New Version Uploaded on 1st May 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

'ஆஃப்டர் தி பிரேக்' காணாத பிரேக்கிங் நியூஸ்கள்!

 

அகிலா கார்த்திகேயன்

 

தானுண்டு தாங்கள் மெய்மறந்து பார்க்கும் மெகா சீரியல்களுண்டு என்று கிடந்த கிழங்கள் இப்போதெல்லாம் நியூஸ் சேனல் பக்கம் தங்கள் ஈஸீ சேரை இழுத்து போட்டுக் கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டன.

'கமலாவின் திருமாங்கல்யம்', 'சுபமங்களாவின் கல்யாண வைபவம்' என்ற மங்களமான டைட்டிலோடு எபிஸோடு முழுவதும் அக்மார்க் அமங்களமாகவே காட்டப்படும் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த அவலம் இப்போதெல்லாம இந்த 'பிரேக்கிங் நியூஸ்' சப்ளையால் கொஞ்சம் குறைந்துவிட்டதில் சந்தோஷமே.

முன்பெல்லாம் 'பரபரப்பான செய்திகளை தாங்கி வருகிறது' என்று விளம்பரப்படுத்தப்படும் தினசரிகளுக்குக்கூட எப்போதோ ஆடிக்கொருதரம், அமாவாசைக்கு ஒருதரம் என்றுதான் இப்படிப்பட்ட செய்திகள் கிடைக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சம், விவசாயிகளுக்கு வாழ்வில் பஞ்சம் என்று ஒருபுறம் நாம் கலங்கி வருத்தப்பட்டாலும் இன்னொரு புறம் அந்த வருத்தத்தை தணிக்க நாள் முழுவதும் பஞ்சமே இல்லாமல் நமக்கு இந்த பிரேக்கிங் நியூஸ் என்பது அருமருந்தாகி உற்சாக மூட்டுவது சுகமே!

வருட பிறப்பன்று பஞ்சாஞ்சம் படிப்பதுண்டு. சிலர் கோயிலுக்கு போய் மெனக்கெட்டு அங்கே ஒரு விற்பன்னர் மைக் போட்டு பஞ்சாங்கம் வாசிப்பதை கேட்டுவிட்டு வருவார்கள். ஆனால் எனக்கோ இதிலெல்லாம் கொஞ்சம் பயம். பஞ்சாங்க பலன் என்று அந்த உபன்யாசகர் 'இந்த வருடம் வெள்ளம் வந்து ஊரே பாழாகிவிடும்', 'தனுர் ராசிகாரர்கள் அதிஜாக்கிரதையாக இருந்தாக வேண்டும்' என்பது போல ஏதாவது பீதியை கிளப்பி வருடம் முழுவதும் நான் பேஜாராகி போய்விடுவேனோ என்ற பயத்தில் அந்த 'பஞ்சாங்க படனம்' பக்கம் போகும்போது காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு நகர்ந்து விடுவேன்.

இந்த வருடமும் அப்படியே காதும், பஞ்சுமாக பஞ்சாங்கம் படிக்கும் இடத்தை கடந்தபோது, எல்லோரும் இடி இடி என்று சிரிப்பதை பார்க்க முடிந்தது. என் மனைவி என் காதிலிருந்த பஞ்சை எடுத்து வீசி எறிந்தவளாய் "அவர் தமாஷா சொல்றார் கேளுங்க" என்றாள்.

"துர்முகி வருடம்போல் ஹேவிளம்பி வருடத்திலும் பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமிருக்காது" என்று அவர் ஏதோ சில கிரங்களின் எசகுபிசகான அமைப்பை விவரித்து சொல்லிக் கொண்டிருந்தார்.

உபன்யாசம் முடித்து அவர் கோயிலை விட்டு வெளியே வந்தபோது நான் அவரிடம் "இது கொஞ்சம் ஓவரா இல்லே" என்றேன்.

"என்ன அண்ணா பண்றது? ஏதாவது இப்படி சுவாரஸ்யமா சொன்னாதானே பஞ்சாங்க படனத்தை நாலுபேர் கேட்க வருவா... ஜனங்களுக்கு வருஷம் பூரா எதுலே இன்ட்ரெஸ்ட்ன்னு தெரிஞ்சுண்டு அதை 'ஹை லைட்' பண்ணி சொல்ல வேண்டிருக்கு... நான் உபன்யாசம் செஞ்சுண்டிருக்கும் போதே என் ஃபேஸ்புக்கிலே ஒரு பிரேக்கிங் நியூஸ்... வா.வா.மா.க. தலைவரை தூக்கிட்டாளாமே அவர் ஒரு புது கட்சி ஆரம்பிச்சுட்டாராமே" என்று என் முகத்தைப் பார்த்து பேசாமல் தன் ஸ்மார்ட் ஃபோனில் ஃபேஸ்புக்கைப்  பார்த்தபடி பேசிக் கொண்டே நகர்ந்து சென்றார்.

நான் வீட்டிற்கு செல்பவன், பின்னால் வந்து கொண்டிருந்த மனைவியைக் காணாமல் தேடினேன். பத்தடி பின்னால் நின்றுக் கொண்டு அவளும் தன் ஸ்மார்ட் போனில் எதையோ தடவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன இது நடுத் தெருவிலே நின்னுண்டு பார்த்துண்டுருக்கே" என்று லேசாக அதட்டினேன்.

"அட கொஞ்சம் பேசாம இருங்க.... வா. வா.மா.க. தலைவரை....." என்று ஆரம்பித்தாள்.

"அவரை தூக்கிட்டாங்க... அவர் ஒரு புது கட்சி ஆரம்பிச்சுட்டார் அதுதானே பிரேக்கிங் நீயூஸ்.... எனக்கு இப்பத்தான் சாஸ்திரிகள் சொன்னார்" என்றேன்.

"அடச்சே! அது ரொம்ப பழைய பிரேக்கிங் நீயூஸ்... இப்போ அந்த புது கட்சியும் ரெண்டா ஒடிஞ்சுடுத்தாம்... நாட்டு நடப்பை அப்பப்ப தெரிஞ்சுக்கணும்னா எப்பவும் ஃபோனும் கையுமா இருக்க வேண்டியிருக்கு.... உங்களை மாதிரி தத்தியா என்னாலே இருக்க முடியாது."

அடுத்த பிரேக்கிங் நீயூஸை எதிர்பார்த்தபடி தன் செல்லை பார்த்தபடி மனைவி நடக்க, பின்னால் வரும் வானங்கள் பிரேக் போட்டு நிறுத்தாமல் போய்விடுவார்களோ என்ற ஒரு பாதுகாப்பு வளையமாக நான் அவளை காபந்து செய்தபடி பின்தொடர்ந்தேன்

மேலும் 'ஃபேஸ்புக்கை பார்த்தபடி தெருவில் நடக்க வேண்டும் என்று எச்சரித்த கணவரின் மண்டையை உடைத்த மனைவி' என்ற மெய்யாலுமே ஒரு பிரேக் நியூஸ் வந்துவிடுமோ என்ற எச்சரிக்கையோடும் வழி நடந்தேன்.