New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

கொசு அடிப்பது ஒரு கலை!

 

பாக்கியம் ராமசாமி

 

கொசுக்களை எப்படி ஒழிப்பது என்பதுப் பற்றி பல மேதைகள் பல வழிகளைச் சொல்லியிருக்கிறார்கள். சொந்த அனுபவத்திலிருந்து சில யோசனைகள் :

சில கில்லாடிக் கொசுக்கள் மேல் தளத்தில் ஒட்டிக் கொண்டுவிடும். மின்விசிறி சுழன்றாலும் பாதிக்கப்படாமல் சாமர்த்தியமாக மேல் தளத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

விசிறியை நிறுத்திவிட்டு ஒட்டடைக் கொம்பை எடுத்துக் கொள்க.

கொம்பின் பிரஷ் பகுதியை கொசு ஒழிப்பு எண்ணெயில் தோய்த்தெடுங்கள். தோய்க்க வசதி இல்லாதோர் தெளித்துக் கொள்ளுங்கள்.

ஒட்டடை அடிப்பது போல தளத்தில் உள்ள கொசுக்கள் ஒவ்வொன்றின்மீதும் குறிவைத்து பிரஷ்ஷைக் கொண்டு தாக்குங்கள். துடையுங்கள்.

ஒட்டடை பிரஷ்ஷினால் கொசு தாக்கப்படாமல் தப்பித்தாலும் அதில் தோய்ந்துள்ள மருந்தினால் சில சமயம் அதற்கு மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழக்கூடும்.

சில அதி சாமர்த்தியக் கொசுக்கள் ஒட்டடைக் கொம்பின் பிரஷ் பகுதியிலேயே புகுந்து மறைந்து கொண்டுவிடும்.

மனம் தளர வேண்டாம். ஒட்டடைக் கொம்பு நுனியில் ஒரு பிளாஸ்டிக் பையைக் கவிழ்த்து, ஒரு கயிறால் இறுகக் கட்டிவிடுங்கள்.

இப்போ ஒட்டடைக் கொம்பின் நுனி, குத்துச் சண்டை வீரரின் உறை போட்ட கை மாதிரி இருக்கும். அதைக் கொண்டு கொசுவைத் தாக்கினால் கொசு தாக்கப்பட சான்ஸ் நிறைய உண்டு.

சில மூர்க்கமான கொசுக்கள் 'ஙீ' என்று நம் மூக்கைக் குறி வைத்துத் தாக்க வரும் அடிப்பட்ட புலிபோல.

நீங்கள் பயப்பட வேண்டாம். வாயில் புகுந்து கொண்டால், தொலைந்து போகிறது தின்றுவிடுங்கள்.

மூக்கில் புகுந்து கொண்டால், எந்த நாசித் துவாரத்தில் புகுந்ததாக உணர்ந்தீர்களோ அதற்கு மறு துவாரத்தை மூடிக்கொண்டு பெரிதாக 'ப்ளோ' செய்யுங்கள்.

'ஹூம்...' என்று அழுத்தமாக ஒரு சிந்து சிந்தினால் உள்ளே புகுந்த கொசு வெளியே வந்துவிடும். மூக்குப் பொடி போடுகிறவர்களுக்கு இத்தகைய கொசு நுழையும் அபாயம் குறைவு. பொடி நாசிக்காரர்களின் மூக்குப் பக்கம் கொசுக்கள் வர அஞ்சும் என்பார்கள்.

மேலே போட்டிருக்கும் துண்டினால் கொசுவை அடிப்பவர்கள் ஒரு விஷயத்தில் கவனமாயிருப்பது நல்லது. கொசுக்களையே நினைத்துக் கொண்டிருப்பதால் 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல, சுவரில் கருப்பாக எதைப் பார்த்தாலும் கொசுவோ என்று தோன்றும். படீரென்று துண்டினால் அடித்துவிடுவார்கள்.

சில சமயம் சிறு ஆணிகளாகக்கூட அவை இருக்கலாம். துண்டு டர்ரென்று கிழிந்துவிடக்கூடும். ஆகவே பழைய துண்டையே பயன்படுத்துங்க.

மிக முரட்டுத் துண்டோ, மிக மிருதுவான துண்டோ (தேங்காய்ப்பூத் துவாலை) உதவாது.

காசித் துண்டு போல மெல்லிசாக, கைக்குக் வாலாயமாக வரும் ரகத் துண்டுதான் கொசு அடிக்கச் சிபாரிசு செய்யப்படுகிறது.

துண்டை வீசுவதிலும் ஒரு லாகவம் வேண்டும்.

கொசு எந்தத் திசையில பறக்கக்கூடும் என்று ஊகித்து ஒரு 'ஸ்வீப்' கொடுத்துத் தட்டவேண்டும்.

சுரண்டல் லாட்டரியில் சரியாகச் சுரண்டின மாதிரி உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால், நீங்கள் வீசுகிற பக்கமே கொசு எழுந்து பறந்தால் நிச்சயம் கொசுவுக்கு மரணம்தான்.

கொசு வேட்டையாளர்கள் தங்கள் காது மூக்கு இவற்றில் பஞ்சை அடைத்துக்கொள்வது முக்கியம். கொசு ஒழிப்பு எண்ணெயைப் பீச்சாங் குழலில் பேராசையோடு நிறைய நிரப்பிக்கெண்டு மேலே தூக்கி அடித்தால் உங்கள் மீதே தபதபவென்று மருந்து கொட்டும் அபாயம் உண்டு. அப்படி ஆபத்து நேர்ந்தால் சந்தோஷப்படுங்கள். கொஞ்ச நேரத்துக்கு உங்கள் மேல் கொசு மொய்க்காது!

பல மட்டங்களில் கொசுக்கள் பறந்து கடிக்கக் கூடியவை.

கொசு இனத்திலும் முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு இருக்கக்கூடும் என்று கொலராடா கொசு ஆராய்ச்சி மையம் கருதுகிறது.

சில கொசுக்கள் காலை மட்டுமே கடிக்கும்.

சில முகத்தை மட்டும் மொய்த்துக் கடிக்கும்.

சிலது இதையும், கடித்து அதையும் கடிக்கக் கூடியவை.

அடிப்பட்டதும் சில கொசுக்கள் தங்கள் ரத்தத்தை வெளிப்படுத்தியவாறு இறந்துவிடுகின்றன.

சில ரகங்கள் வெறுமே இறந்துவிடுகின்றன. ஆனால் ஒரு தரம் இறந்தால் இறந்ததுதான். வீர மரணம் விரும்பும் கொசுக்கள்.

சும்மா மாய்மாலமாகப் படுத்திருப்பது, பாசாங்கு செய்வது, மீண்டும் எழுந்து பறப்பது போன்ற கோழைத்தனமான செயல் அவற்றிடம் கிடையாது. செத்தால் செத்ததுதான்.

'மாலை நேரம் லட்சுமிதேவி வரும் நேரம்' என்று கதவைச் சிலர் நீண்ட நேரம் திறந்து வைத்திருப்பார்கள். லட்சுமிதேவி வருகிறாளோ இல்லையோ அந்தச் சமயம் ரெண்டாயிரம், மூவாயிரம் கொசுக்கள் ஊடுருவி உள்ளே வந்துவிடும் அபாயம் உண்டு.

வருவதானால் லட்சுமிதேவி வலைக் கம்பிபோட்ட ஜன்னல் வழியே கூட வரலாம். வரக்கூடாது என்றால் எத்தனை அகலமாகத் திறந்திருந்தாலும் வரமாட்டாள்.

புகை போட்டால் கொசு வராது என்பது முழு அளவு உண்மையல்ல.

கொசு மருந்து போட்ட பீச்சாங் குழலைத்தான் கொசு அடிக்கப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வெறும் தண்ணீரைப் போட்டு அடித்தாலும் போதும். ஆனால் வீடு பூராத் தண்ணியாகும்.

ஒரு ஜோக் :

"வாயைத் திறந்துகொண்டு இப்படித் தூங்குகிறான். இவ்வளவு கொசு இருக்கு. ஆனால் ஒரு கொசுகூட அவன் வாயில் போகலையே!"

"அவன் தவறுதலாக 'ஓடோமாஸ்'லே பல்லைத் தேய்ச்சுட்டான்!"