New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us

 

1001 அப்புசாமி இரவுகள்

 அத்தியாயம் - 5

 

 

ஸிம்ஸிம்மின் விருந்து!

 

ன்று நடுப்பகல் பன்னிரண்டு மணி வெய்யிலில் அல்ஜுமாய்ன் அரண்மனையின் புறச் சுவர்களுக்கு வெளியே ஏராளமான நகரவாசிகள் ஒரே குதூகலமாகச் சகலவிதமான கோஷங்களைப் போட்டுக் கொண்டிருந்தனர்.

மதில் புறக் கதவு பெருஞ் சத்தத்துடன் திறந்தது. மழுங்கச் சிரைக்கப்பட்டு, கழுதையின் மேல், முகம் வால் புறம் பார்த்து இருக்கும்படி திருப்பி உட்கார்த்தி வைத்துக் கட்டப்பட்ட ஒரு மனித உருவம் காணப்பட்டது.

"அடியே பாவி, சீதே, சதிகாரி! நீ உருப்படுவியா? கட்டின புருஷனைக் கழுதை மேலே ஏற்றி இந்தப் படை படைக்கிற வெய்யிலில் துரத்திட்டியே" என்று அப்புசாமி புலம்பினார்.

அதே சமயம் அவர் மனச்சாட்சியும் ஓலமிட்டது. 'அடே அப்புசாமி! சீதே ஏற்பாடு பண்ணின கழுதை இல்லையடா. இது, அந்த விதி - நீ செய்தாயே சதி - அது ஏற்பாடு பண்ணியிருக்கிற கழுதை. ரயில் பிளாட் பாரத்திலே தபால் பையை இழுத்துப் போகிற மாதிரி உன்னை ஆட்கள் தரதரவென்று இழுத்துப் போய்க் கழுதை மேலே உட்கார வைத்தபோது உன் சீதே தவித்த தவிப்பு அவள் முகத்தில் தெரிந்ததே, நீ பார்க்கவில்லையா?'

அப்புசாமி இப்படிப் புலம்பிக் கொண்டிருந்த அதே சமயம் கழுதையின் உடம்பில் ஒரு குறும்புக்காரன் நறுக்கென்று ஒரு நெருப்புக் குச்சியால் சுட்டான். அடுத்த வினாடி கழுதை பறந்தது. பள்ளத்திலும் மேட்டிலும் விழுந்து புரண்டு எழுந்து பாய்ந்து..... அப்புசாமி குலுங்கிக் குலுங்கிக் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டார்.

வெகுதூரம் ஓடின கழுதை அவரை ஒரு மலையடி வாரத்தில் உருட்டிவிட்டு எங்கோ ஓடிவிட்டது.

உடம்பு பூராவும் குத்துவலி, ஈச்ச முள்! கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மாவு தீர்ந்ததும் மாவு மிஷின் போடுகிற சத்தம் மாதிரி வயிற்றில் ஒரே கிரீச் கிரீச் இரைச்சல், பசி. 'அடியே சீதேக் கிழவி! நீ அரண்மனையில் இப்போது 'ஒழிந்தான் வீட்டுக்காரன்,' என்று தின்றுகொண்டிருப்பாயடி, நான் பட்டினி. உன் பெயர் பத்தினி!

'ஆகா, இப்போது பீமாராவ் இருந்தானானால் 'தாத்தா, கவலையெ பிடு! இ ஹுடுவன் இத்தனே' என்று என்னை அலட்சியமாக உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு ஓடிவிட மாட்டானா?

'பீமாராவையும் ரசகுண்டுவையும் எப்படியாவது இங்கே வரவழைத்து விட வேண்டும். ரசகுண்டு இருந்தால் எல்லா முள்களையும் எவ்வளவு நன்றாகப் பிடுங்குவான்' என்று அவர் மனம் துடித்தது.

பம்பாயில் சுலைமான் கிடைச்ச மாதிரி இங்கே ஒரு கலைமான் கிடைக்க மாட்டானா பீமாவையும் ரசத்தையும் வரவழைத்துத் தர?

அப்புசாமிக்கு அத்தனை துன்பத்திலும் சிரிப்பு வந்தது. உன் பிழைப்பே லாட்டிரி. உனக்கு இன்னும் சிற்றாளும் சினேகிதமுமா? முதலிலே இந்தக் காட்டிலிருந்து நகருவதற்கு வழியைப் பார்.

தாகம் தொண்டையைக் கடூரமாக வாட்டியது. தெரியாத்தனமாக நாலு ஈச்சங் காய்களைப் பறித்து சூயிங்கம் மாதிரி மென்று தொலைத்ததால் தொண்டையை மேலும் வரட்டு வரட்டென்று வரட்டியது.

தண்ணீர்?

அப்புசாமி சுற்றுமுற்றும் பாரத்தார். வெகு தொலைவில் ஓர் ஒட்டகத் தாய் தன் ஒட்டகக் கன்றுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த காட்சி தென்பட்டது. 'ஆ! என்ன பாசம் என்ன அன்பு! இந்த ஒட்டகத்துக்குக் குட்டியாகப் பிறந்திருந்தால் தாகத்துக்குப் பாலாவது கிடைத்திருக்குமே'.

தாகமும் பசியும் சோர்வும் மேலிட்டவராக அவர் பார்வை அங்குமிங்கும் சுழன்றது. தொலைவில் படுதா கட்டிய சிறிய வீடு ஒன்று இருப்பது தெரிந்தது. அறுபத்து மூவர் தண்ணீர் பந்தல் மாதிரி அவரது தாகக் கண்களுக்கு அது தெரிந்தது. அந்த இடத்தை நோக்கி மெதுவே சென்றார்.

படுதாவைத் தள்ளிவிட்டுக்கொண்டு உள்ளே ஜாக்கிரதையாக நடந்தார். உள்ளே இருந்த அமைப்பு அவரைத் திகைக்க வைத்தது. வெளியே பாறைக்கு நடுவே சிறிதொரு குடிசை மாதிரி இருந்த அந்த இடம் உட்புறம் பிரமாதமான கட்டிடமாக இருந்தது. பல மின்சார விளக்குகள் ஆங்காங்கு எரிந்தன. பெரிய பெரிய இரும்பு அலமாரிகள், தரையில் ஏராளமான துப்பாக்கிகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போர்வை போர்த்த நிலையில் நிறைய யந்திரத் துப்பாக்கிகள். சில பீரங்கிகள். பட்டைப் பட்டையாக ரவைகளும் குண்டுகளும் ஒருபுறம் குவிந்து கிடந்தன.

ஏதாவது விளையாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருக்கிற ஹோல்ஸேல் கிடங்கோ? தற்செயலாக அவர் கால் ஒரு துப்பாக்கியின் விசையில் பட டுமீல் என்று அது சீறியது.

"அய்யம்மாடி!" என்று அப்புசாமி அடுத்த கணம் துடித்துப் போய் விட்டார்.

ஏதோ ஆயுதக் கிடங்கு போலிருக்கிறது. நாசமாய்ப் போக! தின்கிறதுக்கு ஓர் இழவையும் காணோமே! குடிக்கத் தண்ணிகூட இல்லையே!

அதே சமயம் அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தின் மூலையிலிருந்த ஒரு சின்னக் கதவு - எங்கிருந்தோ வீசிய காற்றால் ஓசைப்படாமல் லேசாகத் திறந்து கொண்டது.

அப்புசாமி மெல்ல அடிமேலடி வைத்துத் திறந்திருந்த சின்னக் கதவருகே சென்று எட்டிப் பார்த்தார்.

அறைக்குள் தொண்டுக் கிழவரான ஒருத்தர் அமைதியாக முகச்சவரம் செய்தவாறு அமர்ந்திருந்தார்.

சூனியக்காரனாட்டம் இருக்கிறானே கிழவன்! அவன் புருவமும் நீண்ட தாடியும் குழிந்த கண்ணும் அப்புசாமிக்கு நடுக்கத்தைத் தந்தன.

நைஸாக ஓசைப்படாமல் நழுவப் பார்த்தார். "அன்பரே! என்ன அவசரம்? ஏன் எட்டிப் பார்த்துவிட்டு ஓசைப்படாமல் நழுவுகிறீர்?" என்ற குரல் கொக்கி போட்டு இழுத்தது.

"ஹி ஹி!" என்று அப்புசாமி தன் மொட்டை தலையையும் பசித்த வயிறையும் தடவிக்கொண்டு நின்றார்.

"மகனே," என்றார் தாடிக் கிழவர். "இப்படி அருகில் வாரும். ஏன் உமது மெலிந்த கால்களும் கைகளும் நடுங்குகின்றன? என்னைக் கண்டு பயப்படாதீர். நான் சவரம் செய்துகொள்வதை அமைதியாக இருந்து கவனியும். வெள்ளிக்கிழமையன்று சவரம் செய்து கொள்கிறவர்களுக்கு எழுபது வகையான பிணிகள் அவர்களை விட்டு நீங்குகின்றன என்று பெரியவர் இபின் அப்பாஸ் கூறியிருக்கிறதை நீர் அறியமாட்டீரா?" என்று கேட்டார்.

"அறிய மாட்டேன்" என்று அப்புசாமி பயந்து நடுங்கியவாறு கூறினார்.

தாடிக் கிழவர் நிதானமாகச் சவரம் செய்து முடித்துத் கொண்டு கத்தியை அதன் இடத்தில் வைத்துவிட்டு, "அன்பரே, எந்தப் பொருளையும் எடுத்த இடத்தில குறிப்பாக வைக்க வேண்டும். இதைப் பற்றி நீர் என்ன கருதுகிறீர்?" என்று வினவினார்.

'எவண்டாவன் கிழவன்? பெரிய கழுத்தறுப்பாக இருப்பான் போலிருக்கிறதே?' என்று எண்ணிய அப்புசாமி, "ஐயா, பெரியவரே, தாங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. என்மீது ரொம்பப் பிரியமாக இருக்கிறீர்கள்" என்றார்.

தாடிக் கிழவர் ஒரு துணியால் சவரக் கிண்ணத்தை ஏழுதரம் துடைத்துவிட்டு, "அன்பரே! எந்த ஒரு பொருளையும் ஏழுதரம் சுத்தம் செய்ய வேண்டும். இருக்கட்டும். நீர் மிகுந்த பசிக் களைப்புடன் காணப்படுகிறீர். விருந்தோம்பலுக்குப் பெயர்போன பார்மாகி வமிசத்தைச் சேர்ந்த என் எதிரே ஒருத்தர் பசியால் கண்கள் கறுத்து இருப்பதை நான் பொறுக்க மாட்டேன்.

அப்புசாமிக்கு தன் நன்றியை எப்படி அவருக்குத் தெரிவிப்பது என்று தெரியவில்லை. "நிஜமாகவே, எனக்குப் பசிக்கிறது. நீங்கள் கண் கண்ட தெய்வம்," என்று கை கூப்பி வணங்கினார்.

"அன்பரே, பசியில் இளம் பசி, நடுப் பசி, முற்றிய பசி, வற்றிய பசி என்று நான்கு வகைகள் இருக்கின்றன. உமக்கு எந்தவிதமான பசியோ? அதைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லும்" என்றார் கிழவர்.

வயிற்றைப் பிடித்துக்கொண்ட அப்புசாமி, "நான் முற்றிய பசியிலிருக்கிறேன். சாப்பிட்டு மணிக்கணக்காகிறது. தண்ணீர் குடித்தும் மணிக்கணக்காகிறது," என்றார்.

ப்புசாமியிடம் கிழவர் ஸிம்ஸிம்மின் பேச்சு தொடர்ந்தது. "நல்லது அன்பரே! பசியானது எவ்வளவு கொடுமையானது பார்த்தீரா? அது ஒரு நல்ல நண்பரை அறிமுகம் செய்து கொள்ளக் கூட மறக்கச் செய்து விடுகிறது. என்னை யார் எவர் என்று நீர் கேட்கவில்லையே. நீர் அதைக் கேட்ட பிறகு நாம் புசிக்கத் தொடங்குவோம். விருந்தோம்பலுக்குப் பெயர்போன பார்மாகி வம்சத்தைச் சேர்ந்த நான் பசிக் களைப்பால் ஒருத்தர் இருப்பதைச் சகிக்கமாட்டேன்.." என்று கூறித் தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினார்.

அப்புசாமியின் தலைக்குள் கிறுகிறுவென்று விசிறி சுழன்று கொண்டிருந்தது. மயக்கம் மேலிடச் சட்டென்று அருகிலிருந்து கம்பத்தைப் பற்றிக் கொண்டார்.

அப்புசாமியைப் பார்த்துத் தாடிப் பெரியவர் சிரித்து "நீர் மிகவும் இளைஞனாக இருக்கிறீர். வயதானவனான என்னைப் பாருங்கள். எவ்வளவு உறுதியாக இருக்கிறேன். நீர் ஏன் இவ்வளவு விரைவில் களைப்படைகிறீர் என்று எனக்குப் புரியவில்லை. இருக்கட்டும் நான் யார் என்பதைச் சீக்கிரம் உமக்குச் சொல்லிவிடுகிறேன். நான் மிகவும் படித்த ஓர் அதிமேதாவி. எனக்குத் தெரியாத மொழிகளே அனேகமாக இந்த உலகத்தில் இல்லை. எனக்கு வைத்தியம் தெரியும்; வான சாத்திரம் தெரியும். பொருளாதாரம் ரசாயனக் கலை, கணிதம், பின்ன கணிதம், கைரேகை, நாடி சாத்திரம், மோடி சாத்திரம், சிற்பம், சித்திரம், சமையல் கலை, நாடோடிப் பாடல், பறவைகளின் மொழி இறந்தவர்கள் மொழி, மாந்திரீகம், மந்திர ஜமுக்காளம் பின்னுதல், அதிலேயே ஆர்டினரி ஜமுக்காளம் நெய்தல்... இன்னும் எனக்குத் தெரியாத சாத்திரமே இல்லை."

அப்புசாமிக்கு வயிறைப் பசி கிள்ளியது. ஆசாமி கொஞ்ச நேரத்தில் சோறு போடப் போகிறான் என்று சமாதானம் செய்து கொண்டு, "உங்கள் மாதிரி இப்படிப்பட்ட அதிசய மனிதரை நான் பார்த்ததில்லை. தங்களை விடச் சாதாரணமானவர்களெல்லாம் ஓட்டல்களில் ரூம் எடுத்துக்கொண்டு அமர்க்களப்படுத்துகிறார்கள் தமிழ் நாட்டில்! தாங்கள் வந்ததே இல்லையே?" என்று சற்றே ஐஸ் வைத்தார்.

"அன்பரே, நான் இந்த இடத்தைவிட்டு ஓர் அங்குலம்கூட வெளியேற மாட்டேன். என் பெயர் ஸிம்ஸிம். என்னுடைய வயது இருநூறைத் தாண்டி விட்டது. என்னுடைய இளமைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உமக்குக் கூறுகிறேன் கேளும். விருந்தோம்பலுக்குப் பெயர் போன பார்மாகி வமிசத்தைச் சேர்ந்தவன் என்று என்னைப் பற்றிச் சொன்னேனல்லவா!"

அப்புசாமி "ஹாவ்!" என்று பசிக் கொட்டாவி விட்டார். கிழவனின் தாடியைப் பார்க்கும்போது அவருக்கு லாலா கடை ஸோன்பப்டி ஞாபகம் வந்தது.

கிழவர் கனிவுடன், "வாலிப வயோதிக இளைஞரே, ஏன் நீர் அதற்குள் களைத்துவிட்டீர்? நாற்காலியில் உட்கார்ந்திருப்பது கடினமாக இருந்தால், சிறிது எழுந்து நடவுங்கள். தூக்கம் கலையும்" என்றார்.

அப்புசாமியின் கண்கள் அறையை வட்டமிட்டன. உண்ணத்தக்க ஏதாவது தென்படுகிறதா என்று, தூரத்தில் நீளநீளமாக வாழைப் பழம்போல ஒரு தட்டில் நிறைய ஏதோ அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

'பசி வெட்கமறியாது' என்பதைப்போல, "பெரியவரே, நான் அந்த வாழைப்பழங்களை எடுத்துச் சாப்பிடலாமா?" என்று கேட்டார்.

ஸிம்ஸிம் கடகடவென்று சிரித்தார். "இளைஞரே, உருண்டையாயிருப்பதெல்லாம் கொட்டையாகிவிடாது. நீளமாய் இருப்பதெல்லாம் வாழைப் பழமாகி விடாது. சிவப்பாய் இருப்பதெல்லாம் மாமிசமாகிவிட முடியாது. வெண்மையாக இருப்பதெல்லாம் கொழுப்பாகிவிட முடியாது. அவைகள் பழங்களல்ல; வெடிகுண்டுகள். பசி மிகுந்த நேரத்திலும் ஒருவன் புலனடக்கம் தவறாதிருக்க வேண்டும். கண்கள் ஏமாற்றும் இயல்புடையன. ஆகையால்தான் ஆண்டவன் அதை நொடிக்கொரு தரம் உலகிலிருந்து மறைக்க மூடி மூடி வைக்கிறான். அப்படியும் அது திறந்து திறந்து பார்க்கிறது."

அப்புசாமி பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டார். "சீதேக் கிழவியைச் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது!"

கிழவருக்குப் பாம்புச் செவி. "அன்பரே, யார் சீதேக் கிழவி? ஏன் அவளைச் சேர்த்துக்கொள்ளலாம்? அந்த விவரத்தைக் கூறும். கேட்க ஆவலுள்ளவனாக இருக்கிறேன்," என்றார.

"அதைப் பற்றி இப்போ என்னங்க? தமிழ்நாட்டிலே எத்தனையோ கெயவிங்க. அதிலே அவள் ஒரு கெயவி." என்று அலுப்புடன் அப்புசாமி கூறியவர், "குடிக்கக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்குமா?" என்றார். பசி கொன்றது.

"அன்பரே, விருந்தோம்பலுக்கு இந்தப் பெரிய அரேபியாவில் நூற்றாண்டு நூற்றாண்டாகப் பெயர் பெற்ற பார்மாகி வமிசத்தைச் சேர்ந்தவனின் எதிரில் நின்று தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டுவிட்டீர். கேட்கத் தகாததைக் கேட்டுவிட்ட உம்மை இறைவன் மன்னிப்பாராக. என் வரலாறு முழுவதையும் நீர் இன்னும் கேட்கவில்லையே?"

"வில்லை."

"இளைஞர்களுக்குக் கோபம் கூடாது என்று அறிஞர் ஒருத்தர் கூறவில்லையா?"

"வில்லை."

"சரி, அன்பரே, நீர் களைத்து இருக்கிறீர் போலும். திருக்குறளில் 'எண் பொருளவாகச் செலச்சொல்லித் தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பதறிவு' என்று சொல்லியிருக்கிறதல்லவா?"

"இருக்கலாம்." "இளைஞரே, வள்ளுவத்தை நீர் முற்றும் ஓதியதில்லை என்று சந்தேகிக்கிறேன்."

"கியும்."

"அன்பரே, உமது கேட்கும் புலன் தடதடவென்று மங்கி வருகிறது. மேலும் தோல் சுருங்கி வருவதைப் பார்த்தால் கொஞ்ச நேரத்தில் முற்றிலும் உலர்ந்து 'டிஹைட்ரேட்' ஆகி விடுவீரோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. உடனடியாக ஸலைனும் ஏற்ற முடியாது' அதற்கான கருவிகள் இங்கு இல்லை. ஆகவே சீக்கிரம் விருந்து உண்ண வாரும்" என்றார்.

அப்புசாமியின் காதில் தேன் துளிகளாக அந்த வார்த்தைகள் விழுந்தன.

ரத்தினங்களும் முத்துக்களும் பதித்த ஜமுக்காளம் விரிக்கப்பட்டு அதன்மேல் குட்டையான மேஜைகள் இரண்டு போடப்பட்டிருந்தன.

"உட்காரும் இளைஞரே," என்று கிழவர் உபசரித்தார்.

அப்புசாமிக்கு மேஜையைப் பார்த்தவுடனேயே நாக்கில் நீர் சொட்டத் தொடங்கிவிட்டது.

"அன்பரே, இந்த வெள்ளித் தட்டில், இந்த ஜாடியிலுள்ள தண்ணீரைச் சாய்த்து முதலில் கைகளைக் கழுவிக் கொள்ளும். இதோ நான் கழுவுகிற மாதிரி," என்ற பெரியவர் கை கழுவத் தொடங்கினார். அப்புசாமி ஆச்சரியத்தால் வாயைப் பிளந்தார்.

வெள்ளித் தட்டும் இல்லை. ஜாடியும் இல்லை. தண்ணீரும் இல்லை. எல்லாம் இருப்பதுபோலப் பாவனை செய்துகொண்டு பெரியவர் கை கழுவினார். பிறகு அருகிலிருந்த வெற்று ஸ்டாண்டில் கை துடைக்கும் துண்டு இருப்பதுபோல் பாவனை செய்துகொண்டு கையை அதில் துடைக்கும் பாவனை செய்தார்.

அப்புசாமி ஆச்சரியத்துடன், "தண்ணீர்?" என்றார்.

பெரியவர் சிரிப்புடன், "என்னைப் போல் கை கழுவச் சொன்னேன். கழுவிக் கொள்ளும்," என்றார்.

அப்புசாமியும், 'ஆசாமி சோறு போடப் போகிறவன், அவன் சொல்கிறபடி கேட்டுத்தானே ஆகவேண்டும். கேடுகெட்ட சீதேக் கிழவி சொன்னபடியெல்லாம் நான் ஆடினதற்கு இவன் சொல்கிறபடி செய்தால் என்ன?' என்று எண்ணியவாறு கை கழுவுவதுபோல பாவனை செய்து கொண்டார்.

"அன்பரே," என்றார் பெரியவர். "கமகமவென்று விருந்தின் மணம் நமது நாசியை எப்படி எட்டுகிறது பார்த்தீரா? நன்றாக வாசனையை இழுத்து அனுபவியும், மணம்மிகுந்த உணவுதான் ஜீரணத்தை விரைவுபடுத்தும்."

அப்புசாமியின் மூக்குக்கு எந்தவித வாசனையும் தெரியவில்லை.

தாடிப் பெரியவர், "அன்பரே, உணவுகள் பறிமாறப்பட்டு நெடு நேரமாகியும் ஏன் சும்மா இருக்கிறீர், அள்ளிப் புசியும்," என்று சொல்லிவிட்டு, தான் சாப்பிடுவது போலப் பாவனை செய்யத் தொடங்கினார்.

தூக்கிவாரிப் போட்டது அப்புசாமிக்கு.

கிழவர், "அட அட! அன்பரே, பிஸ்தாப் பருப்பு திணித்த இந்த வெஜிடபிள் போண்டா எவ்வளவு ருசியாயிருக்கிறது பார்த்தீரா?" என்றார்.

அப்புசாமியின் விழிகள் ஆவலுடன் தேடின. வெறும் மேஜைக்கு முன்னால்தான் இருவரும் உட்கார்ந்திருந்தனர். பசி முற்றிய அப்புசாமிக்கு அந்தக் கிழவரைக் கொன்றுவிட வேண்டும்போல் ஆத்திரம் வந்தது.

- தொடரும்