New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

 துடுக்குமாடிக் கட்டிடங்கள்!

 

பாக்கியம் ராமசாமி

 

ண்பன் நாராயணனைவிடச் சாதுவான மனிதன் கிடையாது. 'யாமறிந்த மனிதரிலே நாணுவைப் போல் ஒரு சாதுவை யாம் எங்ஙணுமே கண்டதில்லை' என்று பாடத் தோன்றும்.

அவன் சமீபத்தில் ஓர் அடுக்ககத்தில் சொந்த ஃபிளாட் வாங்கிக் கொண்டு குடியேறினான். முதல்நாளே - கிரகப் பிரவேச நாளே அவனுக்குச் சோதனை.

அடுக்கக இன்சார்ஜ் இறக்கை இழந்த ஜடாயு மாதிரி மெதுவே '5-B'யிலிருந்து படிப்படியாக இறங்கி நாராயணனின் '2-A'க்கு வந்தார்.

'பெரியவராக வந்து ஆசீர்வதிக்கப் போகிறாரோ, நிகழ்ச்சி நடப்பதற்குச் சற்று முன்னதாகவே பெருந்தன்மையுடன் வந்திருக்கிறாரோ' என்று நாராயணன் மகிழ்ந்து போய் பூர்ண கும்பம் வைக்காத குறையாக அவரை வரவேற்றான்.

"வாங்கோ வாங்கோ."

அந்தப் பெரியவர் ரொம்பப் பழுத்திருந்தார். கேஷுவல் டிரெஸ், அதாவது மேல்பாதி கவரேஜ் ஏதுமில்லாமல் பூணூல் மட்டும். அகல சரிகைக் கரை போட்ட தட்டுச் சுற்று வேட்டி. இடுப்பில் ஒரு பொடிக் கைக்குட்டை. சற்றுப் பெரிய சைஸ். நாப்கின்னுக்கும் கைக் குட்டைக்கும் பிறந்த ஒரு சைஸ். மிக்ஸியில் மிளகைப் போட்டு அரைக்கிற மாதிரி குரல். நாராயணன் தந்த மரியாதைக்கு அந்த மனிதரின் பதிலைப் பாருங்கள்.

"வர்றது இருக்கட்டும், மாடு கீடு வரப் போறதா என்ன? அது அசிங்கம் பண்ணினால் நீங்க உடனே க்ளீன் பண்ணிடணும். கோமியம் கீமியம்னு ஊத்தித்துன்னா கித்தான் சாக்கு போட்டு சுத்தமாத் துடைச்சிடணும்... எல்லாரும் நடக்கிற இடம்."

"அப்படியே செய்துடறேன். ஃபங்ஷன் சரியா ஆறே காலுக்கு. நீங்க அவசியம் வந்துடணும்.."

"நாதஸ்ரம் வெச்சிருக்கீங்களா என்ன?"

"உங்களாட்டம் பெரியவா ஆசீர்வாதத்தாலே நாங்க செய்யற முதல் கிரகப் பிரவேசம்! வாத்தியம் வெச்சுருக்கேன்." நாராயணன் குழைந்தான்.

"இங்கெல்லாம் ஊதப்படாது. காலங்காத்தாலே பீபீபீபீன்னு நாராசமாய்ச் சத்தம் கேட்டால் தூங்குகிறவங்களுக்கு இடைஞ்சல். எந்த சத்தமாயிருந்தாலும் அவுங்க அவுங்க வீட்டுக்குள்ளேயே இருக்கணும்."

"சரி கான்சல் பண்ணிடறேன்."

அந்த முசுடு தொடர்ந்தது. "மெயின்ட்டனென்ஸ் மூணாம் தேதிக்குள்ளே கொடுத்துடணும். ஆயிரத்து நூறு ரூபா. காமன் ப்ளேஸை சொந்தத்துக்கு யுடிலைஸ் பண்ணிக்கக் கூடாது. டெரஸில் ஷாமியானா போட்டு டின்னர், பார்ட்டி ரிசப்ஷன் என்று எதுவும் செய்யப்படாது."

நாராயணன் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருந்தான்.

அவர் புறப்பட்டு இரண்டு நிமிடம்.

கணகணவென்ற கழுத்து மணி ஓசையுடன் பசு ஒன்று அகத்திக் கீரை தின்னும் ஆவல் கண்களில் ஜொலிக்க வந்து கொண்டிருந்தது.

கான்ஸ்டிபேஷனுடன் கூடிய காராம் பசுவாக அழைத்து வா என்று நாராயணன் முன்கூட்டிச் சொல்லாதது தப்பாயிற்று. வந்ததுமே அது வரட்டிக்குத் தேவையான மூலப் பொருளைச் சற்றே இளக்கமாக சப்ளை செய்து தள்ளிவிட்டது.

வாசல்பூரா திடதிரவக் கசாமுசா. 'கோமியம்... கோமியம்' என்று அவன் மனைவி புனித நீர் பிடிக்க சொம்பு தேடி உள்ளே ஓடினாள்.

'கோமியம்! கோமியம்!' என்று அவள் கத்தியது 'கோமளம்! கோமளம்! என்று பக்கத்து வீட்டுக் கோமளத்தின் காதில் விழுந்து, "கூப்பிட்டியா என்ன? யாருக்கு என்ன ஆச்சு?" என்று ஓடிவந்தாள்.

இத்தனை பரபரப்பான சூழ்நிலையில் உள்ளே ஹோமப் புகையை புரோகிதர் இஷ்டத்துக்குக் கிளப்பிவிட்டார்.

'செரா.. செரா!' எனப்படும் செராக்கட்டு எந்த மரத்துக் குச்சியோ, (ஆங்)காரமான ஒரு புகை. ஊற்றின நெய்தான் எரிந்ததே தவிர ஒரு செரா கூட எரியவில்லை.

நம்ம வீட்டுப் புகை நம்ம சொன்னபடி கட்டுப்படறதா என்ன? அடுக்ககத்தின் எல்லா ஃபிளாட்டுகளிலும் பிரவேசித்து, இன்சார்ஜ் ஜடாயு மாமாவை உடனடியாக வரவழைத்துவிட்டது.

"நீங்க ஹோமம் கீமம் பண்றதா சொல்லலியே" என்று கடுகடுத்தார்.

"என்ன சார், இதெல்லாம் சொல்லணுமா என்ன? கிரகப்பிரவேசமென்றால் ஒரு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்னு செய்யறது உண்டுதானே?"

"இந்த கிருஷ்ணபிரசாத் அபார்ட்மென்டுலே அதுக்கெல்லாம் பர்மிஷன் கிடையாது. உங்க வீட்டுப் புகை உங்களுக்குப் புனிதமா இருக்கலாம். புண்ணியமாயிருக்கலாம். இங்கே எட்டுத் தினுசு இனத்தவங்க இருக்காங்க. மூணு முஸ்லிம், நாலு கிறிஸ்டியன், இரண்டு ஆங்கிலோ இண்டியன், கடைசியாக ரெண்டு கொரியன்."

நாராயணன் கொஞ்சம் உஷ்ணமானான். "இப்போ ஆரம்பிச்சாச்சு... இனிமேல் ஜாக்கிரதையாயிருக்கேன்.."

"சரி.. சரி.. ஹோமத்திலே மேற்கொண்டு அள்ளிப் போட வேண்டாம். சடங்கு சம்பிரதாயம் முக்கியம்னாலும் நாம மற்றவர்களுக்கு நியூஸென்ஸாக இருக்கக் கூடாது. நான் நினச்ச மாதிரியே மாடு வாசல்பூரா அசிங்கம் பண்ணி வெச்சிருக்கு. யாரானும் வழுக்கி கிழுக்கி விழறதுக்கு முன் சுத்தம் பண்ணச் சொல்லுங்க. பெஸ்ட் விஷஸ் பார் த ஹாப்பி ஹௌஸ்வார்மிங் செரிமனி!"

புயல் புறப்பட்டுப் போயாயிற்று. கிரகப் பிரவேசம் முடிந்த பிறகு நாராயணன் கேட்டான். "டேய் ராம்! கைவசம் ஒரு நல்ல புத்தம்புது ஃபிளாட் இருக்கு. அறுபது பெறும். தெரிஞ்சுவங்க இருந்தால் சொல்லு. அம்பத்தஞ்சு லட்சம்னா பரவாயில்லை."

"எங்கிருக்கு..."

"இதோ இங்கே நாம உட்கார்ந்து பேசிண்டிருக்கிற இதே ஃபிளாட்தான்!"

அடுக்ககங்களின் அசௌகரியங்களுக்குப் பட்டியல் போட்டுக் கட்டுப்படி ஆகாது. இது சும்மா ஒரு சாம்ப்பிள்!