New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

 


 

பாக்கியம் ராமசாமி

10 

 

 

நிறமிருந்தால் மணமில்லை;

மணமிருந்தால ருசியில்லை;

ரெண்டுமிருந்தால் கையில் காசில்லை;

"என்கிட்டே காசில்லே..."

"நிங்ஙளண்டெ பைசாவா? அபசாரம். இ குஞ்ஞு கிஷ்டனை க்ஷமிக்கணும்."

அவர் முகத்தை யாரோ அன்புடன் ஐஸ் வாட்டரால் துடைத்து விடுகிறார்கள். விசிறுகிறார்கள்.

அப்புசாமி மெதுவே கண் விழித்தார். அவர் உதடுகள் முனகின.

"எங்கே என் சித்தார்த்? என் பேரன் சித்தார்த் குட்டி. எங்கே அவன்?"

"ஞான் அழச்சுப் போகும். உங்களெ நிச்சயம் இந்த குஞ்ஞு கிஷ்டன் அழைச்சுப் போகும். இப்போ கொஞ்சம் ஜூஸ் சாப்பிடணும். ரம்பே! ஜுஸ் ரெடி தன்னே? ஸ்பூனிலே கொஞ்சம் கொஞ்சமாயிட்டு சுவாமிகளுக்குக் கொடு."

அப்புசாமி ஷட்டரை முழுசாகத் திறந்து பார்த்தார்.

கனவல்ல; நிஜம்தான்.

குஞ்சு கிஷ்டன் அவரை அடைத்து வைத்திருந்த அதே இருட்டு அறை. அவரைத் தன் மடியில் வைத்துக் கொண்டிருந்தான். ரம்பை க்ளுகோஸ் கலந்த பழரசத்தை ஸ்பூன் ஸ்பூனாக அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

அருகில் ஆவி பறக்க இட்லி, டீ. இன்னும் அவிச்ச நேந்திரன்கள், சமூஸாக்கள் கூட.

அப்புசாமியை ஒரு பக்கம் குஞ்சு கிஷ்டனும் இன்னொரு புறம் அவனது மனைவியும், ஆஸ்ரம மானேஜருமான ரம்பையும் தோள் கொடுத்துத் தாங்கியவாறு அறைக்கு வெளியே மரியாதையாக ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சோபாவில் மான் தோல் விரித்து, திண்டு தலையணை வைத்து இருந்தது. நாலுக்கும் அதிகமான சீடர்கள் கைகட்டி வாய் புதைத்துக் காத்திருந்தார்கள்.

அப்புசாமியைக் கண்டதும், "குரு மகராஜ்கீ ஜெய்! சத்குரு ஸமூஸானந்த் மகராஜ்கீ ஜெய்!" என்று கோஷமிட்டவாறு அவர் காலில் விழுந்து வணங்கினர்.


அவர்களில் ஒருத்தனது பிடரியில் ஓங்கி ஓர் அறை விட்டான் குஞ்சு கிஷ்டன். "எருமை மாடா நீ, அறிவில்லா? சுவாமிகள் மேலே உராயண்டா. அவர் பூஜ்யராக்கும்."

அப்புசாமியை மிருதுவான மான் தோல்மீது அமர வைத்தனர்.

அடுத்து, குஞ்சு கிஷ்டன் அவர் பாதங்களில் விழுந்து கும்பிட்டான். "சுவாமிகளோட மகிமை தெரியாத இந்தப் பாவாத்மாவை மன்னித்தருள வேணும். நிங்ஙள் அசல் சுவாமிகள்னு அறியாத இந்தத் துஷ்டனை மன்னிச்சருளணும். எண்ட்ர குருவாயூரப்பா. அந்தக் குருவாயூரப்பன் வேற, நிங்ஙள் வேறல்ல. கிருஷ்ணனே வயசான நிங்ஙள் வடிவமெடுத்து இந்தப் பாவியை ரட்சிக்க வந்திருக்கான்கிறதை அறியாத முட்டாளாயிட்டு உங்களண்டை மரியாதையில்லாம நடந்துகொண்ட இவனுக்கு என்ன தண்டனை வேணும்னாக் கொடுங்க. நீங்ஙள் எட்டி ஒரு உதையாவது தந்தால்தான் இந்தப் பாவிக்கு நிம்மதி."

அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியொன்றும் அதிசய சக்தி எதையும் நான் காட்டவில்லையே! ஒரு சின்னக் குந்து மணியைக் கூடத் தான் வரவழைத்துத் தரவில்லை. பெரிய பூசணிக்காயையே வரவழைத்து வழங்கிவிட்டது போல இந்தப் புகழ் புகழ்கிறானே, என்ன மாயம் நடந்தது!

பாதாமும் பிஸ்தாவும் எடைக்கு எடை கலந்து சுண்டக் காய்ச்சி குங்குமப் பூ மேற்பரப்பில் மிதக்கும் சத்தான பாலைக் கடக் கடக்கென்று பருகியவாறு அப்புசாமி யோசித்தார்.

மானேஜர் ரம்பை பயபக்தியுடன் அவரது முதுகுப் புறமாக நின்று வெட்டிவேர் விசிறியால் விசிறிக் கொண்டிருந்தாள். 'சே! என்ன அருமையான மன மாற்றம். எப்படி நடந்தது இது?' அப்புசாமியின் திகைப்பு தொடங்கியது.

"சுவாமிகள் இவனை எட்டி ஒரு உதையாவது உதைத்தால்தான் என் பாவம் தீரும்" - குஞ்சு கிஷ்டன் அவர் பாதத்தில் குப்புற வணங்கியவாறு கெஞ்சினான்.

அப்புசாமிக்கு ஆவலாக இருந்தது.

"அப்பனே, என் மகிமை உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று அவனையே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாலும் அடக்கிக் கொண்டார்.

"உன்னை மன்னித்தோம். எழுந்து போ அப்பாலே" என்றார்.

"சுவாமிகள் நாலு திட்டாவது இந்தப் பாவியைத் திட்ட வேணும்" - உருக்கமாக விம்மினான் குஞ்சு கிஷ்டன்.

'சரி, திட்டித் தொலைப்போம்!' என்று அப்புசாமி தீர்மானித்தார். "நாயே! கழுதையே! அயோக்யப் பதரே! யானையே! முட்டாளே! துஷ்டனே! ராஸ்கோல்! திருடா! ரௌடியே!"

"ஸ்வாமிகள் இன்னும் திட்ட வேணும். என் பாவமெல்லாம் அப்போதான் கரையும்."

"என்னப்பா உன்கூட உபத்திரமாப் போச்சு. பேமானி... கஸ்மாலம்... இது போதுமா?"

"பத்தாது ஸ்வாமி, பத்தாது."

'பேஞ்சும் கெட்டது, காஞ்சும் கெட்டது' என்பார்கள் விவசாயிகள் அது மாதிரி இந்த ஆள் ஒண்ணு சவுக்கால் அடிக்கிறான். இல்லையானால் தன்னைத் தண்டிக்கும்படி உபத்திரவம் செய்கிறான்.

எழுந்திருந்த குஞ்சு கிஷ்டன் துண்டை விநயமாக இடுப்பில் கட்டிக் கொண்டு, "சுவாமிகள் சன்னிதியில் இதைச் சமர்ப்பிக்க அனுமதி தரோணும்" என்றவாறு ஒரு செய்திப் பத்திரிகையை அவர் முன்னாலிருந்த அகன்ற தட்டில் பயபக்தியுடன் வைத்தான்.

தினத் தந்தி!

மூன்றாம் பக்கத்தில் அவரது புகைப்படமும், சித்தார்த் படமும் போட்டுக் கால் பக்க அளவில் ஒரு பெரிய விளம்பரம்!

.......தனது புகைப்படம் எந்தப் பத்திரிகையிலாவது வெளிவராதா என்று அப்புசாமி ஏங்கியதுண்டு.

இப்போது வந்துவிட்டது. ஆனால் சாவு வீட்டுப் பாயசம் மாதிரி, இனிப்பாயிருந்தாலும் அது அவருக்கு இனிக்கவில்லை.

அவர் படத்திற்கு ஜோடியாக குழந்தை சித்துவின் ஆண்டு நிறைவில் எடுத்த புகைப்படமும் பிரசுரமாகியிருந்தது.

"சித்துக கண்ணு!" அப்புசாமி பத்திரிகையை மார்போடு அணைத்துக் கொண்டார். ரேடியேட்டர் உடைந்தது போல் பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது.

"சித்துக் கண்ணு! சித்துக் குட்டி!" அவனது பட்டுக் கன்னமே தன்னோடு உரசுவது போன்ற பிரமையுடன் சில நிமிடங்கள் பத்திரிகையை அணைத்தது அணைத்தபடியே இருந்தார். பிறகு எடுத்துப் பிரித்தார்.

குழந்தையின் முகத்தை மீண்டும் மீண்டும் தடவினார். தேய்த்து முகர்ந்து பார்த்தால் ரோஜா வாசனை வரவில்லை. அதைவிட உயர்ந்த பாசத்தின் வாசனையை உணர்ந்தார்.

"சித்தார்த் குட்டி! என்னாலதானே உனக்கு ஜுரம்!"

ஸ்பாட் ஃபைன் மாதிரி அங்கேயே தன் காதைப் பிடித்துக்கொண்டு நாலு தோப்புக்கரணம் போட்டார். ராத்திரி வைத்த இட்லி மாவு ஃபிரிட்ஜில் வைக்காததால் பொங்கி வழிந்தது போல அவரது துக்கம் நாலா திசையிலும் பெருக்கெடுத்து வழிந்தது.

குஞ்சு கிஷ்டனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு "இதுதாண்டா என் பேரன்! நல்லாப் பாரு. என் உசிரே இவன்தான்... அந்தச் சிரிப்பைப் பாருடா... பாரு" என்று புலம்பினார்.

குஞ்சு கிஷ்டன் கையைக் கட்டியவாறு ஆறுதலான குரலில், "சுவாமிகள் கரையண்டா. என்னவோ வாசகம் அதிலே எழுதியிருக்கிறது. சுவாமிகள் அதைப் பார்த்தா?" என்றான் விநயமாக.

அப்புசாமி அவன் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் கரைந்து போய் விடாமல் அழுகையை நிறுத்திக் கொண்டு புகைப்படத்தின் கீழிருந்த வாசகத்தைப் பார்த்தார்.

'தாத்தா,

சித்தார்த்துக்கு நீ உடனே வேணும்! நீ வந்தாத்தான் சித்து மருந்து, மம்மு எல்லாம் சாப்பிடுவேன். ஸீரியஸா இருக்கேன். ஓடி வந்துரு தாத்தா.

சித்தார்த்.'

அப்புசாமி மேலும் உணர்ச்சி வசப்பட்டார். எதனால் திடீரென்று குஞ்சு கிஷ்டன் நல்லவனாக மாறிவிட்டான் என்ற புதிருக்கும் விடை கிடைத்து விட்டது.

இந்த விளம்பரமே அவனது துஷ்ட மனத்தையும் மாற்றியிருக்கிறது. சித்துவின் பால் வடியும் முகத்தைப் பார்த்தால் எந்தக் கொடூர நெஞ்சமும் இளகத்தான் இளகும்.

"சித்துக் கண்ணா! இதோ இப்ப வர்ரேண்டா! ஏரோப்ளேன்லே ஓடி வர்ரேண்டா!" என்று கூறியவர் உணர்ச்சி மேலிட்டு அப்போதே இரண்டு கையையும் விரித்துக் கொணடு, 'பிர்ர்ர்...' என்று சத்தமிட்டவாறு வட்டமடிக்க ஆரம்பித்து விட்டார். மனோ வேகம்!

ரன்வேயில் நின்ற ரம்பையைக் கீழே தள்ளிக்கொண்டு அவரது விமானம் புறப்பட்டே விட்டது.

குஞ்சு கிஷ்டன் நல்லவேளை, வேகமாகப் பின்தொடர்ந்து ஓடி, அவருக்கு பிரேக் போட்டான். "சுவாமிகள் க்ஷமிக்க வேணும், சுவாமிகள் புறப்பட ஏஸி கார் ஏற்பாடு செய்திருக்கேன்."

அப்புசாமி புரொபல்லரை மடக்கிக் கொண்டு, "அடே கிஷ்ட துஷ்டா! ஸீரியஸ்னா உனக்கு அர்த்தம் தெரியுமாடா ரௌடி? கார் எங்கே.... சீக்கிரம் வரட்டும். உன் ரம்பை, ரதி, திலோத்தமை எங்கேயும் ஓடிட மாட்டாள். அவள்கிட்டெ என்னடா கிசுகிசு. என்னைப் பற்றி என் எதிரேயே கிசுகிசு. நான் தாமதிக்கிற ஓரொரு வினாடியும் என் குழந்தை உசிருக்கு ஆபத்துடா... முண்டம்" என்று பதறினார்.

"ஸ்வாமிகள் இந்த நாயை க்ஷமிக்கணும்" குஞ்சு கிஷ்டன் விநயமாகக் கும்பிட்டான்.

"இந்த நாயையென்ன, உன்கிட்டேயிருக்கிற எல்லா நாயையும், யானையையும்கூட மன்னிச்சுடறேன். வண்டியைக் கொண்டா மின்னே... இங்கே பிளேன் வசதி எப்படி? பெரிய ஆஷிரமம் நடத்தறியே ஆஷிரமம்.... பிளேன் சர்வீஸ் இல்லாத ஆசிரமம் ஒரு ஆசிரமமா? வெங்காய ஆசிரமம்..."

"அதுதான் ஞான பரைய வந்தது.... ஃபிளைட்டுலே ஸ்வாமிகள் புறப்பட ஞான் ஏற்பாடு செய்யும். பக்ஷே கொஞ்சம் தாமஸம் ஆகும்... அதுதன்னே மாருதிக்குச் சொல்லியிருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்திலே மாருதி இங்கே வரும்... குஞ்சு குஷ்டன் பரைஞ்சால் பரைஞ்சதை நடத்திக் காட்டும்."

"நீ நடத்திக் காட்டுவியோ, கடத்திக் காட்டுவியோ... நான் புறப்படத் துடித்துக் கிட்டிருக்கேன்... சித்துக் கண்ணா, தாத்தா இதோ வந்துடறேண்டாம்மா."

"சுவாமிகள் க்ஷமிக்கணும்" என்றான் மறுபடி குஞ்சு கிஷ்டன் விநயமாக.

வில்லன் கதாநாயகியைக் கற்பழித்துக் கொண்டிருக்கிற ஸீனில், எங்கோ சாவகாசமாக கதாநாயகன் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதுபோல இந்தக் கிஷ்டனென்ன, நிலைமை புரியாதவனாக இருக்கிறானே... அதுதான் வேண்டுமென்கிற அளவுக்கு அவனை க்ஷமித்தாயிற்றே! இருபத்து நாலுமணி நேரமும் எவனால் க்ஷமிக்க முடியும்? ஆகிற காரியமா?

"ரம்பை பரயறதும் நல்ல யோசனைதான்னு எனக்குத் தோணுது... ஸ்வாமிகள் க்ஷமிக்கணும்" என்றான் குஞ்சு கிஷ்டன்.

"உன் ரம்பை என்ன சொல்கிறாள், உன் யானைக்குட்டி என்ன உளறுகிறது இதெல்லாம் எனக்கு இப்போ முக்கியமில்லேடா... சீக்கிரம் நான் புறப்பட்டாகணும்..." அப்புசாமி பதறினார்.

"சுவாமிகள் க்ஷமிக்கணும். மிஸ்டேக்கா நினைக்கண்டா. அங்கெ நிங்ஙள் பேரன் நிலை எப்படியோ... நிங்ஙள் போய்ச் சேருவதற்கு மின்னே... குழந்தைகிட்டே நீங்கள் போனில் பேசினால் அதுக்கு ஒரு ஆறுதல்தன்னே."

"கிஷ்டா!" அப்புசாமி உணர்ச்சி மேலிட்டுக் கூவியவாறு அவனைத் தழுவிக் கொண்டார். "இந்த யோசனை என் மரமண்டைக்குத் தோணலையே... கிஷ்ட்டா! நீ கெட்டவனானாலும் உண்மையிலேயே கெட்டிக்காரன்..."

குஞ்சு கிஷ்டன் விநயமாக அவரது புகழுரையை ஏற்றுக்கொண்டு, "ஸ்வாமிகளுட வீட்டுக்குப் போன் உண்டல்லல்லோ? நம்பரைச் சொன்னால், 'ஸ்வாமிகள் இதோ புறப்பட்டு வந்திட்டேருக்கு'ன்னு ஞான் பரையும்" என்றான்.

"நானே போன் செய்கிறேன். சித்தார்த் குட்டிக்கு என் குரலைக் கேட்டாலே ஜுரம் பறந்திடும்" என்றார் அப்புசாமி.

அப்புசாமியிடம் டெலிபோனை ஒரு கூடையில் வைத்து ஏதோ பழம் கொண்டு வந்து நீட்டுவது போல நீட்டினாள் ரம்பை. கார்ட்லெஸ் ஃபோன்.

"சுவாமிகள் நம்பரைச் சொல்லுங்கள்." கிஷ்டன் மறுபடி கேட்டான்.

அப்புசாமி தன் வீட்டு போன் நம்பரைச் சொன்னார்.

குஞ்சு கிஷ்டன் சாடை காட்ட டெலிபோன் எண்ணை ரம்பா ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டாள்.

குஞ்சு கிருஷ்ணனே நம்பரை டயல் செய்து பேசினான்.

அப்புசாமி, "என்ன, கிழவி ஒருத்தி பேசுகிறாளா! குடு! குடு! அவள்தான் இந்த சுவாமிகளட சம்சாரம்..."

பரபரப்புடன் கை நீட்டினார்.

பாக்கிச் சில்லறைக்காகப் பஸ் கண்டக்டரிடம் கை நீட்டிய பயணிபோல அப்புசாமி கையை நீட்டிக் கொண்டிருந்தாரே தவிர, டெலிபோன் அவர் கைக்கு வந்தபாடில்லை.

அப்புசாமி, "குடு கிஷ்டா! இன்னாபா விளையாடறே? நான் சித்துகூட உடனே பேசணும்... தாத்தா பேசறாராம்னு சொல்லு... போனை எடுத்தது யாரு? கெயவியா? சித்துவா?" என்று பதறினார்.

அடக்கமாகச் சிரித்த குஞ்சு கிஷ்டன், "சுவாமிகள் சிரமப்படண்டா... ஞானே சம்சாரிக்கும்" என்றான்.

"வணக்கம்மா... நிங்ஙள்தான் சுவாமிகளுடைய பார்யாளோ? சமூஸானந்த மகராஜ் ஸ்வாமிகள் இவ்விடதான் எழுந்து உளறியிருக்கிறார் - க்ஷமிக்கணும் - எழுந்து அருளியிருக்கிறார்..." ஒரே மூச்சில் பேசி முடித்துவிட்டான்.

"சுவாமிகள்? வாட் சுவாமிகள்!"

"ராங் நம்பர்..." என்று எதிர் முனையிலிருந்து சீதாப்பாட்டியின் குரல் கோபமாக வந்தது.

"ராங் நம்பரல்லா... ரைட் நம்பர்தான்... ஸ்வாமிகளுடைய திருநாமம் அப்புசாமிதன்னே? அவர் சாமியாராகப் போயி அவரை நாங்கள் புடிச்சு வெச்சிருக்கோம்."

"தாங்க் யூ வெரி மச்..."

"பத்திரிகைலே ஆயாளுடைய போட்டோ பார்த்தது. அவர் இப்போ அங்கே வரணுமா?"

"டேய்! டேய்! எங்கிட்டே குடுடா... நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டிருக்கிறே. அவள் என் சம்சாரம்டா.... நான் பேசணும். சித்துகுட்டியோட நான் பேசணுமாம்னு சொல்லு..." என்று பதறினார்.

"ஸ்வாமிகள் சித்துகுட்டியோட பேசணுமாம். அதுக்கு மின்னே செல கண்டீஸன்கள்" என்றான் குஞ்சு கிஷ்டன் அழுத்தமாக. 

- தொடரும்