New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

ஒரு விஷயமாக...

 பாக்கியம் ராமசாமி

 
'வாழ்க்கை என்பது சஸ்பென்ஸுகளின் தோரணம்!' என்ற பொன்மொழியை எங்கோ பார்த்தேன். நூற்றுக்கு நூறு அந்தப் பொன்மொழி சரியே என்று தோன்றியது.

மறுக்கிறவர்கள் தயவுசெய்து டி.வி.யில் வரும் நாடகங்களைப் பாருங்கள். எந்த ஒரு நாடகத்திலாவது ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் - அதுவும் எபிஸோடு தவறாமல் இருக்கும். அந்த சஸ்பென்ஸ் சாதா சஸ்பென்சாக இருக்கலாம்.

ஆனாலும் நமது ஆவலைத் தூண்டுகிற அளவுக்கு வேலை காட்டத்தான் காட்டுகிறது.

ஆட்டோவில் இளம் பெண் ஏறுகிறாள். ஆட்டோக்காரர் அவளைத் திரும்பிப் பார்க்கிறார். - தொடரும்.

அந்த ஆட்டோக்காரர் அவளை ஏன் திரும்பிப் பார்த்தார்? 24 மணி நேர சஸ்பென்ஸ். 'எங்கேம்மா போகணும்'னு சாதாரணமாகக் கேட்பதற்காகக்கூட அவர் திரும்பியிருக்கலாம். ஆனால் சஸ்பென்ஸ் புத்தியில் தோய்ந்த நமக்கு என்னென்னவோ தோன்றுகிறது.

அந்த ஆட்டோக்காரன் அவருடைய முன்னாள் காதலனோ?

அல்லது அவள் எடுத்துச்செல்லும் பையிலுள்ள நகை விஷயம் தெரிந்து வழியில் கொலை செய்துவிடுவானோ?

அல்லது பம்பாய்க்கு கடத்திச் சென்று பெண்களை விற்கும் தாதாவின் அடியாளின் ஆட்டோவா, தெரியாமல் ஏறிவிட்டாளா? என்ன ஆகப்போகிறதோ?

அல்லது சின்ன வயசில் காணாமல் போன அவனது தங்கையை - பத்து வருஷமாகத் தேடும் தங்கையை - இதோ இவள்தான் என்று அடையாளம் கண்டு கொண்டு விட்டானோ!

அல்லது அவள்தான் அவனுடைய ஒழுக்கம் கெட்ட மனைவியா? வீட்டிலே படுத்துக் கொண்டிருந்தவள் எந்த வீட்டிலிருந்தோ வந்து ஆட்டோவில் ஏறுகிறாளே? என்ன ஆகப்போகிறதோ?

இப்படியெல்லாம் நம் மனசில் சஸ்பென்ஸுகள் தானாகத் தோன்றுகின்றன.

டி.வி.யில் மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையிலே சஸ்பென்ஸ் கொடுக்கிறவர்கள் நிறையப் பேர் உண்டு.

டெலிபோனில் கூப்பிடுவார்கள். "ஒரு விஷயமாக உன்னை வந்து பார்க்கணும்!" என்பார்கள்.

நமக்கு உடனே சஸ்பென்ஸ்.

"என்ன விஷயம் சொல்லேன்."

"இல்லே. நான் நேரிலேயே வர்ரேன். நீ சாய்ந்தரம் எப்போ ஆபீசிலிருந்து வருவே?"

நமக்கு வருகிற எரிச்சலில் வேண்டுமென்றே, "இன்னிக்கு ஆபீஸ்லே மீட்டிங். எப்போ வர்ரேன்னு சொல்ல முடியாது" என்று பொய்யைச் சொல்லி வைப்போம்.

"அவசர விஷயமா? எது விஷயமாப் பார்க்கணும்?"

அப்போதும் ஆசாமி சொல்லமாட்டார். "சரி. நாளைக்குக் காலையிலே வர்ரேனே. காலையிலே எட்டு மணிக்கெல்லாம் வர்ரேன்."

மறுநாள் காலையிலே எழுந்ததிலிருந்து நமக்கு ஒரே சஸ்பென்ஸ். மனைவியிடம், "அந்த கேசவமூர்த்தி என்னவோ ஒரு விஷயமாப் பார்க்க வர்ரேன்னான். என்னவாயிருக்கும்?"

மனைவிக்கும் நம்ம சஸ்பென்ஸை ஒட்ட வைத்து விடுகிறோம். அவளும் பாவம் தன் மூளைக்கு எட்டினதையெல்லாம் சொல்கிறாள்.

"நம்ம வீட்டை விற்கப் போற விஷயம் அவர்கிட்டே சொல்லியிருந்தீங்களா?"

"இல்லையே. நான் யார்கிட்டேயும் சொல்லலை."

"ஏதாவது பணமுடையாயிருக்கும். ஆயிரம் ஐந்நூறு கேட்க வர்ராரோ என்னவோ?"

"அவனுக்கென்ன கேடு! மாசம் முழுசா எழுபதாயிரம் சம்பளம் வாங்கறான். அவன் பொண்டாட்டி பியூடி கிளினிக் நடத்தறாள்."

"என்னவாவது அந்தரங்கமாக உங்களிடம் யோசனை கேட்க வர்ரதாயிருக்கும். அவர் கரெக்டாக என்ன சொன்னார். சொல்லுங்க மறுபடி."

"ஒரு விஷயமா உன்னைப் பார்க்கணும், என்றார் அவ்வளவுதான்."

மறுபடி மனைவி கொஞ்ச நேரம் மண்டையை உடைத்துக் கொள்கிறாள். "அவரோட தங்கை ஒருத்தி கொஞ்சம் மென்ட்டல். ஏதோ ஹோம்லே சேர்க்கணும்னு முன்னே சொல்லிண்டிருந்தார்."

"எனக்கு என்னத்தை தெரியும், மென்ட்டல் ஆஸ்பத்திரி பத்தியெல்லாம்."

"சரி. சரி. குழப்பிக்காதீங்க எட்டு மணிக்கு வர்ரேன்னிருக்காரே. தெரிஞ்சுடப் போறது."

எட்டு மணிக்கு போன் அடிக்கிறது. நண்பர்தான். "டேய் முரளி! ஸாரிடா. நான் சாயந்தரமா வர்ரேன். காத்தாலே எட்டு மணிக்கு ஒரு விஷயமா நான் அர்ஜெண்டா போகணுமாயிருக்கு."

முதல்ல சொன்ன ஒரு விஷயம் வேறு, இப்போ அவன் சொல்ற 'ஒரு விஷயம்' வேறா?

அது என்ன பழைய ஒரு விஷயம். இப்போது புதுசா இது என்ன 'ஒரு விஷயம்'.

புது ஒரு விஷயம் ஒழிந்து போறது. நாம் அக்கறைப்படத் தேவையில்லை. நம்மகிட்டே சொன்னானே நேத்து, அந்த 'ஒரு விஷயம்' என்ன என்று சஸ்பென்ஸில் துடிக்கிறோம்.

"என்னவோ ஒரு விஷயம்னியே நேற்று? அந்த ஒரு விஷயமாப் போகிறயாக்கும்?" என்று கேட்டால், "ஊஹூம். இது வேற விஷயம். நான் உன்கிட்ட நேற்று சொன்ன விஷயம் பற்றி சாயந்தரம் வந்து பேசறேன். சாயந்தரம் ஏழு மணிக்கு வீட்டிலேதான் இருப்பே?"

"ஆமாம். ஆமாம்."

ஆபீசில் வேலை ஓடறதில்லை. சாயந்தரம் ஏழு மணிக்கு வந்து நண்பன் சொல்லப் போகிற அந்த 'ஒரு விஷயம்' என்னவாயிருக்கும்?

அந்த ஏழு மணிப் பொழுது கடைசியில் வந்து விட்டது. நண்பனும் வந்து சேர்ந்தான்.

என்ன விஷயம் என்றால் படுபடுபடு சாதாரண விஷயம். அவன் வாலன்ட்ரி ரிடயர்மென்ட் வாங்கிக் கொள்ளலாமா? இல்லை இன்னும் ஒன்பது வருஷம் சர்வீஸ் இருக்க. அப்புறம் வாங்கிக்கலாமா? இந்த விஷயத்தை அவன் போனில் கேட்டிருக்கக் கூடாதா?

'ஒரு விஷயம்' 'ஒரு விஷயம்' என்று கழுத்தை சஸ்பென்ஸ் உத்தியில் ஏன் அறுத்திருக்கணும்?

ஆபீசில் கூட பக்கத்து நாற்காலி தோஸ்த் - ரொம்ப நெருங்கியவராயிருப்பவர் - திடீரென்று கடியாரத்தைப் பார்ப்பார். பதட்டத்துடன், எழுந்து கொண்டு, "முரளி! ஒரு விஷயமா நான் கொஞ்சம் வெளியிலே போய்ட்டு வந்துடறேன். மானேஜர் கீனேஜர் கூப்பிட்டு வைத்தார்னா, 'ஒரு விஷயமா அர்ஜென்ட்டா "போயிருக்கிறார்... இப்பவே வந்துடுவார்னு சொல்றீங்களா?' என்று ஒரு விஷயமாக அவர் புறப்பட்டுப் போய் விடுவார்.

நமக்குத்தான் மூளைக்குள் சஸ்பென்ஸ் புகுந்து அவர் திரும்பி வருகிறவரை வேலையே ஓடாது.

என்ன அந்த ஒரு விஷயம்? ஏன் பதட்டத்தோடு புறப்பட்டார்? திரும்பி வந்ததும்அந்த 'ஒரு விஷயம்' பற்றி நம்மிடம் சொல்லுவாரா? நாமாகக் கேட்கலாமா? சீ! நாம ஏன் கேட்கணும்? அவருடைய ரகசியத்தை அவரே வைத்துக் கொள்ளட்டும் என்றெல்லாம் விரக்தியாக எண்ணத் தோன்றுகிறது.

கூடவே இருக்கிற மனைவி கூடப் பல சமயங்களில், "உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்னு நேற்று பூரா நினைத்துக் கொண்டிருந்தேன். மறந்து தொலைந்துட்டுது!" என்று சஸ்பென்ஸ் கொடுப்பார்.

ஆனால் மனைவிமார்கள் சொல்கிற 'ஒரு விஷயம்' விசாரப்படுத்துகிற அளவு இருக்காது.

நாமும் அதுபற்றி ரொம்ப அக்கறையாக 'என்னவோ ஒரு விஷயம்னு சொன்னியே' என்று கேட்கிற வழக்கமில்லை.

அந்த ஒரு விஷயமெல்லாம் சாதாரணமாகத் தானிருக்கும். 'வர்ரப்ப துணி உலத்துகிற கிளிப் இரண்டு டஜன் வாங்கிட்டு வாங்க' என்பது போலவோ, 'கார்த்திகைக்கு உங்க தங்கைக்கு மணியார்டர் அனுப்பிச்சீங்களே. ரசீது வந்துட்டுதா?' என்பது போல ஏதாவது சவசவ விஷயமாகத்தானிருக்கும்.

ஆனாலும் அவற்றிலும் லேசுபாசான சஸ்பென்ஸுகள் இருக்கும்.

சஸ்பென்ஸ்களை - 'இந்த ஒரு விஷய பட்டாஸ்களை' - ஏன் அனாவசியமாக மற்றவர்கள் நம்மீது கொளுத்திப் போட வேண்டும்?

அது அவர்கள் தப்பில்லை. 'ஒரு விஷயமாக'க்களை நாம் நிராகரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

'ஒரு விஷயமா நேடிவ் ப்ளேஸ் போகணும்' என்று நம் நண்பர் சொன்னால் நாம் உடனே 'என்ன விஷயம்?' என்று கேட்க வேண்டிய அவசியமோ, சஸ்பென்ஸில் புழுங்கவேண்டிய தேவையோ கிடையாது.

ஒரு விஷயமா நீ போனால் எனக்கு என்ன, இரண்டு விஷயமாப் போனால் எனக்கென்ன, மூன்று விஷயமாப் போனால் எனக்கென்ன என்று ஜடம் மாதிரி இருந்து விட வேண்டும்.

ஆனால் அப்படி இருந்து தொலைக்க முடிவதில்லை.

இதற்கு ஒரே வைத்தியம். அந்த மாதிரி 'ஒரு விஷய'ப் பேர்வழிகளிடம் நாமும் அதே மாதிரி 'ஒரு விஷயமா'ப் போட்டுப் பேசினால் ஓரளவு நம்ம எரிச்சல் தணியும்.

'ஒரு விஷயமா நான் நாலு மணிக்கு டவுனில் ஒருத்தரைப் பார்க்க வரேன்னு சொல்லியிருந்தேன்' என்று நண்பர் சொன்னால். நாம் உடனே, 'நான்கூட ஒரு விஷயமா மானேஜர்கிட்டே பேசணும்,' என்று சொல்லி வைக்கலாம்.

மறுநாள் நண்பர் ஆவலுடன் நம்மிடம், 'என்னவோ மானேஜர்கிட்டே ஒரு விஷயமாப் பேசணும்னு நேற்று சொன்னாயே. என்ன விஷயம்?'

நாம் அலட்சியமாக 'நேத்து பேசணும்னு இருந்தேனா, அதுக்குள்ளே வீட்டிலேயிருந்து ஒய்ஃப் ஒரு விஷயமா போன் செய்தாள். புறப்பட்டுப் போய்விட்டேன்.'

'அப்படியா? மனைவிக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே.'

'அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் போறப்போ வீடு பூட்டியிருந்தது. பக்கத்து ஃபிளாட்டுக்காரங்ககிட்டே சொல்லிட்டுப் போனாளாம். ஒரு விஷயமாவெளியே போயிருக்கிறாள்னு சொல்லச் சொன்னாளாம்.'

நண்பர் முகத்தில் ஏமாற்றம். நமக்கோ ஆனந்தம். நீர் மட்டும் 'ஒரு விஷயம்' பற்றிச் சொல்ல மாட்டீர். நான் மட்டும் ஒரு விஷயங்களை உமக்கு சொல்லணுமோ? என்று மனசுக்குள் மகிழலாம்.

இன்னும் இந்தக் கட்டுரையை நீள அகல ஆழமாக எழுதலாம். ஒரு விஷயமாக என்னையும், என் மனைவியையும் மாமனார் தாம்பரம் வரச் சொல்லியிருக்கிறார். புறப்படுகிறேன்.