New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

ராமு மாமாவும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸும்!

 

எம்.பி. மூர்த்தி

 

ங்களுக்கு ராமு மாமாவைத் தெரியும்தானே?. தெரியாதா, வித்யாவின் சின்ன மாமனார். வித்யா யாரென்று உங்களுக்கு நான் சொல்லவில்லையே. வித்யா, சாரதா மாமியின் பெண். சாரதா மாமி பிருந்தாவின் சித்தி. பிருந்தா யாரென்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. என் மனைவி. சுருக்கமாக நான் சொல்லியிருக்கலாம். பிருந்தாவின் சித்தி பெண்ணின் சின்ன மாமனார். சரி அதற்கு என்ன என்று கேட்பீர்கள்.

சமீபத்தில் பிருந்தா குடும்பத்துடன் ஒரு கல்யாணத்திற்கு நான் ஶ்ரீரங்கம் சென்றிருந்தேன். ரொம்ப நாளைக்கப்புறம் நான் அந்த கல்யாணத்தில் தான் ராமு மாமாவைப் பார்த்தேன். ரொம்ப நல்ல மனிதர். "மாப்ளை! எப்படி இருக்கேள்?" என்று அன்போடு விசாரித்தார்.

 மண்டபத்து ஏ.சி ரூமில் என்னுடன் தங்கியிருந்தார். தூங்கும் வரை பேசினார். தூங்கியவுடன் குறட்டை விட்டார்.

காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு சந்தி பண்ணி பஞ்சகச்சம் ஜிப்பாவுடன் காசியாத்திரைக்கு தயாராகிவிட்டார். பிருந்தா, அப்பா, அம்மா, ரவி, பாச்சு, சாரதா மாமி, வித்யா, ராமு மாமா எல்லாரும் லலிதா மன்னி வீட்டில் தங்கினோம்.

மறுநாள் பிருந்தா அம்மா ரவியிடம் சொல்ல அவன் பாச்சுவிடம் சொல்லி திருச்சி கால் டாக்ஸிக்கு போன் பண்ணி ஒரு 14 பேர் போகும்படியாக ஏ.சி. டெம்போ டிராவலர் புக் பண்ணி அது வந்துவிட்டது.

இரண்டு மணிக்கு நல்ல வெய்யிலில் புறப்பட்டோம். புறப்பட்டு கொஞ்ச நேரத்தில் ராமு மாமா, "நிறுத்துங்கோ கொஞ்சம் வீட்டுக்குப் போய் என் பர்ஸ் எடுத்துண்டு வரணும். அதில் தான் என் ஆதார் கார்ட், கிரெடிட் கார்டு இருக்கு" என்றார்.

அதை எடுத்து வர வீட்டுக்கு மீண்டும் வித்யா போய் விட்டு "மாமா, ஷெல்ஃப்ல இல்லையே" என்றாள்.

"நன்னா தேடினியா" என்றார்.

இந்த முறை பாச்சுவும் வித்யாவோடு ஓடினான். இரண்டு பேரும் சேர்ந்து தேடியபோது பாச்சு போன் அலறியது. பாச்சு சரி என்றான்.

"என்ன பாச்சு?"

"வேண்டாம். வா வித்யா" என்றான்.

"பின்ன எங்க வைச்சிருக்காராம்?"

"அவர் பெட்டியிலேயே இருக்காம். பிருந்தா போன் பண்ணினா."

"வித்யா வந்து ஏறும் வரை வேன் டிரைவர் ஆஃப் பண்ணி விட்டதால் எல்லாரும் வியர்த்து விறுவிறுத்து சோர்வாகிவிட்டனர். "ஸாரி வித்யா. அங்க வைச்ச ஞாபகம். பெட்டியில் வச்சது மறந்து விட்டது." என்றார் மாமா.

சமயபுரம் கோவிலில் இப்போதுதான் கும்பாபிஷேகம் நடந்திருந்தது. நல்ல மத்யான வெய்யில் அனலாய்க் கொதித்தது. மண்டபத்தில் கோவில் கோபுரத்துக்கு அருகில் திருப்பணி நடப்பதால் தடுத்து இடது பக்கமாக கோவிலுக்குப் போக வழி.

எல்லாரும் ஒரு கடையில் ஓரமாக செருப்பைப் போட்டு விட்டு அவரிடம் பூ வாங்க மாமா பேரம் பேச பூக்காரர் "இஷ்டமிருந்தா வாங்குங்க இல்லாட்டி போங்க" என்றவுடன் முனுமுனுத்துக் கொண்டே நகர்ந்தார்.

கோவில் வரை சிமெண்ட் ரோடு. வெய்யில் கொளுத்தியது. காலில் கொப்பளம் வரும் அளவு சூடு. எல்லோரும் டான்ஸ் ஆடாத குறை.

அதிலும், ராமு மாமா பஞ்சகச்சத்தில் காலைத் தூக்கி ஆடிய டான்ஸ் பார்க்க சிரிப்பாய் வந்தது. அவர் முகம் சிவந்து விட்டது. ஒரு வழியாக கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணி விட்டு வலது புறமாக மறுபடியும் ஒரு தீமிதி மிதித்து செருப்பு வைத்த இடத்துக்கு வந்து செருப்பைக் காலில் போட்ட பிறகுதான் உயிர் வந்தது.

வேனுக்குள் ஓடி உட்கார்ந்த போது மணி2.30.

"அடுத்தது எங்க?" என்று மாமா கேட்க.

லலிதா மன்னி "திருப்பட்டூர் போகலாம்" என்றாள்.

"குணசீலம் போகணும்."

"ஆமாம். அவசியம் பிருந்தா ஒரு தடவை அங்க போகணும்" என்றான் பாச்சு சிரித்தபடியே.

"பாச்சு என்னை பைத்தியம்ங்கறயா" என்று சண்டைக்கு வந்தாள் பிருந்தா..

"இல்லை பிருந்தா. அத்திம்பேர்" என்றான்.

 "என்னடா?" என்றாள்.

"இல்லை பிருந்தா. அத்திம்பேர் பார்த்ததில்லைன்னு சொல்ல வந்தேன்."

வேனில் பாட்டு பெரிதாக போட்டதால் சண்டை பலவீனமுற்றது. ராமு மாமா டிரைவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். "அப்பா, எனக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் பிடிக்கணும். என்னை ஒரு ஏழரை மணிக்கு திருச்சி ஜங்ஷன்ல விட்டுடணும்."

"சரி சார்" என்றான் அந்த டிரைவர் பையன்.

திருப்பட்டூரிலும் கோவில் திறக்க வில்லை. சோடா கடையில் மாமா மசால் சோடா சாப்பிட்டார். நான் பிருந்தாவுக்குப் பிடிக்குமே என்று பன்னீர் சோடாவை கொண்டு போய்க் கொடுத்தேன்.

நான் கடையில் இருக்கும்போது பாச்சு "அத்திம்பேர் லெமன் சோடா நாலு" என்று சின்ன ஹோட்டலில் டேபிளிலிருந்து சரக்கு மாஸ்டரைப் பார்த்து கத்தும் சர்வர் போல கத்த, நான் நாலு சோடா பேப்பர் டம்ளரில் எடுத்து ஒரு அட்டையில் வைத்து அவிழ்ந்து விடும் வேஷ்டியை ஒரு கையால் பிடித்தபடி அவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்தவுடன், கையில் பன்னீர் சோடாவை வைத்துக் கொண்டு பிருந்தா, "யார் கேட்டான்னு நாலு சோடா இப்ப வாங்கிண்டு வரேள். இங்க எல்லாரும் பன்னீர் சோடா குடிச்சாச்சு" என்றாள்.

ராமு மாமா என்மீது இரக்கப்பட்டு, "நான் குடிக்கிறேன். மாப்பிளை பாவம் கஷ்டப்பட்டு வாங்கிண்டு வந்திருக்கார்" என்று ஒரு டம்பள்ரை வாங்கிக் கொண்டார். பாச்சு ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டான்.

 பிருந்தாவின் அம்மா "பிருந்தா, எனக்கொன்னு குடு. வயிறு உப்பசமாக இருக்கு" என்றாள்.

கதவு திறந்தவுடன் பிரம்மபுரீஸ்வரரைத் தரிசனம் பண்ணினோம். பக்கத்தில் பிரகாரத்தில் பிரம்மா.

நான் தல வரலாறு படித்ததில் இந்தக் கோவிலில் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி தெற்குப் பகுதியிலும், பாதாள லிங்கம் வடக்குப் பகுதியிலும் இருப்பதாகப் போட்டிருந்தது.

கைடு போல நான் எல்லாரிடமும் "இதுதான் பதஞ்சலி ஜீவசமாதி" என்றேன்.

பிருந்தா அம்மா "அவா கோதுமை மாவு நன்னாவே இல்லை" என்றாள்.

 எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ரவி "அம்மா, அந்த பதஞ்சலி இல்லை."

பிருந்தா அம்மா விடாப்பிடியாக "டி.வி.யில தாடி வைச்சுண்டு யோகா சொல்லிக் கொடுப்பாரே" என்றாள்.

ரவி "அது பாபா ராம்தேவ் அவர் கம்பெனி பேரு பதஞ்சலி. இது பதஞ்சலி யோகா சொன்ன சித்தர் பதஞ்சலி முனிவர்" என்று சொன்னதும்.

"அப்படியா, அப்ப இவரது இல்லையா" என்றாள்.

ஒரு வழியாக வெளியே வந்த போது கொஞ்சம் வெய்யில் குறைந்தது. மாமா டிரைவரிடம் "ஏழரை மணிக்கு திருச்சி ஜங்ஷன்" என்றார்.

டிரைவர் கொஞ்சம் பொறுமை. "சரி சார்" என்றான்.

"அடுத்தது எங்க?" என்றார் மாமா.

"குணசீலம்" என்றாள் பிருந்தா. அவள் குரல் ஒரு மாதிரி சந்திரமுகி மாதிரி இருந்ததாக எனக்குத் தோன்றியது. டிரைவர் நல்ல வேகமாக ஓட்டி 5.30க்கு குணசீலம் கோவிலுக்கு முன் கொண்டு வந்து விட்டான்.

 மாமா முதலில் போனார். எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் பிடிக்கும் அவசரம் அவர் நடையில் தெரிந்தது. எல்லாருக்கும் ரவி டிக்கெட் எடுக்க நல்ல தரிசனம்.

வெளியில் வந்து பிருந்தா அம்மா, பிருந்தா காதில் முணுமுணுக்க எல்லாப் பெண்களும் கோவிலுக்குப் பின் பக்கம் கட்டணமில்லா கழிப்பறைக்குப் போனார்கள்.

வேனுக்கு அருகில் நானும் மாமாவும் நின்று கொண்டிருந்தோம். சைக்கிளில் பூ விற்றுக் கொண்டிருந்த பூக்காரரிடம் மாமா பேசிக் கொண்டிருந்தார்.

தனது சிறுகாம்பூர் கிராமத்தில் சொந்தத் தோட்டத்தில் விளைந்தப் பூக்களை 11 மணி வரை பறித்து திருச்சிக்கு அனுப்பிவிடுவாராம். அப்பறம் பறிப்பதில் ஒரு மூணு கிலோ தெருவில் கட்டி இங்கு கொண்டு வந்து விற்பாராம்.

எல்லோரும் வர வேன் புறப்படும் போது இந்த முறை டிரைவர் மாமா பக்கம் திரும்பி "ஏழரை மணிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ். உங்களை ஜங்ஷனில் விட்டுடறேன்" என்றதும் மாமா வாயடைத்துப் போனார். நான் வேறு பக்கம் திரும்பி சிரித்தேன்.

வழியில் சாரதா, "உறையூர் வெக்காளி அம்மன் கோவில்" என்றாள்.

பிருந்தா அம்மா "முதல்ல தாயுமானவர் கோவில் போயிடுவோம். ஏன்னா வேண்டுதல் ஒண்ணு பாக்கி. பிருந்தா பொறந்த போது வேண்டிண்டது. இப்படி தட்டிப் போயிண்டே வந்துடுத்து."

லலிதா மன்னி, "டிரைவர், கோவில்கிட்டயே நிறுத்திடுப்பா" என்று சொல்ல, டிரைவர் "விடறாங்களா பாப்போம்" என்றபடி சந்துக்குள்ளே ஓட்டி கொண்டு வந்து விட்டான். மணி 6.50. நானும் ரொம்பப் படி ஏற வேண்டாம் என்று நினைத்தேன்.

டிரைவர் எங்களை விட்டு விட்டு பார்க்கிங் போடப் போய்விட்டான். நாங்கள் படியருகில் வந்தோம். இறங்கி வருபவர்களிடம் ராமு மாமா விசாரித்தார். "எத்தனை படி இருக்கும்" என்றார்.

"200 படி" என்றதும் மாமா மலைத்து விட்டார்.

பிருந்தா அம்மா "என்னால் முடியாது நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன். நீங்க திரும்பி இந்த வழியிலதானே வரணும்?"

"ஆமாம் அம்மா நீ உட்காரு" என்றபடி பிருந்தா எல்லாரும் புறப்பட ராமு மாமா ஒரு முடிவெடுத்து "மாப்ளை! நான் வரலை இப்படியே போயிடறேன்" என்றார். திரும்பிப்பார்த்தேன் எல்லாரும் ஒரு 30 படி ஏறி விட்டார்கள்.

நான் ராமு மாமாவுடன் ஜங்ஷன் போய் அவரை டிரெயின் ஏற்றி விடலாமென முடிவு செய்தேன். பாச்சுவிடம் விபரம் சொல்லிவிட்டு வேன் இருக்கும் இடம் வரும்போதுதான் டிரைவரின் போன் நம்பர் இல்லை என்பது ஞாபகம் வந்தது. பாச்சுவுக்கு போன் பண்ணி நம்பர் வாங்கிக் கொண்டேன்.

டிரைவருக்கு போன் பண்ண, அவர் டீ குடிக்கப் போயிருக்க, வேனுக்கு அருகில் காத்திருந்த மாமா, பெட்டியை எடுத்துக் கொண்டு, ஏறும் படிக்கு எதிரில் வந்து ஒரு 50 படி இறங்கி அந்த கூட்டமிகுந்த தெருவில் அவரை அழைத்துக் கொண்டு மெயின் கார்ட் கேட்டில் போய் பஸ் பிடித்து ஜங்ஷனுக்குப் போகலாம் என்று நினைத்தேன். நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்.

தெப்பக்குளத்திற்கு அருகில் மங்கள் மங்கள் தாண்டி ஒரு கடையில் மல்லிகைப் பூ கொட்டிக் கிடந்தது. 'கால் கிலோ 20, கால் கிலோ 20' என்று கூவிக்கொண்டிருந்தான். பிருந்தாவுக்கு பிடிக்குமே என்று ஒரு பாக்கெட் வாங்கினேன். மாமா இருப்புக் கொள்ளாமல் தவித்தார். நான் வேஷ்டியை இறுக்கிக் கட்டி "பிருந்தாவுக்கு பிடிக்கும் என்று வாங்கினேன் வாங்கோ போகலாம்" என்று புறப்பட்டேன்.

அந்த சமயம் ரவி மாமா வீட்டிலிருந்து போன் வந்தது. இரவு டிபன் அவர்கள் வீட்டில் என்பதால் எப்ப வரேள் என்று கேட்டார்கள். நான் விபரம் சொல்லி விட்டு திரும்பினேன்.

என்ன சொல்வது ராமு மாமாவைக் காணவில்லை. ஒரு கணம் எனக்குத் தலை சுற்றியது. மணிஆகிக் கொண்டிருந்தது. திருவிழாவில் குழந்தையைத் தொலைத்த பெற்றோர் மாதிரி என் நிலைமை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் போன் நம்பரும் என்னிடம் இல்லை.

பிருந்தாவுக்கு போன் பண்ணி கேட்க. மாமாவைக் காணவில்லை போன் நம்பர் இல்லை. அவருக்குப் போன் பண்ணி நான் தெப்பக்குளத்திற்கு அருகில் நிற்பதாக சொல் என்றேன். கொஞ்ச நேரத்தில் பாச்சு, "போன் பண்ணி சொல்லியாச்சு அவன் நீங்க பேக் எடுத்துண்டதா சொல்றானே." என்றான்.

நான் அதிகமாகிய பி.பி யை அடக்கிக் கொண்டு "பாச்சு, ராமு மாமா தெப்பக்குளத்துகிட்ட காணாமப் போயிட்டார்" என்றார்.

பாச்சு பதறியடித்து "தெப்பக்குளத்திலயா! அவர் எங்கே அங்க போனார்? நன்னா தேடினேளா?" என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டு என் பொறுமையைச் சோதித்தான்.

"பாச்சு, ராமு மாமா போன் நம்பர் அனுப்பு" என்றேன். நம்பர் வந்தவுடன் அவருக்கு அவசரமாக போன் பண்ணினேன். அவர் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. எனக்கு டென்ஷன். மறுபடியும் மறுபடியும் கூட்டத்தில் அலைந்தேன். அடுத்த முறை உச்சிப் பிள்ளையாருக்கு படியேறி வந்து பத்துத் தோப்புக்கரணம் போடுவதாக வேண்டிக் கொண்டேன். திடீரென்று பலே பாண்டியா எம்.ஆர்.ராதா குரலில் "மாப்ளே" என்று குரல் கேட்க, ராமு மாமா கிடைத்து விட்டார்.

"எங்கே போனேள்?" என்று பொறுமையாகக் கேட்டேன்.

அவர், நடுவில் கார் வந்ததால் என்னைத் தொலைத்துவிட்டதாகவும் பூ வாங்கிய இடத்திலேயே நான் எப்படியும் வருவேன் என்று நின்று கொண்டதாகவும் சொன்னார்.

அலறி அடித்துக் கொண்டு ஓடி பஸ் பிடித்து அவரைக் கையைப் பிடித்து ஜங்ஷனில் கொண்டு போய் விட்டேன். அதற்குள் கோவிலுக்குப் போன கோஷ்டி இறங்கி வர எல்லாரையும் "இனி வேறு எங்கயும் போக வேண்டாம் நேரே ஸ்டேஷனுக்கு வந்துடுங்கோ நாம கே.கே நகருக்குப் போகலாம்" என்றேன்.

ராமு, மாமா உபசாரமாக , "மாப்பிளே உங்களுக்குத் தான் ரொம்ப சிரமம். நான் போய்க்கிறேன். நீங்க போங்கோ" என்றார். நான், "பரவாயில்லை" என்று போர்டைப் பார்த்தேன். எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரண்டாவது பிளாட்பாரத்தில் 8.25க்கு என்று போட்டிருந்தது. மணி 8 தான் ஆனது. நிறைய நேரம் இருக்கிறது.

நான் வாசலில் நின்று மாமாவிடம் "மாமா, நீங்க இந்த சப்-வேயில இறங்கி அடுத்த படியில ஏறிடுங்க. நான் இங்க இருந்த படியே பார்த்துட்டு கிளம்பிடறேன்" என்றேன்.

"நான் போய்க்கறேன் நீங்க போங்க" என்றார்.

போயிருக்கலாம் விதி வலியது. நான் பரவாயில்லை என்று நின்றேன். இன்னும் இரண்டு நிமிடத்தில் மாமா படியேறி விடுவார் ஒரு கை அசைத்து விட்டு போகலாம் என்று நின்றேன். என் போறாத காலம் முதல் பிளாட்பாரத்தில் ஒரு டிரெயின் வந்து இரண்டாவது பிளாட்பாரத்தை மறைத்து விட்டது.

நான் ஓடிப் போய் ஒரு பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி தலை தெறிக்க ஓடினேன். படியில் ஏறி இரண்டாவது பிளாட்பாரத்தில் ஏறினால் மாமாவைக் கண்ணுக்கெட்டிய வரை காணவில்லை. பாச்சு போனில் "அத்திம்பேர், வரேளா? நாங்க வெளியிலே வெயிட் பண்றோம்" என்று சொல்ல, வரேன் என்று சொல்லி விட்டு நான் 'கார்த்தவீர்யார்ச்சுனா' சொன்னேன். தொலைந்து போன பொருள் கிடைக்க சின்ன வயதில் அம்மா சொல்லிக் கொடுத்த மந்திரம். பலித்தது.

மாமா நிதானமாக எதிர் முனையிலிருந்து வந்தார். "நீங்களும் ஊருக்கு வரேளா?" என்று ஜோக் அடித்தார்.

"அங்கிருந்து உங்களைப் பாக்க முடியலே" என்றேன்.

"நான் படியேறி நின்னு பாத்தேன். வண்டி மறைச்சுடுத்து. சரி, வண்டி வரதுக்குள்ள ஒரு பால் சாப்பிட்டு இரண்டு ரஸ்தாளி வாங்கிண்டு வந்தேன். நீங்க எடுத்துக்குங்கோ" என்றார்.

வேண்டாம் என்று நான் நாசுக்காக மறுத்து விட்டு ஓட்டமும் நடையுமாக வேனுக்கு வந்தேன்.

கே.கே. நகர் இறங்கும் வரை யாரிடமும் பேசவில்லை. இறங்கும் போது சாரதா, "அத்திம்பேர்! ராமு மாமா டிரெயின் ஏறிட்டாராம். உங்ககிட்ட சொல்லச் சொன்னார். ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லச் சொன்னார்" என்றாள்.

"பரவாயில்லை. இது என்ன ஒரு சின்ன உபகாரம் என்னால முடிஞ்சது" என்றேன்.

பிருந்தா "அதெல்லாம் அவர் செய்வார்" என்றாள்.

பாச்சு "கேட்கணும்னு நினைச்சேன் எப்படி அவரை தெப்பக்குளத்துல தொலைச்சேள்?" என்றான்.

"டிபன் சாப்பிட்டுட்டுச் சொல்றேன் பாச்சு" என்றேன் சிரித்துக் கொண்டே, என் பொறுமையை நினைத்து எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.