New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

 

கம்பன் பாடிய தேன் தமிழ் - 14


கீரனூர் ராமமூர்த்தி

வசிஷ்ட மா முனி திருமண சடங்குகளை  வைதீக முறைப்படி தொடங்கி வைத்தார்

தண்டிலம் விரித்தனன், தருப்பை சாத்தினன்;

மண்டலம் விதி முறை வகுத்து , மென் மலர்

கொண்டு  நெய்  சொரிந்து , எரி  குழும  மூட்டினன்;

பண்டு  உள மறை நெறி  பரவிச்  செய்தனன்

(தண்டலம் = மணல் )

கீழே மணல் பரப்பி, ஹோம குண்டத்தில்  அக்னி மூட்டி, நெய் வார்த்து திருமண சடங்குகள் தொடங்கப்பட்டன

சீதை வந்து இராமரின் அருகே அமர்கின்றாள்

மன்றலின் வந்து , மணத்தவிசு ஏறி

வென்றி  நெடுந்தகை வீரனும் , ஆர்வத்து

இன் துணை அன்னமும் , எய்தி இருந்தார்;

ஒன்றிய  போகமும் யோகமும் ஒத்தார்

     (மன்றல் = மணவறை )

பங்குனி உத்திரம்  நன்னாளில் ‘திருமணம்”   நடைபெற்றது

அந்தணர் ஆசி , அருங்கல மின்னார்

தந்த பல்லாண்டு இசை , தார் முடி மன்னர்

வந்தனை, மாதவர் வாழ்த்து ஒலியோடு

முந்திய  சங்கம்  முழங்கின  மாதோ  

வானவர் பூ மழை , மன்னவன் பொன் பூ,

ஏனையர்  தூவும் இலங்கு ஒளி  முத்தம்,

தான்  நகு  நாள்மலர் , என்று இவைதம்மால்

மீன் நகு வானின் விளங்கியது , இப்பார்

கைத்தலம் பற்றி, அக்னி வலம் வந்து, அம்மி மிதித்து, எதிரே அமர்ந்திருந்த அருந்ததி பார்த்து ,திருமண சடங்குகளை பூர்த்தி  செய்தனர்

(தற்காலங்களிலும் கூட , அக்னி வலம் வந்து, அம்மி மிதித்து , சப்தபதி ஏறி ,அருந்ததி பார்த்து என்று வரும் . ஆனால் வசிஷ்டரின் மனைவி அருந்ததி அப்போது நேரிடையாகவே  சீதா திருமணத்தில் கலந்து கொண்டாள் . தற்போது வானில் நட்சத்திரமாக ஜொலிக்கின்றாள் )

வெய்ய கனல்தலை வீரனும் , அந்நாள்,      

மைஅறு  மந்திரம் மும்மை வழங்கா,

நெய்  அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்

தையல்  தளிர்க்கை ,தடக்கை பிடித்தான்

(மும்மை = மூன்று முறை (நெய் அமை ஆவுதி : ஹோம குண்டத்தில் நெய் வார்த்தான்

வலம்கொடு  தீயை வணங்கினர், வந்து 

பொலம் பொரி  செய்வன செய் பொருள் முற்றி 

இலக்கு  ஒளி  அம்மி  மிதித்து , எதிர் நின்ற

கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்

மங்கல  ஆரவார வாழ்த்தொலிகள்

ஆர்த்தன பேரிகள் , ஆர்த்தன சங்கம்,

ஆர்த்தன நான்மறை , ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை , ஆர்த்தன பல்லாண்டு,

ஆர்த்தன வண்டு இனம் , ஆர்த்தன வேலை

மூவர் தம்பிமார்களுக்கும் திருமணம்

ஜனக மகாராஜாவின் தம்பி குசத்துவஜன் மகள்களான

மாண்டவியை பரதனுக்கும், ஊர்மிளையை இலக்குவனுக்கும், சுருதகீர்த்தியை  சத்ருக்குனனுக்கும்  திருமணம் செய்து வைத்தனர்

பிறகு சில நாள்  அவர்கள்  மிதிலையில்  தங்கி  இருந்தனர்

- தொடரும்