையும் அவள் காள தேவி போலிருந்தாள். வியர்வையாலோ அல்லது யாராவது தண்ணி கொட்டியோ அவள் முகம் முழுவதும் ஈரம் கொட்டியது.

செங்குப்தா அமைதியாக தன் ஜிப்பாவுக்குள்ளிருந்து சாம்பல் பாக்கெட்டை எடுத்தார். ஒரு துளி எடுத்து மனைவியின் நெற்றியில் இட்டார்.

அடுத்த கணம்தான் அந்த ஆச்சரியம் நடந்தது.

பத்ரகாளி மாதிரி இருந்த அந்த அம்மையார் பரம சாந்தமாகி, அவசரமாக தன் முடியை அள்ளி சீராக முடிந்துக் கொண்டு புன்னகை தவழ, "வாருங்கள், வாருங்கள்" என்று மிக மரியாதையாக வரவேற்றாள். பரபரப்புடன் ஹாலை நொடியில் சீர் செய்து விட்டாள்.

அருமையான டீ ஐந்து நிமிடத்தில் வந்தது. பேசிக்கொண்டிருந்தோம். டிராஃபிக் ஜாமிலிருந்து கார்கில் யுத்தம் வரை அந்த நேரத்தில் அலசியாயிற்று.

வரிடம் விடைபெற்று ஹோட்டல் கெனீல் வொர்த்துக்கு நான் திரும்பிய போது இரவு ஆகிவிட்டது.

மறுதினம் இன்டர்வியூக்கள் முடிந்து, கையோடு ஷாப்பிங்கும் கொஞ்சம் செய்ய முடிந்தது. செங்குப்தா உடன் வந்திருந்தார்.

என்னை ஹோட்டலில் 'டிராப்' செய்யும் போது, "நாளை காலதாக்கி செல்கிறோம். மறந்து விடாதீர்கள். விடியற்காலை மூன்று மணிக்கே டாக்சி வந்து விடும். தயாராக இருங்கள்," என்று ஞாபகப்படுத்திச் சென்றார்.

- தொடரும்