New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

வீடு தேடி வரும் சாம்பார்!

 

பாக்கியம் ராமசாமி

 

கரங்களில் அடுக்கக ஆக்கிரமிப்பு வேகமாகப் பரவி வருகிற காலகட்டத்தில், கூட்டுக் குடும்பங்கள் வேறுவழியின்றி உடைந்து, சிதறு தேங்காய் மாதிரி உறுப்பினர்கள் அங்கங்கே தனியாகக் குடித்தனம் செய்கிற நிலையில், மூத்த தம்பதியருக்குள் நெருக்கம் அதிகமாகிறதா, குறைகிறதா?

இது ஒரு பேரீச்சம்பழத்துக்குப் பயன்படக்கூடிய 'நீயா நானா' கேள்வி.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, மூத்த தம்பதியருக்கு (அப்பா அம்மாக்களுக்கு) தனிமை அதிகமாகக் கிடைக்கிறது என்று தோன்றும்.

மகனும் மருமகளும் அலுவலகத்தில் தந்த வசதியான குடியிருப்பிலோ, சொந்த வசதி வாய்ப்பில் தனிக் குடித்தனமோ போய் விடுகிறார்கள்.

 தொடர்பு சாதனமாக மொபைல் போன் இருப்பதால் உறவு விட்டுப் போவதில்லை.

'நாங்க ரெண்டு பேர்தானே!' என்று அப்பாவும் அம்மாவும் இரண்டே ரூம் போர்ஷனில் வசிப்பதில்லை. 'குழந்தைகளெல்லாம், நாள் கிழமையென்றால் வந்து போகவேண்டாமா?' என்று பெரிய அபார்ட்மென்ட்டிலேயே மூத்த குடியினர் வசதியாக இருப்பார்கள்.

கணவன் முகத்தை மனைவியும், மனைவி முகத்தைக் கணவனும் 24 மணி நேரமும் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற கடினமான, போர் அடிக்கிற காரியம் போன்று வேறு எதுவும் உலகத்தில் இல்லை என்பதே பலருடைய அபிப்பிராயம் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அதுவும் 'டபுள் காட்' தம்பதிகள் பாடு மகா பேஜார். இரட்டைக் கட்டிலில் படுப்பது என்பது தம்பதியருக்கு ஒரு சாதனைதான்.

சத்தியமாக இருவருமோ, அல்லது யாரேனும் ஒருத்தரோ குறட்டை விடுபவர்களாக இருந்துவிட்டால் இன்னும் சங்கடம்.

கணவன் கை ஓங்கியிருந்தால் மனைவியின் குறட்டையை நிறுத்த முயற்சி செய்வான். குறட்டை நிறுத்தல் பற்றிய உத்திகளை சதா கற்பித்துக் கொண்டிருப்பான்.

அதேபோல், மனைவியின் கை ஓங்கியிருந்தால் கணவனது குறட்டை ஒலியை நிறுத்த மனைவி பயங்கர உத்திகளெல்லாம் சொல்லுவாள்.

கணவனின் வயிறு பானை சைஸ் இருப்பதுதான் குறட்டைக்குக் காரணம் என்று யாரோ சொன்னதால், ஒரு அம்மையார் கணவனின் தொப்பை மேல் தினமும் தூங்கும்போது அம்மிக் கல்லைத் தூக்கி வைப்பாளாம்.

குறட்டையை விட்டுத் தள்ளுங்கள். ('குறட்டை விட்டுத் தள்ளுங்கள்' என்றதும் 'நிறையக் குறட்டை விடுங்கள்' என்று சொல்வதாக அர்த்தம் செய்து கொள்ள வேண்டாம். குறட்டை விடும் விஷயத்தை விட்டுத் தள்ளுங்கள்.)

தனிக் குடித்தனம் மூத்தோருக்கு சௌகரியமா, அசௌகரியமா என்பதே கேள்வி.

விசாலமான பிளாட்டில் குடித்தனம் செய்யும் மூத்த தம்பதியருக்கு சமையலோ சாப்பாடோ ஒரு பிரச்னையே இல்லை.

சாதம் மட்டும் நீங்கள் வடித்துக் கொண்டுவிட்டால் போதும். குழம்பு, சாம்பார், ரசம், பொறியல், அப்பளம், ஊறுகாய் என்று கச்சிதமாக வீட்டுக்கே கொண்டு வந்து சப்ளை செய்யப் பலர் கிளம்பியிருக்கிறார்கள். ஒரு செட் நூறு ரூபாய். தம்பதியருக்கு அது தாராளம். சமைக்கிற வேலை மிச்சம். கேஸ் செலவு கிடையாது. பத்துப் பாத்திரம் தேய்க்க வேண்டாம.

சாப்பிட்ட டிபன் கேரியரைக் கழுவி வைக்க வேண்டிய ஒரே வேலைதான். அதையும் சற்று அதட்டினால் புருஷன் செய்துவிடுவான். இரவுக்குச் சப்பாத்தியோ, பூரியோ, நாலோ ஆறோ எட்டோ... ஏதோ ஒரு இரட்டைப் படை எண்ணில் வந்து விடும்.

மற்றவர்கள் பொறாமைப்படும்படி ஹாயாக வயோதிக தம்பதியர் உட்கார்ந்து, தினமும் அலுப்பு சலிப்பில்லாமல் வீட்டுக் கணக்கு போட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஒரு நாளைக்கு 100 ரூபாய்னா ஒரு மாசத்துக்கு இவ்வளவு. இரவு டின்னர் ஒரு நாளைக்கு 80 ரூபாய்னா அது இவ்வளவு. அதுவும், இதுவும், ஆக மொத்தம் 'நம்ம' இரண்டு பேருக்கும் இவ்வளவுதான் ஆகும்! இதுவே உங்களுக்கு வேலைக்காரி சம்பளம் மிச்சம், பாத்திரம் தேய்க்கிற பவுடர் வாங்கவேண்டாம், எடுத்துக் கவுக்கிற வேலையும் கிடையாது. சமையல் மேடையைக் கொஞ்சம் ஒழிச்சு வைச்சுக் கொள்ள உங்களைக் கெஞ்ச வேண்டாம். காய்கறி விலை ஏறுகிறதேன்னு ரத்தம் கொதிக்க வேண்டாம்.

இது ஒரு பாதிக் கணக்கு, மறுபாதி...

கொண்டு வந்து சப்ளை செய்கிற மாமி அல்லது மாமாவுக்கு இதில் லாபம் எவ்வளவு கிடைக்கும்? நம்ம குடியிருப்பிலேயே ஆறு குடித்தனத்துக்கு சப்ளை பண்ணுகிறார்கள். அடேங்கப்பா, ஒரு குடித்தனத்து ஒரு நாளைக்கு 180 ரூபாய் என்றால், ஆறு குடித்தனத்துக்கு 1080 ரூபாய்.

ஒரு நாளைக்கு 1080 ரூபாய் என்றால் ஒரு மாசத்துக்கு நம்ம குவார்ட்டர்ஸ் மூலமாகவே 32,400 ரூபாய்! இன்னும் வேற வேற ஏரியாவிலேயும் பண்றாங்களாம்.

இப்படியாக சொந்த பட்ஜெட்டிலும், ஊரார் வீட்டு பட்ஜெட்டை அலசுவதிலும் நேரம் போகக்கூடும்.

அப்புறம் கணவன், நண்பர்கள் வீடு, கோயில், வாக்கிங் என்று கிளம்பி விடுவான்.

மனைவி அக்கம் பக்கம் வீடுகளுக்கு, 'என்ன காரியமெல்லாம் ஆச்சா?' என்ற முகவுரை முன்னுரையுடன் உள்ளே நுழைந்து எட்டு மணி சுமார் வரை அரட்டை அடித்துவிட்டுத் திரும்புவாள். அப்புறம் என்ன, ஆறின சப்பாத்தியோ பூரியோ, இரண்டோ மூணோ, பாலோ மோரோ... தலையணை படுக்கை ஜமுக்காளம் உதறல், கொசுவத்தி, கதவு செக்கிங், குடி தண்ணீர் ஏற்பாடு, டி.வி. ஆன் ஆஃப், சில சண்டைகள், லேசான மனஸ்தாபங்கள். இருவரோ, ஒருவரோ, தனித்தோ, சேர்ந்திசையிலோ குறட்டை. மூத்தோர் தனிக் குடித்தனம், குஷியா குமுறலா ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இப்போதெல்லாம் மூத்தவர்களிடையே 'ஹோம்' 'ஹோம்' என்ற ஒரு ஜுரம் பரவி வருகிறது. அது பறவைக் காய்ச்சல் மாதிரி அபாயமான ஜுரம் அல்ல என்றாலும் மூத்த குடிமக்களுக்கு திகில் தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது.

ஹோமுக்குப் போவது என்பது எல்லாருக்கும் கிடைத்துவிடக்கூடிய அதிர்ஷ்டம் அல்ல. (தனியாப் போவதற்கும் தனி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.)

ஹோமில் பிரதி மாதம் ஒருத்தருக்கு மட்டும் மாதம் குறைந்தது இருபதாயிரம் வசூல் செய்து விடுகிறார்கள். அனைத்து சௌகரியங்களையும் மருத்துவ வசதி உட்பட ஹோம்காரர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த வயோதிக தம்பதியர் 'ஹோம்காரம்' செய்துகொண்டு போனார்கள். ஹோமின் வசதிகளை வாய் ஓயாமல் தன்னைப் பார்க்க வருகிற மகன்களிடமும், மகள்களிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைவார்கள்.

விளைவு என்னவென்றால், விபரீதம்! 'நம்ம ஸிடியைவிட இது எவ்வளவோ தேவலையே. அங்கே ஒரே அடைசல். காற்றோட்டம் கிடையாது. இங்கே எவ்வளவு குளுகுளுவென்ற காற்று! வேளைக்கு சாப்பாடு! இங்கே கோவில் கீவில் எல்லாம் ஏற்பட்டுவிட்டது'.

'பேசாமல் நாங்கள் எல்லோரும் ஹோமுக்கு வந்துவிடுகிறோம். ஜாலியாக இருக்கலாம்' என்று பிள்ளை குட்டிகள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

அடக் கடவுளே! அவர்களெல்லாம் வந்துவிட்டால் 'ஹோம்! ஸ்வீட் ஹோம்!' என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியாதே என்று சில பெரியவர்கள் கலங்குகிறார்கள்.

ஆனால் தனியாக ஆனந்தப்படுவதைவிட பாசப் பிடுங்கல்களுடன் கூடிய நெரிசலான குடும்ப வாழ்க்கையே மேல் என்பது பல ஸீனியர் ஸிடிஸன்களின் கருத்து.