New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

 

1001 அப்புசாமி இரவுகள்

 

பாக்கியம் ராமசாமி

 

அத்தியாயம் - 8

 

 

அலீப்ஃ, பே, தே, ஸே, ஜீம்!

 


ஷேக்கின் தலையைக் கிள்ளினார்! துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தன்னை அறையில் தள்ளிப் பூட்டிய அழகிமீது, அப்புசாமிக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

கத்தினார் : 'அடிப்பாவி! ஊர்வசி வேடம் போட்ட உளுத்தி! அன்பாலே கட்டற மாதிரி அசல் கயிறாலே கட்டிட்டாளே...' என்று கொதித்தவர், எருமை மாடு கல்லில் முதுகைத் தேய்த்துக் கொள்கிற மாதிரி சுவரில் நாலும் தரம் முதுகைத் தேய்த்துக் கொண்டார். ஒரு வழியாகச் சில பல எரிச்சலுடன் கைக் கட்டு அவிழ்ந்தது. "யாரை நம்பினாலும் பொம்பளைகளை மட்டும் நம்பக்கூடாதுன்னு தெரியாமலா சொன்னாங்க? பெண்ணாகி வந்த மாயப் பிசாசு, மாயப் பூதம், மாயக் கழுதை, மாயக் கோட்டான், மாயக் குரங்கு!" என்று திட்டிச் சாபமிட்டுக்கொண்டிருந்தவரின் கவனம், தடதடவென்று முன்பக்கத்து அறையில் பிரவேசித்த ஒன்பது சகோதரர்களின் வரவினால் கலைந்தது.

கதவுச் சன்னல் வழியே அவர்களது உருவங்கள் அவர் கண்ணுக்கு நன்கு தெரிந்தன.

'அடேங்கப்பா! அகில உலக மல்யுத்தச் சம்மேளனம் ஏதாவது இங்கு வந்து முகாம் போட்டிருக்கிறதா என்ன? ஒவ்வொரு ஆளையும் அழித்துப் பண்ணினால் எட்டாள் செய்யலாம் போலிருக்கிறதே! என்ன உயரம்! என்ன தடி! கரணை கரணையாக உடம்பைப் பார்க்கலையோ உடம்பை' அப்புசாமி திகைத்தார். வியந்தார்.

மெதுவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஐயா, சாமி!" என்று குரல் எழுப்பினார் அப்புசாமி.

ஒன்பது பேரில் மூத்தவன் திரும்பிப் பார்த்தான். அவன் விழிகளில் வியப்பும் கோபமும் ஜிவ்வென்று ஏறின. சடக்கென்று நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டவன் கோபத்துடன் கையைத் தட்டி அழகியைக் கூவினான்.

அவள் மிகவும் மரியாதையுடன் ஏதோ பதில் சொல்லிவிட்டு விறுவிறென்று உள்ளே போய் அப்புசாமியிடமிருந்து அவள் பறித்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து தலைவனிடம் காட்டி ஏதோ கூறினாள்.

அப்புசாமிக்கு முழுசும் புரியாவிட்டாலும் தன்னைப் பற்றி ஏதோ அந்தச் சகோதரி, மாய் மாலக் கன்னி, கோள் மூட்டுகிறாள் என்பது புரிந்துவிட்டது. அவர் துப்பாக்கியைத் திருடிக் கொண்டு வந்ததாகச் சொல்கிறாள் போலிருக்கிறது. "அய்யய்யோ! அந்தக் குட்டி சொல்றதை நம்பாதீங்க! உடம்பு பூரா அதுக்குப் பொய்! கோளி மூட்டிக் கோபாலி!" என்று கத்தினார்.

எல்லோரும் கசமுசவென்று கூடிப் பேசிக் கொண்டார்கள். பேசி முடித்ததும் தலைவன் முகம் பெங்களூர் தக்காளி மாதிரி சிவந்து காட்சி அளிக்க, அப்புசாமியைப் பார்த்து உரக்கக் கத்தினான்.

அந்த அழகி மரியாதையுடன் அவர்களுக்குச் சலாமிட்டு அப்புசாமியைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்து விட்டுச் சென்றாள். ஒன்பது பேரும் மேஜை மீது ஒரு வரைபடத்தை விரித்து வைத்துக்கொண்டு முக்கியமாக ஏதோ தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர்.

'அட கேடுகெட்ட உலகமே?' அப்புசாமி இடிந்து தொப்பென்று உட்கார்ந்து போனார். 'எந்த நாட்டுக்குப் போனால் என்ன? அந்தச் சூரிய மண்டலத்துக்கே போனால்கூட அங்கேயும் சீதேக் கிழவி ஜாதிதான் ஜெயிக்குமா? தாவாக் கட்டையைப் பிடிக்காத குறையாக இவ்வளவு தூரம் நான் கெஞ்சியிருக்கிறேன், அத்தனை பயல்களும் அந்தத் திமிர்பிடித்தவளின் பேச்சைத்தானே கேட்டுக் கொண்டார்கள். 'இன்னா சார்... இன்னா நடந்தது? உங்களைப் பார்த்தால் பெரிய மனுஷனாட்டமிருக்கிறது. உங்களை ஏன் இவள் இங்கே போட்டு அடைத்து வைத்திருக்கிறாள்' என்று ஒரு வார்த்தை என்னைக் கேட்க நாதியில்லையே... ஒன்றுக்கு ஒன்பது தடியன்களாக இருக்கிறார்கள்?' அப்புசாமி குமுறினார், குமைந்தார்.

அவரைப் பார்த்து இளக்காரமாக நகைத்தவாறே ஏதோ கேலி பேசிய அந்த அழகி இடையை ஒய்யாரமாக ஆட்டியவாறு ஒரு கையில் அன்றைய பத்திரிகையையும் இன்னொரு கையில் மதுக் கோப்பையையும் யாருக்காகவோ எடுத்துக்கொண்டு முன்பக்க அறையை நோக்கிச் சென்றாள். அவளைப் பார்த்ததும் அப்புசாமிக்குக் கோபம் தாள முடியவில்லை. "அடியே நாசமாய்ப் போகிறவளே! உன் இடுப்பிலே இடி விழ! திறந்து விடுடி என்னை... திறந்து விடு!" என்று கூவினார்.

அவள் அவரைக் கோபத்துடன் பார்த்து, 'சும்மாக் கிடய்யா... குத்திடுவேன் குத்தி?' என்று மிரட்டுகிற மாதிரி பத்திரிகையால் அவர் முகத்தைப் பார்த்து ஓங்கி அடித்தாள். தாள்களில் ஒன்று பிரிந்து அவர் அறைக்குள் விழுந்து விட்டது.

அல்ஜுமாய்ன் அரண்மனையின் அதிகாரபூர்வமானதும், நாட்டில் நடமாடுவதுமான ஒரே பத்திரிகை அது. உருது அரபு இரு மொழிகளிலும் தயாராவது.

அப்புசாமியின் கண்கள் பத்திரிகையில் பெரிய அளவில் வெளியாகியிருந்த புகைப்படம் ஒன்றைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போயின. பல்லை நறநறத்தார். மனைவி சீதேயின் படம்! மதிப்புக்குரிய ஷேக் அவர்களிடமிருந்து கம்பீரமாக வீரவாள் பரிசு வாங்கும் படம்!

அக்கினித் திராவகம் கொட்டாமலே அப்புசாமியின் உடல் திகுதிகுவென்று வெந்தது.

சீதாப்பாட்டியை உடனடியாக ஓங்கி அறைய வேண்டும்போல அவருக்கு ஆத்திரம் வந்தது. 'அந்தத் துளியூண்டு எலுமிச்சங்காய்க் கொண்டையைப் பிடித்து சும்மா அப்படியே ஒரு சுழட்டு சுழட்டி எறியாவிட்டால் - சே.... நானும் ஒரு மனிதனா?'

சீதாப்பாட்டியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார் - அதாவது பத்திரிகையிலிருந்து அவள் புகைப்படத்தின்மீது. "அடியே கிழவி! நான் இங்கே ஜெயிலிலே சாகறேன் அடைபட்டு! என்னைக் கழுதை மேல் உட்கார வைத்துத் துரத்தினதற்கு உனக்கு வீரவாளா, வீரவாள்! நீ என்னைக் கண்ணாலே பார்க்கக்கூடாது உன் கண்ணை. ... கண்ணை....." அப்புசாமி பத்திரிகையிலிருந்த சீதாப்பாட்டியின் கண்களை வட்டமாகக் கிள்ளி எடுத்தார். "நொள்ளைக் கண்ணி! இப்போதாண்டி நல்லாயிருக்கே நீ...!" என்றவர் பார்வை அடுத்துப் பரிசளித்துக் கொண்டிருந்த ஷேக்கின் மீது பாய்ந்தது!

"ஏய்யா... ஷேக்கு? நீயெல்லாம் ஒரு ராஜா! உனக்கு ஒரு அரண்மனை! ஒரு மந்திரி அவள் முகரையைப் பார்த்தாலே புரியலை. புருஷனை மதிக்காதவள்னு. அவளுக்குப் போய் மந்திரிப் பதவி கொடுத்திருக்கே! நாலு பேரைக் கேட்டாயா? நம்பிக்கை ஓட்டெடுப்பு எடுத்தாயா? உன் புத்தியை இன்னா சொல்றது?" அப்புசாமி ஷேக் உருவத்தின் தலையை வட்டமாகத் தனியே கிள்ளினார்.

அப்புசாமி போட்ட ஆத்திரக் கூச்சலும், அவர் பத்திரிகையிலிருந்த புகைப் படத்தைக் கோபத்துடன் குத்திக் கிழித்தது மூத்தவனின் கவனத்தைக் கவர்ந்து இழுத்து விட்டனபோலும், அழகியிடம் ஏதோ கேட்டவாறு அப்புசாமியின் சிறை அருகே வந்து நின்றவன் அவரது செய்கையை வியப்புடன் கவனித்தான்.

ஷேக்கின் சர்வாதிகார நாட்டில், இந்த அல்ஜுமாய்ன் ராஜதானியில் இப்படிக்கூட ஒரு துணிச்சலான ஆளா?

ஷேக்கின் படத்தையும் அவமரியாதை செய்யக்கூடிய ஒரு தைரியசாலியும் இருக்கிறானா?

ஷேக்கை எதிர்த்து அவர்கள் நடத்தவிருக்கும் புரட்சிக்கு ஆதரவாக ஒரு ஜீவன்கூட முதுகெலும்போடு இந்தப் பரந்த அல்ஜுமாய்னில் இல்லேயே என்று அவன் ஏங்காத நாளில்லை. காசு கொடுத்துக் கட்சிக்கு ஆள் சேர்க்கலாமென்பதற்கும் போதிய நிதி வசதி இல்லை. அப்படிப்பட்ட நிலையில் இப்படி ஓர் ஆளா? ஆனால் இவன் தங்கள் ரகசியக் கிடங்கிலிருந்து துப்பாக்கியொன்றைத் திருடியிருக்கிறானே!

"பேரக்குழந்தைகளே!" என்ற கனிவான குரல் கேட்டு ஒன்பது பேரும் திரும்பி நோக்கினர். ஸிம்ஸிம் கிழவர்!

அப்புசாமி ஸிம்ஸிம் கிழவரைப் பார்த்தாரோ இல்லையோ, "யோவ் ஸிம்ஸிம்...... எந்த நேரத்திலே துப்பாக்கியைக் கொடுத்தீரோ செத்தேனய்யா செத்தேன். ரொம்ப நல்லாயிருக்குதய்யா உம்ம விருந்தோம்பல்! இப்படி இருந்தால் ஏன் தலையைச் சீவ மாட்டானுங்க?" என்றார் கடுங்கோபமாக.

"அன்பரே, ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. பொறுமை கடலிலும் பெரிதல்லவா? இதோ நான் என் பேரர்களை விசாரிக்கிறேன்" என்றவர் சகோதரர்களிடம் நிதானமாக ஏதோ விசாரித்தார். அவர்கள் மிகவும் வினயமாகப் பதிலளித்தனர். பிறகு மிகவும் மரியாதையுடன் கதவைத் திறந்துவிட்டனர். அப்புசாமி ஓடிச் சென்று ஸிம்ஸிம்மைக் கட்டிக் கொண்டார். "நல்ல சமயத்தில் வந்தீர்கள்."

ஸிம்ஸிம் கிழவர் புன்னகையுடன், அப்புசாமியிடம், "அன்பரே.. இவர்களுக்கெல்லாம் ஒரே வியப்பாயிருக்கிறது உமது வீரத்தைக் கண்டு," என்றார்.

"வீரமா! ஒரு வீரனை நடத்தற லட்சணமா இது? இவுங்க ஜெயில் கியிலையெல்லாம் தூள்தூள் பண்ணியிருப்பேன் இன்னும் கொஞ்ச நேரத்தில்."

"அடேயப்பா... இவ்வளவு கோபமா உமக்கு? அது சரி. மாட்சிமை தங்கிய அல்ஜுமாய்ன் அரசரான ஷேக் மீது உமக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று அறிய என் பேரர்கள் விரும்புகிறார்கள்."

"கோபமா? அந்த ஷேக், அவன் மந்திரி, அவன் புண்ணாக்கு, அவன் பருத்திக்கொட்டை எல்லாரையும்... வீரவாள் வாங்கறியா நீ வீரவாள்?" அப்புசாமிக்குக் கோபத்தில் மூச்சு இரைத்தது. "அடியே மந்திரி! உன்னைக் கவனிச்சுக்கறேண்டி..."

ஸிம்ஸிம் தன் பேரர்களிடம் அவர் கூறியதை மொழி பெயர்த்துக் கூறிவிட்டு, "நண்பரே, ஷேக்குக்கு எதிராக நீர் வேலை செய்ய ஒப்புக் கொள்வீரா" என்றார்.

"என்னைக் கேட்க வேண்டாம். கடைசித் துளி ரத்தத்தைக் கேளுங்கள்... அது பதில் சொல்லும்."

அப்புசாமி கூறியதை ஸிம்ஸிம் பேரர்களிடம் கூறியதும் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தனக்கு ஏற்பட்ட இன்னும் பலதரப்பட்ட சந்தேகங்களை ஸிம்ஸிம் மூலமாக அப்புசாமியிடம் தலைவன் கேட்க அவர் சுடச் சுடப் பதில்கள் விட்டார்.

"ஷேக் ஒரு சர்வாதிகாரி. ஒரு பூதம். அவன் பெரிய கைகாரன்."

"எந்தக் கைகாரனாயிருந்தால் என்ன? வாள் கொடுத்த கையையும், வாங்கிய கையையும் ஒடித்து வாள் வாள் என்று கத்த வைக்கிறேன்."

"எங்கள் கட்சியில் உங்களைப் போன்ற வீரரைச் சேர்த்துக்கொள்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நீங்கள் சம்மதிக்கிறீர்கள்?"

"நான் பழிக்குப் பழி வாங்கணும், அவ்வளவே. எந்தக் கட்சியானாலும் சரி."

சகோதர்கள் ஒன்பது பேரும் உடனே கலந்தாலோசித்தார்கள். பின்பு ஸிம்ஸிம்மிடம் தங்கள் சந்தேகத்தைத் தயக்கத்துடன் வெளியிட்டனர். "இவ்வளவு சிறந்த புரட்சிக்காரர் நமக்குக் கிடைப்பது கஷ்டம்தான் தாத்தா. ஆனால்...."

"என் குழந்தைகளே, 'ஆனால்' என்பதுதான் வார்த்தைகளிலே அசிங்கமான வார்த்தை."

"இல்லை தாத்தா. இவருக்கு நம் மொழி தெரியாதது ஒரு பெரிய குறைபாடு ஆயிற்றே?"

ஸிம்ஸிம் சிரித்தார். "குழந்தைகளே, புழுதி படிந்திருக்கிறது என்கிற காரணத்துக்காக ஒரு ரத்தினத்தை இழப்பதா? அவருக்கு அரபு மொழி கற்றுத் தர நானிருக்கிறேன்."

இரண்டு நாட்கள் கடந்தன. ..

ப்புசாமியின் தோளை லேசாகத் தொட்டார். கிழவர் ஸிம்ஸிம். "மாணவரே, ஒழுங்காகக் காயிதா ஓதாமல் இங்கே இப்படிப் பார்த்துக் கொண்டிருந்தால் படிப்பு எப்படி வரும்?" என்றார்.

அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டு 'வந்துட்டானய்யா உயிரை வாங்க' என்று எண்ணிக் கொண்டார்.

ஸிம்ஸிம் அப்புசாமியின் தலையை அன்புடன் தடவியவாறு, "அன்பரே! இந்தாரும். உமக்காகச் சிறிய பரிசு வாங்கி வந்தேன். நீரே பிரித்துப் பாரும். மகிழ்ச்சி அடைவீர்," என்றார்.

அப்புசாமி, 'ஐயாவை டியூஷன் வாத்யார் காக்கா பிடிக்கிறார் டோய்!' என்று நினைத்தவாறு பரிசுப் பொருள் பொட்டலத்தைப் பார்த்தார்.

ஒரு சிறிய சிலேட்டும் நீளமான மாவுப் பலப்பம் ஒன்றுமிருந்தது. அப்புசாமிக்கு அந்த ஸ்லேட்டை ஸிம்ஸிம்மின் தலையில் போட்டு உடைக்கலாம் போல ஆத்திரமாக வந்தது.

ஸிம்ஸிம் புன்முறுவலுடன், "குழந்தாய், உனக்கு நாற்பது பக்க காப்பி நோட்டே வாங்கித் தந்திருப்பேன். பேப்பர் கிடைப்பது குதிரைக் கொம்பாயிருப்பதால் கரும் பலகை வரவழைத்தேன். டிக்டேஷன் போடுகிறேன். நேற்றுக் கற்றுத் தந்த அட்சரங்களைக் கவனமாக எழுது பார்ப்போம்."

ஸிம்ஸிம் டிக்டேஷன் போடத் தொடங்கிவிட்டார். "அலீப்ஃ, பே, தே, ஸே, ஜீம்!"

அப்புசாமிக்கு அரை எழுத்துக்கூட ஞாபகமில்லை. காப்பி அடிக்கலாம் என்றாலோ பக்கத்தில் ஆள் இல்லை.

- தொடரும்