New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

மார்ச் மாத (2017)

 ஈரோடு அக்கறை

 

டாக்டர் டி.ஜி.ஆர்.

 

அலெக்ஸாண்டர் 'தி கிரேட்' ஈரோடு வருகை

ரோடு அக்கறையின் மார்ச் மாதக் கூட்டம் யாழிரெஸிடென்ஸியில் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் துவங்கியது.

என்னுடைய நண்பரும் சிறப்பு விருந்தினருமான திரு. அலெக்ஸாண்டரை நான் 'அலெக்ஸாண்டர் தி கிரேட்' என்றே கூப்பிடுவேன்.

திரு. அருள்மணி அவர்களுடைய இறை நேரத்துடன் ஆரம்பித்த இந்த கூட்டத்திற்கு அதிக அளவில் ரோட்டரி சங்கத்தினர்களும் வந்திருந்தனர்.

அக்கறை சார்பாக திரு. சக்தி நல்லசிவம் அவர்களும், ரோட்டரி சார்பாக திரு. A.S. அய்யர் அவர்களும் கூட்டத்தினரை வரவேற்றனர்.
 

டாக்டர் டி.ஜி.ஆர். தலைமை உரையில் திரு. அலெக்ஸாண்டரின் வருகை பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு, கடைசியாக Dr. T.A. தங்கவேல் முயற்சியால் இன்று நடைபெறுகிறது என்று கூறினார்.

 

திரு. அலெக்ஸாண்டர் தென்னிந்திய கோவில்களில் மட்டுமின்றி கிழக்காசிய நாடுகளில் ஆராய்ச்சிகள் செய்து பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். கர்நாடக அரசிற்கு இவர் ஒரு முக்கிய ஆலோசகர்.

 

டாக்டர் ஜீவா அவர்கள் டாக்டர் அலெக்ஸாண்டரைப் பற்றி ஒரு அறிமுக விளக்கத்தை எழுதி இருந்ததை அப்படியே விவரித்து Dr. T.A. தங்கவேல் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசியதாவது.

 


டோபி எனும்
தோமஸ் அலெக்ஸாண்டர்
பொறியாளர், புகைப்படக் கலைஞர்,
கோவில் ஆய்வாளர்
முரண்பாடுகளின் மொத்த ஆல்பம்
பிறப்பால் கிறிஸ்துவர்
இந்தியக் கோவில்களைத் தேடித் தேடி ஆய்பவர்
கோவில்களின் கடந்த காலத்தின் கலைகளின் பெட்டகம்
கல்லில் எழுதிய கற்சாசனங்கள்
கலைஞர்கள் வடித்த மாயா வாதங்கள்
கற்கள் கடவுளாய் மாறிய அற்புதம்
கோவில்கள் பக்தியை மிஞ்சிய பாதுகாப்பு அரண்கள்
தானியம் காத்த சேமிப்புக் கிடங்குகள்
செல்வங்கள் காத்த மன்னர்களின் ரிசர்வ் வங்கி
மன்னர்கள் வழங்கிய 100 நாள் வேலைத்திட்டம்
டோமி...
ஆயனச் சிற்பியை உயிர்த்தெழச் செய்பவர்
பெருந்தச்சன் படைப்பை ஆல்பத்தில் தருபவர்
சிலைகளில் சரித்திரம் படிப்பவர்
காசியின் மீதும் ஆர்வம் கொண்டவர்
கால்பந்தாடவும் கற்றுத் தருபவர்
மதங்களைக் கடந்த மனிதாபிமானி
நட்டகல்லும் பேசுமோ! எனும் சித்தர் மரபினர்
தேவனை விடுவிக்கும் விடுதலைச் சிந்தனையாளர்
நாசங்கள் போக்கும் 'அவிநாசி' தேடி வந்தவர்
டி.ஜி.ஆர். அழைக்க இக்கறை வருகிறார்
கோவில்கள் பற்றிக் கேள்விகள் கேட்போம்
சிலைகளின் ரகசியம் கேட்டு அறிவோம்
கோவில்கள் இனிமேல் நம்மிடம் புதுக்கதை பேசும்.


அலெக்ஸாண்டர் கூறிய கருத்துக்கள் :

தான் ஒரு கிறிஸ்துவராக இருந்தும் இந்த இந்து கோவில்களின் சிற்பங்களை ஆராய்வதற்கு, ஒரு வாழ்நாள் சந்தர்ப்பம் அளித்த அந்த இறைவனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்றார்.

தென் இந்தியாவில், ஏன் இந்தியாவிலேயே ஜைன மதம்தான் கால் ஊன்றி இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆதிசங்கரர் மற்ற புத்தமத பிரசாரங்களால் ஜைன மதம் அழிந்துவிட்டது. இருந்தாலும் இன்னும் பல ஜைன கோவில்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன என்றார். பல பல்லவ மன்னர்கள் பாண்டிய மன்னர்கள் ஜைன மதத்தை பின்பற்றினார்கள். அரசன் அசோகன், கௌந்தி அடிகள் போன்றோர் ஜைனர்களே என்றார்.

பல அரசர்கள் கோவில்களை உருவாக்குவதில் அதிக அளவில் பணமும் நேரமும் செலவழித்தனர்.

கிழக்காசிய நாடுகளில் பல இந்துக் கோவில்கள் சிதிலமடைந்த நிலைகளில் உள்ளன. உதாரணத்திற்கு அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம்.

அவர் சொன்ன ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் : இயேசு கிறிஸ்து சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தார் என்ற செய்தி.

அக்கறை நண்பர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அவர் சொன்ன ஒரு சரித்திர நிகழ்ச்சி யாருக்கும் தெரியாத ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆராய்ச்சி மணி

'ஆராய்ச்சிமணி' என்ற பழைய திரைப் படத்தை அந்தக் காலத்தில் பலரும் பார்த்திருப்பர். அதில் P.B. ரங்காச்சாரி மனுநீதி சோழனாக நடித்திருப்பார். அவருடைய மகனாக வீணை பாலசந்தர் 'விடங்கன்' என்ற கதாபாத்திரத்தில் தேரில் வரும்போது ஒரு கன்றுக் குட்டியின்மீது தேரை ஏற்றிக் கொன்றுவிடுவார்.

தாய்ப் பசு ஆராய்ச்சிமணியை பிடித்து இழுத்து அரசனிடம் முறையிட்டு நீதி கேட்கும்.

மனுநீதிச் சோழன் தன்னுடைய மகனுக்கு மரண தண்டனை அளிப்பார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதி சோழன் சிலை இருப்பது பலருக்குத் தெரியாது.


அலெக்ஸாண்டர் சொன்ன மனுநீதிச் சோழனின் அடுத்த பாதிக் கதை :

மனுநீதிச் சோழன் தன்னுடைய அரசை வட இலங்கையிலும் விஸ்தரித்தான்.

அப்பொழுது, அங்கிருந்த காசுவன்ஸா என்ற மன்னன் மனுநீதிச் சோழனின் படைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காட்டிற்கு ஓடிவிட்டான். அவனுடைய மனைவி பெயர் விகாரதேவி. அவருடைய மகன் பெயர் தட்டகாமினி. தட்டகாமினி என்றால் யாருக்கும் அடங்காதவன் என்று பொருள். தன் தந்தை பயந்து காட்டிற்குள் ஓடியது அவனுக்குப் பிடிக்கவில்லை. சுமார் 10 வருடங்கள் காட்டிலேயே இருந்து ஒரு படையைத் திரட்டினான். பல வருடங்கள் கழித்து மனுநீதிச் சோழன் (இன்னொரு பெயர் எல்லைச் சோழன்) சந்தித்துத் தன்னுடைய அரசை மீட்க வந்திருப்பதாகச் சொன்னான்.

அவன் உடன்பாடு ஒன்றை சோழனிடம் கூறினான். நாம் இருவர் மட்டும் சண்டை போடுவோம். வீரர்களை ஈடுபடுத்தி அனாவசிய உயிர் இழப்பு நிகழவேண்டாம் என்று சொன்னான்.

அதற்கு அரசன் உடன்பட்டான். மனுநீதிச் சோழன் வயது 60. காமினி வயதோ 30. இந்தச் சண்டையில் எல்லை சோழன் இறந்துவிட்டான். தட்ட காமினி அரசைக் கைப்பற்றியபின் போட்ட முதல் ஆணை மனுநீதி சோழனுக்கு ஒரு அருமையான கல்லறையை கட்டி, அதைத் தாண்டிச் செல்வோர் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற உத்தரவு.

அது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் அலெக்‌ஸாண்டர்.
 


விருந்தினருக்கு நினைவுப் பரிசுகள்

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரியின் தாஜ் முகமது அவர்களுக்கு, 30 ஆண்டுகள் வரை தன்னுடைய நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றிவரும் சக்தி நல்லசிவம் மற்றும் சங்கர் மகாதேவன் அவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினருக்கு திரு. தாஜ் முகமது, திரு. தங்கவேலு, திரு. சக்தி நல்லசிவம் நினைவுப் பரிசுகள் வழங்கினர். திரு. சதீஸ் நன்றி உரை முடிக்க கூட்டம் இனிதே நிறைவேறியது.