New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

 

 


 

7

 

 

ப்புசாமி காவி உடை தரித்து சன்னியாசியாக ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். மனைவி சீதேயின் வார்த்தைகள் அவர் காதில் ஆடி மாசத்து அம்மன் பாட்டுக்கள்போல் உச்ச ஸ்தாயியில் காது ஜவ்வைக் கிழிப்பதுபோல் ஒலித்தவாறிருந்தன.

'நீங்க குழந்தைக்குப் பக்கத்திலேயிருக்கிற ஓரொரு நிமிஷமும் அதற்கு அபாயம்தான்.'

'சீதே, அந்த அபாயத்தைத் தடுக்க எனக்குத் தெரிந்த ஒரே உபாயம், இதோ இப்படிச் சாமியாராகப் போவதுதான்...' அவர் சிந்தனை விரிந்தது.

'எதன்மேலும் பாசம் வைக்கக் கூடாது. சித்தார்த் யார்? எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நானென்றான். அட கண்ணா... நீயும் நானுமாய்... பாலூட்டி வளர்த்த கிளி... போனால் போகட்டும் போடி.... எனக்கு இந்த உலகத்தில் இனி எதன்மீதும் ஆசை கிடையாது.'

ரயில் ஜன்னலுக்கு வெளியே "ஸம்சா! ஸம்சா! சூடான ஸம்சா" என்ற குரல் கேட்டது.

அப்புசாமி, தான் ஒரு காவி உடை அணிந்த சாமியாராகி விட்டதை மறந்தவராக, "அப்புடியே ஒரு சம்ஸா வாங்குங்க" என்றார் ரயிலில் ஜன்னலோரத்திலிருந்தவரிடம்.

சன்னியாசி சம்ஸா சாப்பிடலாகாது என்று எந்த 'மெனு' சாஸ்திரத்திலும் கூறப்படாவிட்டாலும், ஜன்னலோரப் பேர்வழி, "என்ட்ர குருவாயூரப்பா! சாமி சம்ஸா சாப்பிடும்?" என்று வியந்தான். சாமியார்களென்றால் லாடம், ஆணி இவற்றைத்தான் சாப்பிடுவாங்களென்பது அவன் அபிப்பிராயம் போலும்!

"அப்பனே! சம்ஸா என்பது சம்ஸாரிகளுக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. அதை நீ கொஞ்சம் மனஸிலாயிட்டு!" என்று அவனுக்குப் பதிலடி கொடுத்தார் அப்புசாமி.

தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி, "தெய்வம் இங்க இருக்கு. மனுசன் எதைச் சாப்பிடறாங்கிறது முக்கியமில்லே. எப்படிச் சாப்பிடாறாங்கிறதுதான் முக்கியம்" என்று தெலுங்குப் பட டப்பிங் மாதிரி எதையோ சொல்ல நினைத்து என்னத்தையோ உளறி வைத்தார்.

அந்த மலையாள அன்பர் சற்று அறிவுஜீவி போலிருக்கிறது. "இந்தக் காலத்து சாமியாருங்க ரொம்ப மோசம், பேப்பரைப் பார்த்தீங்களா? செக்ஸ் சாமியார் பற்றி விவரம் போட்டிருந்ததே..."

"ராம! ராம!" என்று அப்புசாமி காதை மூடிக் கொண்டார். "சில அயோக்கியன்களாலே என் மாதிரி நல்ல சாமியாருக்கும் கெட்ட பேரு" என்று சமாளித்தவர், "டீ ஒண்ணு வாங்கு அப்பேன்" என்று கேட்டுக் கொண்டார்.

டீயையும் சமூசாவையும் வயிற்றில் குடித்தனம் வைத்த பிறகுதான் அவருக்குத் தெம்பு ஏற்பட்டது.

"சுவாமிகளுக்கு எந்த ஊர்?" என்றார் எதிர் ஸீட்டிலிருந்த ஓர் அம்மாள். அவள் பக்கத்தில் நீளமாக வயலின் வாத்தியம் மாதிரி, ஏதோ மூடப்பட்டு இருந்தது.

"ஊர்? எல்லாமே நம்ம ஊர்தான். உங்க புடவை மேலே ஏதோ பூச்சி ஊர்கிறது பாருங்க" என்றார் அப்புசாமி. "அந்தப் பூச்சிக்குச் சொந்த ஊர் உண்டா, பந்த பாசம் உண்டா? அது மாதிரிதான் நானும் ஒரு பூச்சி?" என்று அளந்தார்.

"ஸ்வாமிகளின் திருநாமம் என்னன்னு தெரிந்து கொள்ளலாமா?" அம்மாள் பக்தை போலும்.

அப்புசாமி மௌமாக யோசித்தார். எழுத்தாளர்கள் புனைப் பெயர் வைத்துக்கொள்ள மண்டையை உடைத்துக் கொள்வதுபோல் மூளையைக் கசக்கிக் கொண்டார்.

சன்னியாசி என்றால் பெயரின் இறுதியில் ஆனந்தா என்று வரவேண்டியது ரொம்ப அவசியம் என்பதை மட்டும் அவர் அறிந்திருந்தார்.

'சீதானந்தா! ஊஹூம். சீதையை நினைத்தாலே பயம்தான். 'சீதாப்பய ஆனந்தா'ன்னு வைத்துக் கொண்டால் என்ன? சீசீ!, நல்லாவே இல்லை. பக்தர்களெல்லாம் சீதாப்பழமாகவே எடுத்துக்கிட்டு வந்துடுவானுங்க.

'கொஞ்சம் புரியாத ஆனந்தாவாக இருந்தால்தான் பரவாயில்லை. ஏன், 'புரியாதானந்தா'ன்னு வெச்சுக்கிட்டால் என்ன?'

"இடியாப்பேம்... இடியாப்பேம்..." பிளாட்பாரத்தில் இடியாப்பம் சென்றது.

'இடியாப்பானந்தா? சே! சே! டிபன் வகையறாவெல்லாம் கூடாது. அப்படிப் பார்த்தால் 'போண்டானந்தா' தேவலையே!'

நண்பர்களின் பெயர்கள் வரிசையாக ஞாபகத்துக்கு வந்தன.

'ரசகுண்டானந்தா? பீமராவானந்தா? அரைபிளேடு அருணாசலானந்தா... ரயிலிலே போய்க்கொண்டிருக்கிறார் ரயிலானந்தா...

'அடேய் அப்பு! நீ ஒரு சரியான மடையானந்தா' என்று திட்டியது அவர் மனம். 'நீ ஏன் ஓடிவந்தாய்? குழந்தை சித்தார்த்தைக் கிள்ளிவிட்டு, மனசு விரக்தி அடைந்து ஓடிவந்தாய். அந்த ரூட்டிலே ரோசி.'

'கிள்ளானந்தா... சே சே...'

'குழந்தை பெயரையே வைத்துக்கொண்டாலென்ன?' என்று சட்டென்று தோன்றி முகத்தில் வோல்ட்டேஜ் கூடியது.

எதிர் சீட்டுப் பெண்மணியிடம், "சித்தார்த்தனாந்தா என்று இந்தக் கட்டையானந்தாவைக் கூப்பிடுவார்கள்" என்றவருக்குக் குழந்தையின் ஞாபகம் வந்துவிட்டது.

ஜுரம் எப்படி இருக்கிறதோ? இப்படிக் கோழையானந்தாவாக ஓடி வந்து விட்டேனே! தாத்தா வேணும்னு சித்து இன்னேரம் கத்தோகத்தானந்தாவாக ஆகியிருப்பானே?

ராத்திரி இருட்டில் வந்து என்னமாகக் கழுத்தைக் கட்டிக் கொண்டான்!

பிஞ்சிலே கூடினமே ஏ..ஏ...ஏ....
பிரிய மனம் வல்லையே...

கிழமான ஒரு ரயில் பாடகன் கண்ணிழந்த(?) தன் மனைவி பின்னணியில் பாட, கையைப் பிடித்து எல்லா ஸீட்டுக்கும் கலெக்‌ஷனுக்காக வந்து கொண்டிருந்தான்.

அப்புசாமி நெகிழ்ந்து போனார். பிஞ்சிலே கூடினமே... ஆகா... என்ன கவிதை... என்னா பாட்டு... ஜிப்பாப் பைக்குள் கைவிட்டுச் சில்லறை தேடினார். டிக்கட்டைத் தவிர, இரண்டொரு ரூபாயே இருந்தது.

பிச்சைக்காரிக்கு ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு, ஜிப்பாப் பைக்குள் கையைவிட்டுத் துல்லியமாக ஓர் இன்டர்னல் ஆடிட்டிங் செய்தார்.

எல்லாம் போக, கட்டக் கடோசி பாலன்ஸ் ரெண்டு ரூபாய் அறுபது பைசாதான் உள்ளது என்பதை அறிந்தவருக்கு, மடத்தனமாக அவசரப்பட்டு ஆனந்தாவாக மாறிவிட்டோமே...

அடுத்த வேளைக்கு ஒரு டீ குடித்தால் ரெண்டு ரூபா ஒழிஞ்சது. அப்புறம் இருக்கறது அறுபது பைசா. 'ஸம்திங் சேர்த்துக்காம ஸன்னியாசியாக ஓடிவந்தது ரொம்பப் பிசகு' என்று வருந்தியவரின் மனசில் ஒரு திடீர் நம்பிக்கை. முகம் பிரகாசமாயிற்று!

முன் குறிப்பு :

இந்தத் தொடரில் இடம்பெறும் விலைவாசிகள் இன்றைய மார்க்கெட்டிலுள்ள விலைவாசிகள் அல்ல. நாவல் எழுதின காலத்திலிருந்த விலைவாசி.

அப்புசாமிக்கு ஞாபகம் வந்துது. 'ஆட்டோக்காரன் அதன் காலைத் தொட்டதுக்கே அவனுக்கு அதிருஷ்டம் அடிச்சுதே! எனக்கும் குழந்தை சித்தார்த்தின் அருள் கிடைக்காதா என்ன?'

"சுவாமிகள் கிருபை செய்து சாப்பிட வேண்டும்" என்றாள் எதிர் ஸீட்டுப் பெண்மணி. ஓர் இலையில் ஏழெட்டு இட்லி, பிரமிட் மாதிரி! சில இட்லிகள் மிளகாய்ப் பொடி - எண்ணெய்ச் சேற்றில் புரண்டு விளையாடிவிட்டு வந்திருந்தன.

'ஆகா! தெய்வக் குழந்தைதான் சித்தார்த்! சந்தேகமே இல்லை. அதை நினைத்ததும் தட்டு நிறைய இட்லி!'

"சீதே! குழந்தையை நல்லாப் பார்த்துக்க தாயே! அது தெய்வீகக் குழந்தை!" - அப்புசாமி உணர்ச்சி வசப்பட்டு உரக்கவே கூறிவிட்டார்.

இட்லியை நீட்டிய பெண்மணி அடுத்த கணம், "சாமி! என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க. நீங்கதான் தெய்வம்" என்றவள் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டுக் கையைக் கட்டிக் கொண்டு பயபக்தயுடன் நின்றாள்.

விம்மிவிம்மி வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

அவள் பெயரும் சீதை! அவள் குழந்தைக்குப் போலியோ மாதிரி ஏதோ வந்து, குழந்தையைச் சிகிச்சைக்காகத் கோட்டக்கல் கூட்டிப் போய்க் கொண்டிருந்தாள். அவளருகில் வயலின் வாத்தியம் மாதிரி மூடப்பட்டுக் கிடந்தது அவளது குழந்தைதான்.

'சீதே! குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள். அது தெய்வீகக் குழந்தை' என்று அப்புசாமி முணுமுணுத்ததும், தனக்குத்தான் அவர் கூறுவதாக நினைத்து மெய் சிலிர்த்துவிட்டாள். தன் பெயர் சீதா என்பதும், தன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்பதும் இந்த அற்புத சாமியாருக்கு எப்படித் தெரிந்தது?

"சாமி! உங்க கையாலே குழந்தையை ஆசீர்வாதிக்கணும்" என்று சோற்றுக்கூடைக்காரி கூடையைத் திறப்பதுபோல, குழந்தைமீது மூடியிருந்த துணியை அகற்றிக் காட்டினாள்.

அப்புசாமி எழுந்து அதன் தலையைத் தொட்டார். "ஓம் சித்தார்த்! சித்தார்த்! சித்தார்த்! உன் குழந்தைக்குச் சரியாயிடும். கவலைப்படாதே!" என்றவர். "தாயே! தப்பாக எண்ணாதே!" என்றார்.

"உன் குழந்தையைப் பற்றி ஒரு விஷயம்..." என்று இழுத்தார்.

தாய்க்குலம் பதட்டத்துடன் "சாமி! நீங்க என்ன சொல்றீங்க?" என்றது.

"உன் குழந்தைக்கு ஒரு தோஷம் இருக்கிறது. அதை எடுத்துடணும். நான் அதைச் செய்துடறேன். ஒரு மண்டலம் அதாவது பதினெட்டு நாள்..."

"சாமிக்கு மண்டலத்துக்கு எத்தினி தெவசம் புரிஞ்சிட்டில்லா? நாற்பத்தெட்டுத் தெவசமாக்கும்" என்றான் ஜன்னலோர அறிவாளி.

அப்புசாமி, "டேய்! நானும் அதுதாண்டா பரைஞ்சது... உன் காதிலே பதினெட்டுன்னு விழுந்திருக்குது. உன் வேலையை நீ பாரு... உனக்கு மூளை இருந்தால், அறிவு இருந்தால் வெச்சுக்கோ" என்றார் கோபமாக. சாமியார்கள் பிழைப்பிலே மண்ணைப் போடறதில் சில பேருக்கு அலாதி மகிழ்ச்சி. ஏன்? அவருக்குப் புரியவில்லை. "சாமிக்குக் கோபம் வாணாம். ஞிங்கள் பிஸினஸ்லே ஞான் தலையிடலே" - ஜன்னலோரக்காரன் ஜகா வாங்கிவிட்டான்.

அப்புசாமி மனசுக்குள் சீக்கிரமாக ஒரு கணக்குப் போட்டார். ஒரு நாளைக்கு எப்படியும் ஒரு ஐம்பது அறுபது ரூபாயாவது இருந்தால்தான் காலம் தள்ள முடியம். காலையில் காப்பி, டீ நாஷ்டாவுக்குக் குறைஞ்சது பத்து ரூபா. மத்தியான சாப்பாடு ஒரு பன்னெண்டு ரூபா. சாயந்தர நாஷ்டா ஒரு எட்டு ரூபா. ராச்சாப்பாடு ஒரு பதினைந்து. அப்புறம் மூக்குப்பொடி, ஓமப்பொடி, பக்கோடா கிக்கோடா, கிரஷ். அது இது பத்து ரூபா...

"சாமி! எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. உங்க கையாலே ஒரு பூஜை பண்ணிடுங்க" என்றது. தாய்க்குலம், ஹாண்ட் பேக்கின் ஜிப்பைத் திறந்தபடி. அப்புசாமி கண்ணை மூடித் தியானிப்பவர் போலிருந்தாலும், தாய்க்குலம் தனக்கு ஏதோ பணம் தரப் பர்ஸைத் திறக்கிறாள் என்பதை முற்றும் உணர்ந்த முனிவராகவே இருந்தார். "சாமி! வேணாம்னு சொல்லாமல் இந்தக் காணிக்கையை ஏற்றுக் கொள்ளணும்."

இரண்டு நூறு ரூபாய் நோட்டை பயபக்தியுடன் அப்புசாமியிடம், ஒரு தட்டைத் தன் பெட்டியிலிருந்து தேடி எடுத்து, அதில் வைத்து மரியாதையுடன் நீட்டியது தாய்க்குலம்.

அப்புசாமி நுனி விரலால் அதை அங்கீகரித்து ஜிப்பாப் பையில் போட்டுக் கொண்டார்.

"ஓம் சித்தார்த்! ஓம் சித்தார்த்! ஓம் சித்தார்த்!" என்று கூறி தாய்க்குலத்தின் பையனை மூன்று தரம் தடவி விட்டார்.

குருவாயூர் க்ஷேத்திரம்.

முதல் காரியமாக அம்பலத்துக்குப் போய் குட்டி கிருஷ்ணனிடம் குழந்தை சித்தார்த்துக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்.

கோவிலில் நீண்ட க்யூ விடியற் காலை தரிசனத்துக்காகக் காத்திருந்தது.

அப்புசாமி கோவிலுக்கு வெளியே இருந்த ஒரு மரத்தடியில் மேடைமீது உட்கார்ந்தார்.

ரயிலில் வந்த அசதி, உட்கார்ந்த நிலையிலேயே சற்றுத் தூங்கி விட்டார்.

கொஞ்ச நேரம் கழித்துக் கண் விழித்தபோது -

சுமார் பதினைந்து இருபது பேர் மேடையின் கீழே பயபக்தியுடன் உட்கார்ந்திருந்தனர்.

குளித்து முடித்து சந்தனமும், குங்குமமும், விபூதியுமாய் எல்லாரும் படு சுத்தம். அப்புசாமிக்குப் புரியவில்லை. சில கம்பெனிகளின் ஈக்வடி ஷேர்கள் அறிவிப்பு வந்த மாறுநாளே விற்றுத் தீர்ந்து விடுவது போல, அவர் சன்னியாசியாகி இருபத்து நாலு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவருக்கு இத்தனை சிஷ்ய கோடிகளா? 'இவ்வளவு வேகமான மார்க்கெட் இருந்தால் யார்தான் சாமியாராகாமலிருப்பார்கள்?' யோசித்தவாறே மோவாயைத் தடவியவாறு, அமர்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்தார்.

"ஸ்வாமிகள் ஏதாவது ஆசீர்வதித்துச் சொல்லணும்" என்று வயசான ஒருத்தர் எழுந்து கையைக் கட்டியவாறு கேட்டுக்கொண்டார். "உங்களைத் தரிசித்தது எங்கள் மண்டலியின் பாக்கியமாகும்."

கோவிலுக்கு வந்த ஏதோ ஒரு பக்தி மண்டலி அப்புசாமியின் உட்கார்ந்து தூங்கும் போஸை மரத்தடியில் பார்த்ததும், அவர் ஆழ்ந்து தியானம் செய்து கொண்டிருக்கும் சன்னியாசியாக்கும், அவர் விழித்தும் அவர் வாயால் சில அறிவுரை கேட்டுப் போக வேண்டும் என்று மரத்தடியில் அமர்ந்துவிட்டது.

'அடே அப்புசாமி! உன் கையிருப்பு இருநூறு ரூபாய்தான். நாலு நாள் மட்டுமே தள்ள முடியும் என்று நினைத்தார். எதிரே வந்திருக்கும் கிராக்கியைப் பாரடா, பார்...' என்று குதூகலித்தது அவர் மனம்.

அப்புசாமி என்ன மாதிரியான ஆன்மீகப் பேச்சைப் பேசுவது என்று யோசித்தார். டி.வி.யில் நடுநடுவே ஸ்லைடு போட்டுச் சில பொன்மொழிகள் காட்டுவார்கள். அதில் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. 'வீட்டுக்கு ஒரு மரம் நடுவீர்!' இது பயனுள்ள பேச்சுதான். ஆனால் ஒரு சாமியார் பேசுகிற பேச்சா? 'தண்ணீரை வீணாக்காதீர்.' ஊஹூம். இதெல்லாம் டி.வி. சாமியார் மொழி. 'அசல் சாமியார் எப்படிப் பேசுவார்? எப்படிக் கொட்டாவி விடுவார்? ஒரு இழவும் தெரியாமல் சாமியாராகி விட்டோமே' என்று தடாலென்று அமைச்சரானவர் மாதிரி குழம்பினார்.

ஒரு சிறுவன் விரைந்து வந்து அவரிடம் துண்டுச் சீட்டு ஒன்றைத் தந்தான்.

இன்னும் ஒரு வரி பேசவில்லை. அதற்குள் நேயர் விருப்பமா? நீங்கள் கேட்டவையா? சீட்டைப் பிரித்துப் பார்த்தார்.

'டேய் சாமியார்!

வாயைத் திறக்காதே! மௌனமாய் இரு. எல்லா விஷயத்தையும் நான் வந்து கவனித்துக் கொள்கிறேன். ஆளுக்குப் பாதி. இல்லாட்டி உனக்கு 69, எனக்கு 31.

இப்படிக்கு ஜன்னலோரம்'

 தொடரும்